16 வயது கால்பந்து சுனாமி!



உலகப்புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரரான ரொனால்டோ, தனது 16வது வயதில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ‘ஸ்போர்ட்டிங் சிபி’ எனும் அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தார். இன்னொரு கால்பந்து ஜாம்பவானான மெஸ்ஸி, தனது 16வது வயதில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ‘பார்சிலோனா’ அணியில் விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால், 16 வயதான லாமின் யமால் ஸ்பெயினின் தேசிய அணிக்காக விளையாடுகிறார்.

மட்டுமல்ல, உலகக்கோப்பைக்கு அடுத்து முக்கிய கால்பந்து போட்டியான ‘யூரோ’வில் பங்கேற்று, ஸ்பெயின் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றவரே லாமின்தான். இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையையும் கைப் பற்றிவிட்டது ஸ்பெயின்.‘யூரோ 2024’ ன் இளம் தொடர் நாயகன் விருதையும் தன்வசமாக்கிவிட்டார் லாமின்.

ஆம்; சமீபத்தில் நடந்த ‘யூரோ 2024’ல், ஃபிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கோல் அடித்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் லாமின்.
இதன் மூலம் ‘யூரோ’ போட்டியில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார் லாமின். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் லாமின், இணையம் வழியாக பாடங்களைக் கவனித்துக் கொண்டு, வீட்டுப் பாடங்களைச் செய்துவிட்டு, கால்பந்து பயிற்சியை மேற்கொண்டு, ‘யூரோ 2024’ல் விளையாடுவதுதான் இதில் ஹைலைட்.

யார் இந்த லாமின் யமால்?

ஸ்பெயினில் உள்ள Esplugues de Llobregat எனும் இடத்தில் ஜூலை 13,2007ல் பிறந்தார் லாமின் யமால். இவருடைய அம்மா ஷீலா எபானா ஈக்வடாரியல் கினியாவைச் சேர்ந்தவர்; ஒரு ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். லாமினின் அப்பா மோனீர் மொராக்கோவில் பிறந்தவர்; பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

லாமின் பிறந்து 6 மாதங்கள் ஆனபோது, அவரது பெற்றோருக்கு லாட்டரியில் ஒரு பரிசு விழுந்தது. அப்போது பிரபல பார்சிலோனா அணியும், யுனிசெஃப் அமைப்பும் இணைந்து ஒரு நாட்காட்டியை வடிவமைத்தது. அந்த நாட்காட்டிக்காக குழந்தைகளுடன் சேர்ந்து கால்பந்து வீரர்கள் போஸ் கொடுக்க வேண்டும். இதற்காக லாட்டரி பரிசு மூலம் குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

லாமினின் பெற்றோருக்குப் பரிசு விழுந்ததால் லாமினும் தேர்வானார். ஆறு வயதான லாமினுடன் சேர்ந்து போஸ் கொடுத்தவர், மெஸ்ஸி. அப்போது மெஸ்ஸியைப் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அதனால் அந்தப் புகைப்படம் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. இப்போது குழந்தை லாமினுடன் சேர்ந்து மெஸ்ஸி இருக்கும் அந்தப் புகைப்படம் செம வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மெஸ்ஸி தொட்டதால்தான் லாமின் கால்பந்து வீரனாகிவிட்டான் என்றும் சிலர் சொல்லி வருகின்றனர். லாமினின் கால்பந்து வாழ்க்கை அவர் பிறந்த ஆறு மாதத்திலேயே ஆரம்பித்துவிட்டது. லாமினுக்கு மூன்று வயதாக இருந்தபோதே அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். கிரானோலர்ஸ் எனும் இடத்துக்கு அம்மாவுடன் குடிபெயர்ந்தார் லாமின்.

அங்கிருந்த உள்ளூர் கிளப் அணியில் விளையாட ஆரம்பித்தார். அப்போது அவரது வயது நான்கு. லாமினின் தந்தை ரோகாஃபாண்டா எனும் இடத்தில் வசித்துவந்தார். இங்கேதான் லாமின் வளர்ந்தார். சில நாட்கள் அம்மாவுடனும், சில நாட்கள் அப்பாவுடனும் இருக்க வேண்டிய நிலை.

அதனால் கிரானோலர்ஸ் மற்றும் ரோகாஃபாண்டாவில் இருந்த உள்ளூர் கிளப் அணிகளில் விளையாடி கால்பந்து விளையாட்டைக் கற்றுக் கொண்டார். ரோகாஃபாண்டாவைப் பற்றி ஸ்பெயின் மக்களுக்கே பெரிதாகத் தெரியாது. இன்று லாமினினால்தான் இப்படியொரு இடம் இருக்கிறது என்று ஸ்பெயின் மக்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற நாட்டினருக்கும் தெரிய வந்திருக்கிறது.

ஏழு வயதிலிருந்து ‘பார்சிலோனா’ கிளப் அணியில் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். தினமும் பள்ளி நேரம்போக ஆறு மணி நேரம் பயிற்சி செய்வார் லாமின். பயிற்சிதான் அவரது விளையாட்டுத் திறமைக்கு அச்சாணி. 10 வயதிலேயே தேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரனைப் போல விளையாட ஆரம்பித்தார். லாமினின் திறமையைப் பார்த்து ஸ்பெயினின் 15 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் கிடைத்தது.

2023ம் வருடம் ஸ்பெயினின் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்தார். இதே வருடம் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மொத்தமாக 4 கோல்கள் அடித்து கவனம் ஈர்த்தார். குறிப்பாக அரையிறுதிக்கு ஸ்பெயின் அணி செல்லக் காரணமாக இருந்தார் லாமின்.

கடந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதி, பிறந்து 16 வருடங்கள் மற்றும் 50 நாட்கள் ஆன லாமின், ஸ்பெயினின் தேசிய கால்பந்து அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.
கடந்த வாரம் நடந்து முடிந்த ‘யூரோ 2024’ போட்டியில் பங்குபெறுவதற்காக தகுதிச்சுற்றுகள் நடந்தன. இந்தத் தகுதிச்சுற்றுகளில் ஜார்ஜியா மற்றும் சைப்ரஸை எதிர்த்து ஆடியபோது, ஸ்பெயின் அணியில் இடம் பிடித்தார் லாமின்.

அந்தப் போட்டியில் ஒரு கோல் அடுத்தார். அவர் கோல் அடிக்கும் போது அவரது வயது 16 வருடங்கள் 57 நாட்கள். ஸ்பெயின் அணிக்காக கோல் அடித்த மிக இளம் வீரர் என்ற சாதனையைத் தன்வசமாக்கினார் லாமின். தகுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்பெயின் அணி ‘யூரோ 2024’க்கு தேர்வானது; லாமினும் அணியில் இடம்பிடித்தார். இதற்குப் பிறகு நடந்தது வரலாற்றின் ஆரம்பம்தான். ஆம்; கடந்த வாரம்தான் 17 வயதுக்குள் நுழைந்திருக்கிறார் லாமின் யமால்.  

த.சக்திவேல்