எம்ப்ராய்டரியில் குர்ஆன்!



குர்ஆன் முழுவதையும் துணிகளில் எம்ப்ராய்டரி செய்த சகோதரிகள், மதீனாவிலுள்ள நூலகத்திற்கு அதை பரிசளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
பெங்களூரு சிவாஜி நகரைச் சேர்ந்த சகோதரிகள் சுரையா குரேஷி மற்றும் பீபி தபஸ்ஸும் ஆகியோர்தான் திருக்குர்ஆனை முழுவதுமாக வெல்வெட் துணியில் எம்ப்ராய்டரி செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.ஆலிம்-இ-தீன் (மத அறிஞர்) வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்ட 604 பக்கங்கள் கொண்ட திருக்குர்ஆன், இந்த இரு சகோதரிகளின் சிறந்த கைவினைத்திறனின் அடையாளமாக அனைவரையும் கவர்ந்து வருகிறது.

சகோதரிகளில் இளையவரான பீபி தபஸ்ஸும், சிறுவயதிலிருந்தே எம்ப்ராய்டரி கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் அவர் குர்ஆனின் சிறிய வசனங்களை மட்டுமே எம்ப்ராய்டரி செய்தார். ஆனால், ஒரு நாள் முழு குர்ஆனையும் எம்ப்ராய்டரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, அவரது மூத்த சகோதரி சுரையா குரேஷியுடன் கலந்தாலோசித்து, இரு சகோதரிகளும் 2019ல் குர்ஆனை எம்ப்ராய்டரி செய்யும் வேலையை தீவிரமாகத் தொடங்கினர்.  

தபஸ்ஸும் துணியில் பென்சிலைப் பயன்படுத்தி குர்ஆன் வசனங்களை எழுதிய நிலையில் சகோதரிகள் இருவரும் சேர்ந்து எம்ப்ராய்டரி செய்யத் தொடங்கினர்.

ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணி நேரமாவது இந்தப் பணிக்காகச் செலவிட்டனர். 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட எம்ப்ராய்டரி பணிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையாக நிறைவடைந்தது. ஐந்தாண்டுகள் தொடர்ந்து கடின உழைப்பால் இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சுரையா குரேஷி மற்றும் பீபி தபஸ்ஸும் ஆகியோர் உலகிலேயே முதன்முறையாக முழு குர்ஆனையும் எம்ப்ராய்டரி மூலம் நெய்த பெருமைக்குரியவர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர். தலா ஆறு அத்தியாயங்கள் என மொத்தம் 30 அத்தியாயங்கள் ஐந்து தொகுதிகளாக குர்ஆனில்  பின்னப்பட்டுள்ளன. மேலும், முழு குர்ஆனும் மிக நுணுக்கமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.

‘‘எங்கள் மகள்கள் இவ்வளவு சாதித்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம். இந்த குர்ஆனின் ஐந்து தொகுதிகள் பக்தி மற்றும் கலைத்திறன் ஆகியவற்றின் அழகிய கலவையின் சான்றாக நம் முன் உள்ளன. இவர்களது உழைப்புக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் கூலி கொடுக்க முடியாது...’’ என நெகிழ்கிறார்கள் இச்சகோதரிகளின் பெற்றோர். 

‘‘இறைவன் அருளால் இது நிகழ்ந்தது...’’ என்றபடி பேசத் தொடங்கினார் சுரையா குரேஷி.‘‘எம்ப்ராய்டரி வேலைகளின் துல்லியத்தை உறுதி செய்ய ஒவ்வொரு பக்க வேலை முடிந்ததும் அதை மத அறிஞர்களிடம் காட்டி சரிபார்த்தோம். இப்பணியை அன்றாட வாழ்க்கையோடு சேர்த்து மிகவும் சிரத்தையுடன் செய்துள்ளோம்.

அல்லாஹ்வின் கிருபையினாலும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவினாலும்தான் இந்தப் புனிதப் பணியை முடிக்க முடிந்தது...’’ என்ற சுரையா குரேஷியை ஆமோதித்தபடியே பேச ஆரம்பித்தார் பீபி தபஸ்ஸும்.

‘‘குர்ஆன் முழுவதையும் எம்ப்ராய்டரி மூலம் தயார் செய்ய எனக்கு வாய்ப்பளித்த சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் விருப்பமான நகரமான மதீனாவில் உள்ள நூலகத்திற்கு எம்ப்ராய்டரி செய்யப்பட்ட இந்த புனித குர்ஆனை பரிசளிக்க விரும்புகிறோம்...’’ என்றார்.

பட்டு