அழியும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் Bat உற்பத்தி!



ஷாக் ரிப்போர்ட்

சமீபத்தில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதித்தது. தொடர்ந்து இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். 
மோடியும் விருந்தளித்து அவர்களுடன் கலந்துரையாடினார். இதனையடுத்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. அவர்கள் வந்த வழியெங்கும் கொண்டாட்டங்கள் களைகட்டின. இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

ஆனால், இந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கிடைத்த அதே தருணத்தில் இந்தியாவில் கிரிக்கெட் பேட் உற்பத்தித் துறை அழிந்து வருவதாக சொல்லப்படும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. கிரிக்கெட் விளையாட்டை ஆராதிக்கும் இந்தத் தேசத்தில் கிரிக்கெட் பேட் உற்பத்தித் துறை அழிவிற்குச் செல்ல என்ன காரணம்? அதைப் பார்ப்பதற்குமுன் இந்தியாவில் கிரிக்கெட் பேட் உற்பத்தி பற்றி அறிந்துகொள்வது அவசியம்.    

*காஷ்மீர்   

காஷ்மீர் என்றாலே துப்பாக்கி சத்தமும், ஓயாத சண்டையுமே நம் எல்லோர் மனதிலும் நிழலாடும். ஆனால், காஷ்மீரில்தான் கிரிக்கெட் பேட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது நாம் அறிந்திடாத விஷயம்.காஷ்மீரில் உற்பத்தி செய்யப்படும் ‘காஷ்மீர் வில்லோ பேட்கள்’ உலகளவில் பிரசித்தி பெற்ற ஒன்று. பொதுவாக, சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் பயன்
படுத்துவது இங்கிலீஷ் வில்லோ பேட்களே! இதனை பிரிட்டன் அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

இதற்கு அடுத்தபடியாக கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பேட்கள் காஷ்மீர் வில்லோதான். உற்பத்தியிலும் பிரிட்டனுக்குப் பிறகு காஷ்மீரே இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் ஆரம்ப கட்ட அமெச்சூர் வீரர்களிலிருந்து முதல் தர கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் பேட் காஷ்மீர்
வில்லோதான்.

அவர்கள் மாநில அல்லது சர்வதேச அளவிலான கிரிக்கெட்டிற்குள் எப்போது நுழைகிறார்களோ அப்போதே அதிக விலையுள்ள இங்கிலீஷ் வில்லோ பேட்களைத் தேடி நகர்வார்கள். அதுவும் அவர்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே. இல்லையெனில் எப்போதும்போல ராசியான பேட்டென காஷ்மீர் வில்லோவிலேயே விளையாடுவார்கள். 

வில்லோ என்பது ஒரு மரவகை. இதில் வொயிட் வில்லோ மரங்கள் இங்கிலாந்தின் எெசக்ஸ் பகுதியில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் Salix alba என்பதாகும். இதனை பிரிட்டனில் டிம்பர், பிளைவுட் உள்ளிட்டவற்றிற்கும் கிரிக்கெட் பேட் உற்பத்திக்கும் பயன்படுத்துகின்றனர்.

இதேபோல காஷ்மீரிலும் இந்த மரங்கள் ஏராளமாக விளைகின்றன. இருந்தும் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக இங்கிலீஷ் வில்லோ பேட்கள் வெள்ளை நிறம் கொண்டவை. அதனாலேயே அதனை வொயிட் வில்லோ எனக் குறிப்பிடுகின்றனர். காஷ்மீர் வில்லோக்களோ பிரவுனீஷ் வண்ணம் கொண்டது. தவிர, இங்கிலீஷ் வில்லோவைவிட காஷ்மீர் வில்லோ பேட்கள் கொஞ்சம் எடை கொண்டவை.   

காஷ்மீர், கிரிக்கெட் பேட் இண்டஸ்ட்ரி ஆனது எப்படி?

பல நூற்றாண்டுகளாக காஷ்மீரில் இந்த வில்லோ மரங்கள் வளர்கின்றன. அவற்றை காஷ்மீரிகள் வளர்ப்பு விலங்குகளின் தீவனம் உள்ளிட்ட சில தேவைகளுக்காக மட்டுமே ஆரம்பத்தில் பயன்படுத்தி வந்தனர்.இதை 1895ல் ஜம்மு காஷ்மீரில் செட்டில்மென்ட் கமிஷனராக இருந்த சர் வால்டர் ஆர் லாரன்ஸ் என்பவர் தன்னுடைய, ‘The Valley of Kashmir’ என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

‘‘விர் அல்லது வில்லோ, தண்ணீர் அல்லது ஈரப்பதம் உள்ள காஷ்மீரின் ஒவ்வொரு கிராமத்திலும் வளர்கிறது. மேலும் அதன் வளர்ச்சி மிகவும் எளிமையானது. இதன் மெல்லிய கம்பு தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. இலைகள் உதிர்ந்தபிறகு எரிக்கப்படுகின்றன.இப்படி ஒவ்வொரு ஆண்டும் நிறைய மரங்கள் வீணடிக்கப்படுகின்றன. 

அதனால், காஷ்மீரிகளை இங்கிலாந்திற்கு அனுப்பி கூடைமுடையும் தொழிலை கற்கச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இதனால், இந்தியா முழுமைக்கும் சிறந்த கூடைகளும், நாற்காலிகளும் இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வழங்க முடியும்...’’ என்கிறார்.

ஏனெனில், 20ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை கிரிக்கெட் விளையாட்டு அவ்வளவாக பிரபலமாகவில்லை. அதனால், வில்லோ மரங்கள் கிரிக்கெட் பேட் செய்வதற்கு உகந்தவை என யாரும் நினைக்கவும் இல்லை.1920க்குப் பிறகு கொஞ்சம் பரவலாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது பேட்களின் தேவையும் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், இதன் விலை அதிகமிருந்தது.

இந்நிலையில், இதன் தேவை இருப்பதை உணர்ந்த சியால்கோட்டைச் சேர்ந்த அல்லா பக்‌ஷ் என்பவர் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள சங்கம், ஹாலமுல்லா பகுதியில் முதல்முதலில் ஒரு யூனிட்டை உருவாக்கினார்.இந்த சியால்கோட் பகுதி தற்போது பாகிஸ்தான் நாட்டில் இருக்கிறது. அப்போது கிரிக்கெட் பேட்டைக் காட்டிலும் ஹாக்கி ஸ்டிக்குகளே அதிகம் உற்பத்தி செய்யப்பட்டன.

ஹாக்கி விளையாட்டின் புகழ் குறைந்தபோது ஸ்டிக்குகளின் தேவையும் குறைந்துபோயின. அப்போது பலரின் கவனம் கிரிக்கெட் பேட் பக்கம் திரும்பியது. சுதந்திரத்திற்கு முன்பு வரை முப்பது, நாற்பது குடும்பங்கள் அந்த ஒரு யூனிட்டை நம்பி இருந்தன. வீட்டிற்கு ஒருவர் என அந்த யூனிட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

1947ல் பாகிஸ்தான் உருவான போது இதன் உரிமையாளர் அல்லா பக்‌ஷ் சியால்கோட்டிற்குத் திரும்பிவிட்டார். பிறகு, அங்கே நிறைய பேர் கிரிக்கெட் பேட் உற்பத்தி யூனிட்டைத் தொடங்கினர். 1980கள் வரை சுமார் 30 யூனிட்கள் வரை அந்தப் பகுதியில் இயங்கி வந்தன. 1983ல் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல இந்நிலைமை சட்டென மாறியது.

கிரிக்கெட்டை பலரும் விளையாடத் தொடங்கினர். அதேநேரம் பேட்களின் தேவையும் அதிகரித்தது. உற்பத்தி யூனிட்களும் பெருகத் தொடங்கின. இன்று சங்கம், ஹாலமுல்லா, சேதர் என அனந்த்நாக் மாவட்டம் உள்ளிட்ட காஷ்மீர் பகுதிகளில் சுமார் நானூறுக்கும் மேற்பட்ட யூனிட்கள் கிரிக்கெட் பேட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

இதன்வழியாக ஆண்டுக்கு சுமார் 30 முதல் 40 லட்சம் பேட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்னர் இவை இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் விளையாடும் 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால், காஷ்மீரில் கிரிக்கெட் பேட் உற்பத்தி ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் பிசினஸாக வளர்ந்தது.

இதுதவிர பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர், உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் ஆகிய பகுதிகளிலும் கிரிக்கெட் பேட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனுடன் கிரிக்கெட்டிற்கான மற்ற உபகரணங்களையும் இவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.  

இந்நிலையில் ரா மெட்டீரியலான வில்லோ கிடைப்பதில் சிக்கல்கள் எழ, பேட்களின் உற்பத்தி குறையத் தொடங்கின. இதுவே இன்று காஷ்மீர் உற்பத்தியாளர்களின் மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது.

இதற்குக் காரணம் வில்லோ மரங்கள் கிரிக்கெட் பேட்டிற்காக நிறைய வெட்டப்பட்டு விட்டதும், போதுமான அளவு வளர்க்கப்படாததுமே ஆகும்.

இதனால், பேட் உற்பத்தியாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கியும், வங்கிகளில் கடன் பெற்றும் ரா மெட்டீரியல் வில்லோவை வெளிப்பகுதிகளில் இருந்து தருவித்து தங்கள் யூனிட்டை தக்கவைத்து வருகின்றனர்.

தற்போது காஷ்மீரில் வில்லோ மரங்களை வளர்க்க விவசாயிகள் முன்வருவதில்லை. ஏனெனில், இந்த மரங்கள் வளர 15 ஆண்டுகள் வரை பிடிக்கும். அதன்பிறகு வெட்டினால்தான் அவை கிரிக்கெட் பேட்டிற்கு உகந்ததாக இருக்கும்.ஆனால், ஆப்பிள் மரங்கள் மூன்று ஆண்டுகளில் வளர்ந்து நல்ல விளைச்சலையும் வருமானத்தையும் தந்துவிடும். இதனால் ஆப்பிள் மரங்கள் நடுவதிலேயே விவசாயிகள் ஆர்வம் காட்டுவதாகச் சொல்கின்றனர் கிரிக்கெட் பேட் உற்பத்தியாளர்கள்.

‘‘எங்களுக்கு 70 ஆயிரம் வில்லோ மரங்கள் ஆண்டுக்கு தேவை. அப்போதுதான் தற்போதைய தேவையை பூர்த்தி செய்யமுடியும். ஒருவேளை அது நடக்கவில்லையெனில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்தத் தொழில் முற்றிலும் அழிந்துபோகும்...’’ என்கிறார் காஷ்மீர் உற்பத்தியாளர் ஒருவர்.

இதற்கிடையே கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 8 ஆயிரம் வில்லோ மரக்கன்றுகளை அங்குள்ள வேளாண் பல்கலைக்கழகம் விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. ஆனால், அது போதுமானதாக இல்லை என்கின்றனர் உற்பத்தியாளர்கள். ‘‘இன்னும் நிறைய மரங்களை நடவேண்டும். அப்போதுதான் இந்தத் தொழில் புத்துயிர் பெறும். ஆனால், அதற்கு கோடிக்கணக்கில் நிதி தேவை...’’ எனக் கூறுகின்றனர்.

ஒருவேளை அரசு நிதியளித்து ஆயிரக்கணக்கான ஏக்கரில் இந்த வில்லோ மரங்களை காஷ்மீரின் விளைநிலங்களிலும் நதிக்கரைகளிலும் பயிரிட்டால் இந்தத் துறை ஆண்டுக்கு சுமார் 350 கோடி ரூபாய்களை ஈட்டிக் கொடுக்கும் என்கிறார் விவசாயத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர். தற்போது நானூறு யூனிட்களில் 50 யூனிட்கள் வில்லோ இல்லாததால் மூடப்பட்டுவிட்டன. இருப்பவர்களோ மாதத்திற்கு 600 பேட்களே உற்பத்தி செய்கின்றனர்.

ஆனால், தேவையோ 5 ஆயிரம் பேட்கள். இந்தளவுக்கு டிமாண்ட் இருந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே வேதனை. இதுமட்டுமல்ல. காஷ்மீர் வில்லோ பேட்களின் விலையும் மிகக் குறைவு. 1500 ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாய் வரையே விலை வைத்துள்ளனர். இதுவே இங்கிலீஷ் வில்லோ பேட்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வரை மார்க்கெட்டில் உள்ளன. ஆனால், இங்கிலீஷ் வில்லோ தரத்தில்தான் காஷ்மீர் வில்லோ பேட்களும் தயாரிக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு நடந்த உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்கான முதல்கட்ட குவாலிஃபயர் சுற்றில் இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகளின் வீரர்கள் காஷ்மீர் வில்லோ பேட்களைத்தான் பயன்படுத்தினர்.அதேபோல 2022ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வீரர் ஜூனைத் சித்திக், லங்கா வீரர் துஷ்மந்த சமீரா வீசிய பந்தில் 109 மீட்டர் தூரம் சிக்சர் அடித்து சாதனை படைத்தார். இது காஷ்மீரின் ஜிஆர்8 நிறுவனத்தின் காஷ்மீர் வில்லோ பேட்டில்தான் அடிக்கப்பட்டது.

இதனால், காஷ்மீர் வில்லோ பேட்களுக்கு உலக நாடுகளில் மேலும் டிமாண்ட் அதிகரித்ததாகச் சொல்கிறார் ஒரு உற்பத்தியாளர்.  ஆனால், இப்போது வில்லோ மரங்கள் குறைவால் அந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடும் எனக் கவலை தெரிவிக்கிறார் அவர்.  இதுமட்டுமல்ல. ஜலந்தர் மற்றும் மீரட் பகுதி கிரிக்கெட் நிறுவனங்களுக்கு காஷ்மீரின் வில்லோ மரங்கள் கடத்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இதுவும் காஷ்மீர் வில்லோ மரங்கள் குறைந்து வருவதற்குக் காரணம் என்கின்றனர் காஷ்மீர் உற்பத்தியாளர்கள்.

இதற்கென தடைச்சட்டம் இருந்தும் மாதத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் வில்லோ மரக்கட்டைகள் கடத்தப்படுவதாகச் சொல்கின்றனர் அவர்கள். இதனுடன் பவர் கட், 12 சதவீத ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவையும் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு காஷ்மீர் வில்லோ பேட்களுக்கு ஜி.ஐ டேக் எனப்படும் புவிசார் குறியீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் புவிசார் குறியீடு கிடைக்கும்பட்சத்தில் இன்னும் சர்வதேச அளவில் அங்கீகாரமும், போதுமான விலையும் கிடைக்கும் என்கின்றனர் காஷ்மீர் தொழில்துறை அதிகாரிகள்.
ஆனால், அதற்கு வில் லோ மரங்கள் அதிகளவில் வளர்க்கப்பட வேண்டும். அது நடக்குமா? இந்தத் துறை அழிவிலிருந்து மீளுமா? கவலையுடன் காத்திருக்கின்றனர் உற்பத்தியாளர்கள்.

பேராச்சி கண்ணன்