சரித்திரத்தில் முதல் முறையாக...பெண்ணாக இருந்து ஆணாக மாறிய IRS!



பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற்றத்தை மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்திய குடிமைப் பணி சேவை வரலாற்றில் முதல் முறையாக இது நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யார் இந்த ஐஆர்எஸ் அதிகாரி?

ஹைதராபாத் நகரில் இணை ஆணையர் பதவி வகித்து வரும் 35 வயதான அனுகதிர் சூர்யாதான் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய ஐஆர்எஸ் அதிகாரி. இவர் முன்பு அனுசுயா என்ற பெயரில் பெண்ணாக இருந்தவர்.

எம்ஐடி எனப்படும் சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர் அனுசுயா.
தொடர்ந்து போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனப் பல்கலைக்கழகத்தில் சைபர் லா மற்றும் சைபர் தடயவியல் துறையில் பிஜி டிப்ளமோ முடித்தார்.

கடந்த 2013ம் ஆண்டில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்று சென்னையின் உதவி ஆணையராக பணியைத் தொடங்கினார். 2018ல் துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றார். தற்போது ஹைதராபாத் நகரில் இணை ஆணையராக இருக்கிறார்.இவர் சமீபத்தில் தன்னுடைய பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்றிக்கொண்டார். 
அனுசுயா என்ற தன் பெயரை அனுகதிர் சூர்யா என்றும் மாற்றிக்கொண்டார். எனவே, தான் பணியாற்றும் அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களிலும் தன்னுடைய பெயரை அனுகதிர் சூர்யா என மாற்ற வேண்டும் என்று நிதியமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

தனது பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள விரும்பிய அனுகதிர் சூர்யாவின் கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்றிருக்கிறது. இது தொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவில், “அனுசுயாவின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டது. இனி அனைத்து அதிகாரபூர்வ பதிவுகளிலும் ‘திரு.எம். அனுகதிர் சூர்யா’ என அவர் அறியப்படுவார்...” என்று மத்திய வருவாய்த் துறை தெரிவித்துள்ளது.கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் NALSA வழக்கில் மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்தது. அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அவர்களுக்கும் பொருந்தும் என தெரிவித்தது. பாலின அடையாளம் என்பது தனி நபரின் விருப்பம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இந்தச் சூழலில்தான் அனுகதிர் சூர்யாவின் பாலின மாற்றத்தை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.நிதியமைச்சகம் தனது ஊழியர் ஒருவரின் பெயரையும் பாலினத்தையும் அதிகாரபூர்வமாக மாற்றியிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள்.

சர்வதேச அளவில் மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்த கண்ணோட்டங்கள் வெவ்வேறாக இருக்கும் நிலையில், இந்திய அரசு பாலின மாற்றத்தை இயல்பாக எடுத்துக்கொண்டிருப்பதன் விளைவே, அனுசுயாவுக்கு அனுகதிர் சூர்யாவாக கிடைத்த அங்கீகாரம் என பலர் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

இன்றைக்கும் மேலை நாடுகளில் மாற்றுப் பாலினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டு அரசாங்கம் ஒருபடி மேலே சென்று மாற்றுப் பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அடையாளப்படுத்தியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், பெண்ணிலிருந்து ஆணாக மாறிய தனது ஊழியரை இந்திய ஒன்றிய அரசு அங்கீகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஜான்சி