2K Kids வாழ்க்கையை சொல்லியிருக்கோம்!



அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் ராகவ் மிர்தாத். இப்போது ‘பன் பட்டர் ஜாம்’ படத்தை இயக்கியுள்ளார். ‘‘கைகளாலேயே வரையப்பட்ட இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியுள்ளது. சினிமா கனவுகளோடு சென்னைக்கு வந்த மதுரைக்காரர்களில் நானும் ஒருவன்...’’ முன்னுரையுடன் ஆரம்பித்தார் ராகவ் மிர்தாத்.

அது என்ன ‘பன் பட்டர் ஜாம்’?

படத்தோட திரைக்கதைக்கு ஓர் உணவுப் பொருள் தேவைப்பட்டுச்சு. சின்ன வயசுல ஏதோ ஓர் உணவு ஞாபகத்துல ஒட்டிட்டு இருக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த உணவைப் பார்க்கும்போது பழைய நிகழ்வுகள் மனசுக்குள் வந்து போகும். கதையோட தீமை உருவகப்படுத்ததான் இந்தத் தலைப்பு.இது ஃபேமிலி என்டர்டெயினர் படம். ஒரு மனிதனின் அடையாளமே குடும்பம். அவனுடைய எண்ணங்கள், அடையாளம் எல்லாமே அப்பா, அம்மா கொடுத்தது.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளிடம் சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்கள் சாதிக்க முடியாததைப் பிள்ளைகள் சாதிக்கணும்னு நினைப்பாங்க. ஆனால், பெற்றோர்களும், பிள்ளைகளும் வடக்கு, தெற்கு என இரு துருவமாக இருப்பார்கள்.2 கே கிட்ஸ் தாட் பிராசஸுக்கும் அதற்கு முந்தைய ஜெனரேஷனுடைய தாட் பிராசஸுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தமே இருக்காது. இந்த ஜெனரேஷன் லவ், ஃபிரெண்ட்ஷிப் என வாழ்க்கையை எப்படி அப்ரோச் பண்ணுகிறார்கள் என்பதை அழகான திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.

அப்படி என்னுடைய ஹீரோ வாழ்க்கையின் ஆரம்பத்தில் என்ன புரிஞ்சுக்கிறார், வாழ்க்கையின் முடிவுல என்ன புரிதல் ஏற்படுது, வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை எப்படி கையாள்கிறார் என்பதை புது ஜானர்ல சொல்லியுள்ளோம்.

போஸ்டரில் அம்பு குத்தப்பட்ட ‘பன்’ல இரத்தத்துக்கு பதில் ஜாம் வர்ற மாதிரி சித்தரிக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையில் பலர் நம்மை காயப்படுத்தலாம். அதற்கு நாம் எப்படி எதிர்வினை ஆற்றுகிறோம் என்பதுதான் நாம் யார் என்பதை அடையாளப்படுத்தும். ஹீரோவுடைய ரியாக்‌ஷன் எப்படியிருக்கும் என்பதை போஸ்டரைப் பார்த்தால் புரியும்.

ஹீரோ யார்?

ராஜு. சின்னத்திரை பிரபலம். ஹீரோவாக அவருக்கு இதுதான் முதல் படம். சினிமா தெரிஞ்சவர் என்பதால் சுலபமா வேலை பார்க்க முடிஞ்சது. ஹியூமர் சென்ஸ் அதிகம் உள்ளவர். கதைக்கும் அப்படிப்பட்டவர்தான் தேவைப்பட்டார். கஷ்டமான காட்சியாக இருந்தாலும் நடிக்கிற மாதிரியே தெரியாது. அவ்வளவு இயல்பா பண்ணுவார்.

ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா என இரண்டு நாயகிகள். நாயகிகளுக்காக சுமார் 300 பேரிடம் ஆடிஷன் பண்ணினோம். ஆத்யாவுடைய சில வீடியோ கிளிப்பிங்ஸ் பார்த்ததுமே கேரக்டருக்கு பொருத்தமானவர்னு தெரிஞ்சது. பவ்யாவுக்கு இதுவரை பண்ணாத கேரக்டர். இரண்டு நாயகிகளும் அட்டகாசமான பெர்ஃபார்மன்ஸ் கொடுத்தாங்க.

சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி முக்கியமான ரோல் பண்ணியிருக்காங்க. இந்த மூவரும் நடிக்காத கேரக்டர் இல்லை. இதுல அவங்க நடிப்பு தனித்துவமா இருக்கும்.
சார்லி சார் புரொஃபசர் கேரக்டர்ல வர்றார். சரண்யா மேடத்திடம் கேரக்டர் பற்றி கொஞ்சம் சொன்னாலே போதும். புரிஞ்சு பண்ணுவாங்க. அனுபவசாலியாக இருந்தாலும் எல்லோருமே டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா தங்களை வெளிப்படுத்தினாங்க.

மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு முக்கியமான கேரக்டர்ல வர்றாங்க. இவர்களோடு கேமியோ ரோலில் பெரிய ஸ்டார் வர்றார். அதை சஸ்பென்ஸா வெச்சிருக்கிறோம்.
பாடல்கள் எப்படி வந்திருக்கு?

நிவாஸ் கே.பிரசன்னா மியூசிக் பண்றார். ஆள் பார்க்கும்போதுதான் பெரியவர் மாதிரி தெரிவார். மனசளவுல அவரே ஒரு 2 கே கிட்ஸ் மாதிரி. அந்தளவுக்கு யூத் வைப்ல இருப்பார்.
பர்சனலா எனக்கு அவருடைய பாடல்கள் பிடிக்கும். பிடிச்சவங்களுடன் வேலை செய்வது மனசுக்கு சந்தோஷமா இருக்கும். வேலையை கஷ்டமாக பார்க்காமல் ஈஸியா அப்ரோச் பண்ணுவார். பேசும்போதே டியூன் போட்டுக் காட்டுவார். எதுவும் மாத்தவேண்டிய அவசியமே இருக்காது. அப்படியொரு இசை ஞானம் உள்ளவர்.

பாபு குமார் கேமரா பண்ணியிருக்கிறார். ‘ஜீரோ’ பண்ணியவர். திறமையான கேமராமேன். தமிழ் சினிமா ஏன் அவரை அப்படியே விட்டு வெச்சிருக்குன்னு தெரியல. அவருடைய லைட்டிங் அற்புதமா இருக்கும். டிஐ பண்ணாமலேயே ஃபுட்டேஜ் அழகா இருந்துச்சு. பாபுவுக்கு இது பிரேக் த்ரூ படமா அமையும்.ஜான் ஆபிரகாம் எடிட் பண்றார். சென்சிடிவ்வான எடிட்டர். த்ரில்லர், ஹாரர் படங்களை ஈஸியா கட் பண்ணலாம். ஃபீல்குட் படங்கள், காமெடி படங்களை கட் பண்ண தனி திறமை வேணும். இதுல உணர்வுகளை அழகா தொகுத்து பிரமிக்க வெச்சார்.

ஆர்ட் டைரக்டர் சசிகுமார் ஒர்க்கும் கவனிக்க வைக்கும். இதுல ஒர்க் பண்ணின டெக்னீஷியன்களை என்னுடைய முதல் படத்துல கொண்டு வரணும்னு நெனைசேன். அது நடக்கல. இதுல எனக்கு பிடிச்ச டெக்னீஷியன்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி.தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியம் சார் சினிமாவை நேர்மையா நேசிப்பவர். கதைக்கு என்ன தேவையோ அதை சமரசம் இல்லாமல் செலவு செய்தார்.

படத்தோட போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். அதற்கு காரணம் தயாரிப்பாளர். இது யூனிக்கான கதை என்பதால் போஸ்டரையும் ஓவியமா வரைஞ்சு யூனிக்கா காட்டணும்னு நெனைச்சார்.
எங்க ஐடியாவை நடைமுறைப்படுத்த சென்னையில யாரும் தயாராக இல்லை. கேரளாவில் ஒரு நிறுவனம் முன் வந்துச்சு. செலவு பண்ண பிறகு நெனைச்சது நடக்கலைன்னாலும் பரவாயில்லை, ஃப்ரஷ்ஷா ஃபோட்டோ ஷூட் பண்ணி பப்ளிசிட்டி பணணுவோம்ன்னு சப்போர்ட் பண்ணினார். அப்படியொரு தயாரிப்பாளர் கிடைப்பது வரம்.

சினிமாவுல உங்கள் டிராவல் எப்படி ஆரம்பிச்சது?

மதுரையிலிருந்து சினிமாவுல ஜெயிக்கணும்னு வந்தவர்களில் நானும் ஒருவன். விஷுவல் எஃபெக்ட்ஸ் முடிச்சுட்டு 50 படங்களுக்கு மேல் கிராஃபிக்ஸ் சைட்ல ஒர்க் பண்ணினேன். டைரக்‌ஷன் நோக்கமா இருந்ததால ஒரு கட்டத்துல அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டேன். அந்த சமயத்துல வாரிசு அடிப்படையில அப்பாவுடைய வேலை கிடைச்சது. சினிமாவுக்காக அந்த வேலையையும் துறந்தேன்.

இயக்குநர் ப்ரியா மேடத்திடம் ரைட்டராக சில காலம் ஒர்க் பண்ணினேன். அனுஷ்கா மேடம் நடிச்ச ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்கு டயலாக் எழுதினேன். தேசிய விருது வாங்கிய ‘பாரம்’ படத்துக்கு நான்தான் திரைக்கதை, வசனம் எழுதினேன்.தயாரிப்பாளர் சி.வி.குமார் சார் ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தில் இயக்குநராக அறிமுகம் செய்தார். அவரிடம் சினிமாவுக்கான படிப்பினையைக் கற்றுக்கொண்டேன்.

தண்ணீர்ல தத்தளிக்கும்போது கப்பலுக்காக வெயிட் பண்ணமுடியாது. கிடைச்ச தெர்மாகோலைப் பிடிச்சு கரைக்கு வரணும். அங்கு வந்தா தேவதை காத்திருப்பாங்க, நீங்களும் அடுத்த கட்டத்துக்கு போயிடலாம். கப்பல்தான் வேணும்னா மூழ்க வேண்டியிருக்கும்னு நடைமுறை யதார்த்தத்தை புரிய வெச்சார். பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்று காத்திருந்தால் இந்நேரம் நான் டைரக்டர் ஆகியிருக்க முடியாது.

எஸ்.ராஜா