50 நாட்களில் ஆட்சி மாற்றம்!



ஓர் இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஈரானின் புதிய அதிபராகிறார்

ஈரான் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மசூத் பெசெஷ்கியன். சீர்திருத்தவாதியான இவர் ஈரானில் என்ன மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார் என்பதுதான் இப்போது பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஹைலைட் விவாதம். ஈரானின் இந்தப் புதிய ஆட்சி மாற்றம் என்பது 50 நாட்களில் நடந்தேறி இருக்கிறது. ஆம். வெறும் ஐம்பதே நாட்களில்..! கடந்த மே 19ம் தேதி ஈரானின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் அகால மரணமடைந்தார்.

இதனால், ஈரானின் துணை அதிபர் முஹமத் மொக்பர் தற்காலிக அதிபராக செயல்பட்டார். உண்மையில், ரைசியின் பதவிக்காலம் அடுத்த 2025ம் ஆண்டு வரை உள்ளது. அவர் இறந்ததால் அவரின் கட்சியைச் சேர்ந்த யாராவது அதிபராக வரக்கூடும் என்றே பலரும் நினைத்திருந்தனர். ஆனால், ஈரானில் அதிபருக்கு மேலான சுப்ரீம் தலைவர் என்ற பதவி உள்ளது. இது ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிகாரம் படைத்த பதவி. இந்த சுப்ரீம் தலைவரின் முடிவே எல்லாவற்றிலும் இறுதியானது.

இதில் அதிபரையும் அவரின் அமைச்சரவையையும் நீக்கும் அதிகாரம்கூட இருக்கிறது. இந்த சுப்ரீம் தலைவர் பதவியில் 35 ஆண்டுகளாக இருப்பவர் அலி கமேனி. இவரைக் கடந்து எதுவும் செய்துவிட முடியாது. இந்நிலையில் ஈரானில் புதிய அதிபர் பதவிக்கான தேர்தல் அரசியலமைப்பு சட்டப்படி அறிவிக்கப்பட்டது. இந்த அதிபர் தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அங்குள்ள கார்டியன் கவுன்சிலே அங்கீகரிக்கும். அப்படி அங்கீகரிக்கப்பட்டவரே தேர்தலில் போட்டியிடவும் முடியும்.

இந்தக் கவுன்சில் ஆறு மதகுருமார்கள், ஆறு வழக்கறிஞர்கள் கொண்ட குழுவால் ஆனது. இந்த ஆறு மதகுருமார்களையும் தேர்ந்தெடுப்பவர் சுப்ரீம் தலைவரே!அதேபோல் ஆறு வழக்கறிஞர்களையும் சுப்ரீம் தலைவரே வழிமொழிவார். 


பின்னர் அவர்களை நீதித்துறைத் தலைவர் நியமனம் செய்து, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவர். இப்படியாகவே சீர்திருத்தவாதியான மசூத் பெசெஷ்கியனும், பழமைவாத கொள்கை கொண்டவரான சயீத் ஜலிலியும் அந்த கார்டியன் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டனர்.

கடந்த ஜூன் 28ம் தேதி முதல் சுற்றும், ஜூலை 5ம் தேதி இரண்டாம் சுற்றுமாகத் தேர்தல்கள் நடந்தன.இதில்தான் 55 சதவீத வாக்குகளைப் பெற்று டாக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றிபெற்றுள்ளார். இதனை கார்டியன் கவுன்சில் உள்பட யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் சமூக சுதந்திரம் மற்றும் மேற்கு நாடுகளுடன் சிறந்த உறவுகளுக்காக ஏங்கும் ஈரானியர்களிடையே கொஞ்சம் நம்பிக்கை துளிர்த்துள்ளது. சிலர் பெரிய கொள்கை மாற்றங்களையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

யார் இந்த மசூத் பெசெஷ்கியன்..?

ஈரானின் மேற்கு அஜர்பைஜான் மாகாணத்திலுள்ள மகாபாத் நகரில் 1954ம் ஆண்டு பிறந்தவர் மசூத் பெசெஷ்கியன். ஆரம்பத்தில் டிப்ளமோ முடித்தவருக்கு பின்னர் மருத்துவத்தின் மீது ஆர்வம் வந்தது. ஜெனரல் மெடிசின் படித்தார். தொடர்ந்து 1985ல் பொது மருத்துவர் பயிற்சியை முடித்தார். இதற்கிடையே 1980ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை நடந்த ஈரான்-ஈராக் போரின்போது களத்தில் ஒரு மருத்துவராகவும் போர் வீரராகவும் இருந்து செயல்பட்டார்.

பிறகு, மருத்துவக் கல்லூரியில் உடல் இயங்கியல் துறை ஆசிரியராகப் பணியாற்றினார். இதனையடுத்து தப்ரிஸ் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் அறுவை சிகிச்சையை சிறப்பு படிப்பாக எடுத்து படித்தார்.தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள ஈரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இதய அறுவை சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவர் பட்டத்தைப் பெற்றார். பின்னர் சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் எனப் பெயரெடுத்தார்.

இந்நிலையில்தான் 1997ல் முஹமத் கடாமி ஆட்சிக் காலத்தில் மசூத்தின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அவரின் ஆட்சியில் சுகாதாரத் துறை துணை அமைச்சராக ஆனார். பின்னர் 2001ல் சுகாதாரத் துறை அமைச்சரானார். நான்கு ஆண்டுகள் இந்தப் பதவியில் இருந்தார்.இப்படியாக தப்ரிஸ் தொகுதியில் இருந்து ஐந்துமுறை ஈரான் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே 2016ல் இருந்து 2020 வரை ஈரான் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராகவும் பணியாற்றினார்.

இவர் மனைவியும் ஒரு மகப்பேறு மருத்துவர்தான். ஆனால், அவர் 1993ல் ஒரு கார் விபத்தில் இறந்துபோனார். அப்போது அந்த விபத்தில் இவர்களின் கடைசி மகனும் இறந்தார்.
பின்னர் மசூத் மறுதிருமணம் எதுவும் செய்துகொள்ளவில்லை.  தன்னுடைய மற்ற இரு மகன்களையும், ஒரு மகளையும் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். தற்போது மகள் ஜஹ்ரா வேதியியலில் மாஸ்டர் டிகிரி முடித்துவிட்டு அரசியல் ஆலோசகராக இருக்கிறார்.  

   தற்போது மசூத் பெசெஷ்கியனுக்கு 69 வயதாகிறது. அவர் ஈரானிய அரசியல் அமைப்பு முறையை பலமுறை விமர்சித்துள்ளார். இருந்தும் அவர் சீர்திருத்தவாதி அல்ல, கொள்கைவாதியே எனச் சிலர் அடையாளம் காட்டுகின்றனர்.அதற்குக் காரணம் அவர் ராணுவத்தின் கீழ் துணை அமைப்பாக செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை எப்போதும் ஆதரித்தே வந்துள்ளார். தவிர, அலி கமெனேய்யையும் எதிர்த்ததில்லை. இதனாலேயே அவர் கொள்கை சார்புடையவர் எனக் குறிப்பிடுகின்றனர் சிலர்.  

இருந்தும் சீர்திருத்தவாதி என அழைக்கப்படும் மசூத்  முதல்முறையாக அதிபராகி இருக்கிறார். இந்நிலையில் அவர் ஆட்சியில் பொருளாதாரம் மேம்படுமா? அணுசக்தியில் ஈரான் நிலைப்பாடு எப்படி இருக்கும்? வெளியுறவுக் கொள்கையில் உள்ள பதற்றங்களைக் குறைப்பாரா? ஹிஜாப் உள்ளிட்ட சமூகக் கட்டுப்பாடுகள் மாறுமா?

பெட்ேரால் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா? எனப் பல்வேறு கேள்விகள் அனைவரின் மனதிலும் இருக்கின்றன. இதுமட்டுமல்ல. காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர், லெபனானில் ஹிஸ்புல்லா பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் பொறுப்பேற்கிறார் மசூத். ஆனாலும், சுப்ரீம் தலைவரைத் தாண்டி அவரால் எதுவும் செய்துவிடமுடியாது. அவரின் கீழ் செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையைக்கூட அதிபர் மசூத்தால் கட்டுப்படுத்த முடியாது.

இதுதவிர உளவுத்துறை, வெளியுறவு, உள்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட அமைச்சர் பதவிகளுக்கு சுப்ரீம் தலைவரின் ஒப்புதலை மசூத் பெற்றாக வேண்டும். இதில் மசூத் தனக்கு நெருக்கமானவராகவும் அதேநேரத்தில் சுப்ரீம் தலைவர் அங்கீகரிப்பவராகவும் உள்ள நபர்களைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தை சுமுகமாக நடத்திச் செல்ல முடியும். இவை மட்டுமல்ல. இன்னும் நிறைய விஷயங்கள் மசூத் முன் சவால்களாக எழுந்து நிற்கின்றன.   

ஆனால், டாக்டர் மசூத் பெசெஷ்கியன் வெற்றி பெற்றவுடன் ‘நாட்டில் ஒரு புதிய அத்தியாயம் ஏற்படும்’ என்று குறிப்பிட்டார். அது என்ன என்பது போகப்போகத்தான் தெரியும்.
அவரால் ஈரான் முன்னேற்றத்துக்கான ஓர் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டமுடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பேராச்சி கண்ணன்