தனுஷ் 50!



இது ரசிகர்களுக்கான மாஸ் ட்ரீட்!

தனுஷ், சந்தீப் கிஷான், ஜெயராம் காளிதாஸ் மூவருடன் துஷாரா விஜயன் நால்வரும் ஒன்றிணைந்து நிற்கும் போஸ்டர் வெளியாகி சமீபத்தில் இணையத்தைக் கலக்கி வருகிறது.
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் தனுஷ் இயக்கத்தில் ‘ராயன்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உடன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி வரும் நிலையில் படம் குறித்த பல கேள்விகள் மனதில் எழ முகம் நிறைய சிரிப்புடன் வந்தமர்ந்தார் ஜெயராம் காளிதாஸ்.

‘ராயன்’... எப்படி வந்திருக்கு? நீங்கள் ‘ராயன்’ படத்திற்குள் வந்தது எப்படி?

‘போர்’ படம் முடிஞ்ச பிறகு தனுஷ் சார் கிட்டருந்து ஒரு கால். அவர் அழைப்பு வந்த உடனேயே செம ஹேப்பி. அவர் படம்னாலே நான் ஓகே சொல்லியிருப்பேன். ஆனாலும் அவர் சும்மா ‘என் இயக்கம், என் கதை, நடிக்கிறியா’ன்னு எல்லாம் கேட்கலை. கதை முழுக்கச் சொல்லி, என்னுடைய கேரக்டரை விளக்கிச் சொல்லி கடைசியா ‘நடிக்க சம்மதமா’ன்னு கேட்டார். அந்த தொழில் பக்திதான் அவருடைய இந்த வளர்ச்சிக்கு காரணம்.

‘என் படம் நடிக்கறியா’ன்னு கேட்டாலே நான் ஓகே சொல்லியிருப்பேன். ஆனால், அவருடய ப்ரொஃபஷனல் கொள்கை சர்ப்ரைஸா இருந்துச்சு. சாருடைய 50வது படம், அவரே இயக்கம்... டபுள் டிரீட். மாஸ் கிளாசா வந்திருக்கு. இயக்குநர் தனுஷ் சார் கூட வேலை செய்கிற வாய்ப்புகிடைச்சிருக்கு.

இயக்குநர் தனுஷ், நடிகர் தனுஷ்... யாரிடம் அதிக சவால்களை சந்தித்தீர்கள்?

இயக்குநர் தனுஷ் சாரை பயங்கரமா ரசிச்சேன். அவருடைய கிரியேட்டிவ், வேலையிலே இருக்கும் பக்தி, சின்சியாரிட்டி... இதெல்லாம் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.
எனக்கு ஷாட் முடிஞ்சா கூட நான் கேரவனுக்குப் போகாம கூடவே இருந்து அவர் வேலை செய்வதைப் பார்ப்பேன். காசே வாங்காம அசிஸ்டெண்ட் டைரக்டரா வேலை செய்து, ஃபீஸே இல்லாம தொழில் கத்துக்கிட்டேன்னு சொன்னாலும் மிகையாகாது.

மனுஷன் பம்பரமா சுத்துவார். மேக்கப் போட்டு நேரத்துக்கு சரியா வந்திடுவார். ஒரு பக்கம் ஷாட்டையும் கவனிக்கணும், தானும் முன்னாடியே ரெடியாகி நிற்கணும். உடன் மானிட்டர் பார்க்கறது, ஆங்கிள் செட் பண்றது, மத்தவங்க மேக்கப், காஸ்டியூம் துவங்கி எதிலே கரெக்‌ஷன்னாலும் அவரே முன்வந்து சொல்லி மாத்த சொல்வது இதெல்லாம் பெரிய விஷயம். இன்னும் அவர் கிட்ட கத்துக்க அவ்ளோ பாடம் இருக்கு.

படத்தின் கதை என்ன?

சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்க. ஆனாலும் ஒரு ஒன் லைன் சொல்றேன். தனுஷ் சார், சந்தீப், நான் எங்களுக்கு ஒரு அன்பான தங்கச்சியா துஷாரா. இந்தக் குடும்பத்துக்கு ஒரு பிரச்னை வருது. 

என்ன பிரச்னை, கிளைமாக்ஸ் என்ன என்பதுதான் மீதிக் கதை. பொதுவா வித்யாசமான கதை, இப்படி ஒரு கதையை பார்த்திருக்கவே மாட்டீங்க... அப்படி எல்லாம் சொல்லவே மாட்டோம். இந்தப் படம் தனுஷ் சார் ரசிகர்களுக்கான மாஸ் படம். எதார்த்தமான நடிப்பு, லொகேஷன், எளிமையான வாழ்க்கை... அதைச் சுற்றி நடக்கற மாஸ் சம்பவங்கள்... இப்படித்தான் கதை நகரும்.

எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்... படம் முழுக்க நடிப்பு ஜாம்பவான்கள்?

எப்படி தனுஷ் சார்கிட்ட கத்துக்க இன்னும் ஏராளமான பாடம் இருக்கோ, அப்படித்தான் இந்த எக்ஸ்பீரியன்ஸ்டு கலைஞர்கள் கிட்டவும் அவ்ளோ இருக்கு. இதிலே இவர்களுக்கு இடையிலே நான் நிற்கும்போது ஏதாவது ஹைலைட்டா செய்தே ஆகணும் என்கிற கட்டாயம், ஒரு உந்து சக்தி படம் முழுக்க இருந்திட்டே இருந்துச்சு. ஸ்க்ரீன்ல நாம இருக்கோம் என்கிறதாவது தெரியணும்னா ‘டேய் காளிதாஸா... எதாவது பண்ணுடா’ன்னு ஒரு குரல் கேட்டுட்டே இருந்துச்சு.

நிஜமாகவே இந்தப் படம் எனக்கு பெரிய வரம். என்னுடைய கரியர் ஆரம்பிச்சதிலே இருந்தே கமல் சார், விஜய் சேதுபதி சார், இப்போ தனுஷ் சார், எஸ்.ஜே.சூர்யா சார் இப்படி அனுபவம் வாய்ந்த பலர் கூட பயணிச்சிட்டே இருக்கேன். இதுதான் என்னை நானே மெருகேத்திக்கறதுக்கான பாதையா பார்க்கறேன்.

துஷாரா, அபர்ணா பாலமுரளி, சந்தீப்... மூவரையும் விட்டுட்டீங்களே! மூணு பேருக்கும் ஷாட் ரெடி அப்படின்னு சொன்ன உடனே ஒரு ஸ்பிலிட் பெர்சனாலிட்டி மாதிரி ஆகிடுவாங்க. நாங்க நாலு பேரும் ஒரே ஷாட்டில் இருக்கும்போதெல்லாம் அவ்ளோ சவாலா இருந்துச்சு.

இசைப்புயலின் இசையில் நீங்கள்..?

கனவு..! இதெல்லாம் நடக்கணும்னு அப்படி ஒரு கனவு இருந்துச்சு. ரெண்டு பாடல்கள் வேற ரிலீஸ் ஆகி செம ஹிட்டாகிடுச்சு. உண்மையாகவே எனக்குப் பிடிச்ச, இப்போ ரிலீஸ் ஆன பாடல்களைக் காட்டிலும் இன்னும் சூப்பர் பாடல்கள் எல்லாம் இருக்கு. ஆடியோ கேட்டிருப்பீங்களே!கானா பாடல்கள் நிறைய இருக்கு. ரஹ்மான் சார் ஸ்டைல்ல இது புதுசு. நானும் காத்திருக்கேன். சாருடைய பேக்ரவுண்ட் ஸ்கோரும் படத்துக்கு செம பிளஸ்.  

படத்தின் விஷுவலும் அவ்ளோ நல்லா வந்திருக்கு. ஓம் பிரகாஷ் சார்தான் படத்துக்கு சினிமாட்டோகிராபி. தனுஷ் சார் கூடவே ‘திருச்சிற்றம்பலம்’, ‘மாரி 2’, ‘நானே வருவேன்’... இப்படி நான்கைந்து படங்கள் சேர்ந்து வேலை செய்திருக்கார். இந்தப் படத்திலே வட சென்னை பின்னணியை எதார்த்தமா காண்பிச்சிருக்கார். தமிழ் சினிமாவிலே பெஸ்ட் தயாரிப்புன்னா அது ‘சன் பிக்சர்ஸ்’தான்.

அப்பா ஜெயராம் என்ன அட்வைஸ் கொடுத்திருக்கார்..? வீட்டுக்குள்ளேயே கடுமையான போட்டி நிலவுகிறது போலிருக்கே..?

அப்பா லெஜெண்ட். அவர் வழியிலேதான் நானும் நடிக்கிறேன். போட்டியாக எல்லாம் பார்க்கலை. ஆனால், இப்பவும் அவரால் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ மாதிரியான மெகா ஹிட் படங்கள் கொடுக்க முடிவது எனக்கு பெரிய எடுத்துக்காட்டாக இருக்கு.

பெரும்பாலும் மல்டி ஸ்டார் படங்கள் என்றால் ஜாலியா நடிப்பார். உண்மையாகவே அதிலே நிறைய பலன் இருக்கு. கத்துக்க வாய்ப்புகள் அதிகம். நாம மட்டும் ஹீரோவாக நடிக்கும் போது வெற்றியோ, தோல்வியோ நாமதான் பொறுப்பேற்கணும். இங்கே அப்படி இல்லை. அதே சமயம் நம்ம முழுத் திறமையைக் காட்டி நடிச்சாதான் நாம தெரிவோம். அதற்கு மெனக்கெட்டு நடிக்கறதிலேயே நாம ஹீரோவாக நடிக்கும் போது எப்படி அதை எதிர்கொள்ளணும் என்கிற பாடம் கிடைச்சிடும்.

‘ராயன்’ எப்படிப்பட்ட அனுபவம் கொடுக்கும்?

விசில் தெறிக்கும்! ‘பொல்லாதவன்’, ‘புதுப்பேட்டை’, ‘வடசென்னை’ மாதிரியான ஒரு மாஸ், கிளாஸ் கலந்து நல்ல பொழுதுபோக்குப் படமா இருக்கும். 100% தனுஷ் சார் ரசிகர்களுக்கான படம். பொறி பறக்குற காட்சிகள் எல்லாம் நிறைய படத்திலே இருக்கு.

உங்க அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க?

எனக்கு நடிப்புதான் தெரபி. அதனால் நல்ல கேரக்டர் என்ன வந்தாலும் நடிப்பேன். நடிச்சிட்டே இருக்கும்போதுதான் நான் உயிர்ப்புடன் இருக்கேன். அதிலும் அனுபவம் வாய்ந்த கலைஞர்கள்கூட அதிகமா வேலை செய்யும்போது புது எனர்ஜி கிடைக்குது. புதுசா கத்துக்க முடியுது. விஜய் சார், அஜித் சார் மாதிரி ஒரு படம் நடிச்சாலே மாஸ் ஹிட் என்கிற இடமெல்லாம் கிடைக்க நிறைய பயணிக்கணும். அதுதான் ஒரு நடிகனா அடைகிற மிகப்பெரிய வெற்றின்னு சொல்லலாம்.   

இப்போ ‘ராயன்’ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கேன். தொடர்ந்து ‘நிலா வரும் வேளை’ படத்திலே ஹீரோவாக நடிச்சிருக்கேன். பாலாஜி மோகன் சார் இயக்கத்தில் நான், துஷாரா, அமலா பால் நடிப்பில் ஒரு ரொமாண்டிக் காமெடி படம் முடிஞ்சிடுச்சு. சீக்கிரம் படத்தின் தலைப்பு, டீஸர் எல்லாம் வெளியாகும்.

ஷாலினி நியூட்டன்