இருந்தாலும் ஆயிரம் பொன்...இறந்தாலும் ஆயிரம் பொன்!



உலகம் முழுவதும் அறிந்த ஓர் இசைக் கலைஞர், மைக்கேல் ஜாக்சன். இவரைக் குறித்த அறிமுகம் தேவையில்லை. ஓவர்டோஸ் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு, 2009ம் வருடம் ஜூன் 25ம் தேதி மரணமடைந்தார். மைக்கேலின் இறுதிச்சடங்கை 250 கோடிக்கும் அதிகமானோர் தொலைக்காட்சியில் கண்டு அஞ்சலி செலுத்தினர். 
மரணத்தின்போது மைக்கேலுக்கு 500 மில்லியன் டாலர் கடன் இருந்தது. நன்கொடை, பரிசுப்பொருட்கள், ஜுவல்லரி, பர்னிச்சர், கலைப்பொருட்கள் என தாராளமாக செலவு செய்திருக்கிறார். கிட்டத் தட்ட 65 பேருக்கு அவர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது. விஷயம் இதுவல்ல.

மரணத்துக்குப் பிறகு சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியிருக்கிறார் மைக்கேல்!உலகளவில் மரணத்துக்குப் பிறகு அதிகமான வருமானம் ஈட்டிய கலைஞர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் மைக்கேல் ஜாக்சன். மைக்கேல் மரணமடைந்த தேதியிலியிருந்து, 2009ம் வருடம் முடியும் வரையிலான ஆறு மாதங்களில் அமெரிக்காவில் மட்டுமே மைக்கேலின் ஆல்பங்கள் 1.61 கோடிப் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. உலகம் முழுவதும் 3.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகின.

இந்த ஆறு மாதங்களில் மட்டும் 90 மில்லியன் டாலரை சம்பாதித்திருக்கிறார். மட்டுமல்ல, 2009ல் உலகளவில் அதிகமாக விற்பனையான இசை ஆல்பங்களும் மைக்கேலுடையதுதான்.
தவிர, ஒரே வாரத்தில் அவருடைய இசை ஆல்பங்கள் பத்து லட்சம் முறை டவுன்லோடு செய்யப்பட்டன. இந்தச் சாதனைகள் எதுவும் இப்போது உயிரோடிருக்கும் கலைஞர்களால் கூட முறியடிக்கப்படவில்லை. 2010ம் வருடம் ‘சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மைக்கேல் ஜாக்சன் எஸ்டேட்டின் மேலாளர்களுடன் ஓர் ஒப்பந்தமிட்டது.

அதாவது, 2017ம் வருடம் வரை மைக்கேலின் ஆல்பங்களை ‘சோனி’ நிறுவனம்தான் விநியோகிக்கும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். இசை வரலாற்றில் ஓர் இசைக் கலைஞருடன் ஒரு நிறுவனம் செய்துகொண்ட மிகப்பெரிய ஒப்பந்தம் இதுதான். ஆம்; இதற்காக 250 மில்லியன் டாலர்களைக் கொடுத்தது, ‘சோனி’. இன்றைய மதிப்பில் 350 மில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் 2922 கோடி ரூபாய்!

இதுபோக மைக்கேலின் 50 சதவீத இசைப் படைப்புகளை 5 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ‘சோனி’ கையகப்படுத்தியிருக்கிறது. இவ்வளவு தொகை கொடுத்து ஓர் இசைக் கலைஞரின் படைப்புகளைக் கையகப்படுத்துவதும் இதுவே முதல் முறை. தவிர, இசை ஆல்பங்கள், டவுன்லோடுகள் உட்பட மைக்கேல் சம்பந்தப்பட்ட படைப்புகளின் விற்பனை மூலமாக 2010ம் வருடம் மைக்கேல் ஈட்டிய வருமானம், 275 மில்லியன் டாலர்.

2011ல்    170 மில்லியன் டாலரும்
2012ல்    145 மில்லியன் டாலரும்
2013ல்    160 மில்லியன் டாலரும்
2014ல்    140 மில்லியன் டாலரும்
2015ல்    115 மில்லியன் டாலரும்
 சம்பாதித்திருக்கிறார் மைக்கேல்.

2016ம் வருடத்தில் மட்டும் 825 மில்லியன் டாலரை ஈட்டியிருக்கிறார் மைக்கேல். இந்திய மதிப்பில் சுமார் 6,888 கோடி ரூபாய். மக்கள் மத்தியில் பிரபல கலைஞனாக இருக்கும் ஒருவர், ஒரு வருடத்தில் ஈட்டிய அதிக வருமானம் இதுதான். இதில் உயிரோடிக்கும் மற்றும் இறந்தபோன கலைஞர்களும் அடக்கம்.

2017ல்    75 மில்லியன் டாலரும்
2018ல்    400 மில்லியன் டாலரும்
2019ல்    60 மில்லியன் டாலரும்
2020ல்    48 மில்லியன் டாலரும்
2021ல்    75 மில்லியன் டாலரும்
2022ல்    75 மில்லியன் டாலரும்
2023ல்    115 மில்லியன் டாலரும்

சம்பாதித்திருக்கிறார் மைக்கேல். 2009, 2012, 2021, 2022 ஆகிய நான்கு வருடங்களைத் தவிர்த்து மற்ற வருடங்களில் இறந்த பின் அதிக வருமானம் ஈட்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் மைக்கேல்.இதுபோக மைக்கேலின் வாழ்க்கையைத் தழுவிய ஹாலிவுட் திரைப்படம் அடுத்த வருடத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்துக்காகவும் கணிசமான ஒரு தொகை கிடைத்திருக்கும்.

மைக்கேல் இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தாலும் அவரது படைப்புகள் வருமானத்தை ஈட்டிக்கொண்டே இருக்கின்றன. இது இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும்.
இந்த வருமானத்தையும், மைக்கேலின் சொத்துகளையும் ‘எஸ்டேட் ஆஃப் மைக்கேல் ஜாக்சன்’  எனும் சட்டபூர்வமான நிறுவனம் நிர்வகித்துவருகிறது.

த.சக்திவேல்