அபாய நிலையில் இந்திய மக்களாட்சி..?



புயலைக் கிளப்பும் அமெரிக்க அமைப்பு கணிப்பு

அமெரிக்காவின் மக்களாட்சியை காப்பாற்றுவதற்காக அங்கு ஏற்படுத்தப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு ‘ப்ராஜக்ட் டெமாக்ரசி’ (Project Democracy). இந்த அமைப்பு 2017ம் ஆண்டு முதலே பல்வேறு அறிஞர்களின் தினசரிக் குறிப்பை வைத்து வருடந்தோறும் அமெரிக்காவின் மக்களாட்சி எந்த நிலையில் இருக்கிறது என்று கணித்து வந்தது.
அந்த நாடு, எதேச்சதிகார (Authoritarian) நாடாக மாறாமல் இருக்கும் பொருட்டே இந்தக் கணிப்பை வருடந்தோறும் செய்து வந்தது அது.

ஆனால், இந்த ஆண்டு அமெரிக்கா மட்டுமல்லாது மேலும் 5 நாடுகளில் மக்களாட்சி எப்படி இருக்கிறது என்று கணித்து கடந்தவாரம் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.
இந்த அறிக்கையின் பெயர் ‘எதேச்சதிகார ஆபத்துக் குறியீடு’ (Authoritarian Threat Index), இதில்தான் அமெரிக்கா உட்பட்ட 6 நாடுகளில் இந்தியாவின் மக்களாட்சி ‘மிகவும் ஆபத்தான நிலையில்’ இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறது.மக்களாட்சியின் மகத்தான குறியீடுகளாக இந்த அமைப்பு 6 காரணங்களை ஆய்வில் எடுத்திருந்தது. அவை:

1. ஊடங்கங்களை அரசு எப்படி கையாளுகிறது?
2. நிர்வாகச் சிக்கல்கள்.
3. தேர்தல்.
4. சிவில் சமூகத்தினரின் சுதந்திரம்.
5. சிவில் சமூகத்தில் நிகழும் வன்முறை.
6. அதிகார மட்டத்தில் நிகழும்
பேச்சுக்கள்.

‘ப்ராஜக்ட் டெமாக்ரசி’ இந்த 6 தலைப்புகளுக்கும் மொத்தமாக 5 புள்ளிகளை வழங்கியது. அதாவது ஒரு நாடு இந்தக் காரணிகளில் 5 புள்ளிகளை எடுத்தால் அந்ந நாடு ‘எதேச்சதிகார நாடு’ என்றும், ஒரு புள்ளி எடுத்திருந்தால் ‘ஆரோக்கியமான மக்களாட்சி’யுள்ள நாடு என்றும் வகைப்படுத்தியிருந்தது. இதில்தான் இந்தியா 3.5 புள்ளிகளைப் பெற்று ‘ஆபத்தான மக்களாட்சியை உடைய நாடு’ என்ற பெத்த(!) பெயரை எடுத்திருக்கிறது. எனில் மற்ற நாடுகள் என்ன கிழித்தன?

அமெரிக்கா - 2.5, போலந்து - 2.3, ஜெர்மனி - 1.5, கனடா - 1.5, இங்கிலாந்து - 1.8. இதில் அமெரிக்காதான் இந்தியாவுக்கு மிக பக்கத்தில் வருகிறது. பொதுவாக நம் நாட்டை, அமெரிக்கா போன்ற வல்லரசாக மாற்ற இந்தியர்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் சூழ்நிலையில் அமெரிக்கா, இந்தியா ஆவதற்கான முயற்சிகள் இந்தப் புள்ளிவிவரத்தில் இருந்தே தெரிகிறது.
அதேநேரம் இந்தியா பெரும் ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இதிலிருந்து எப்படி நாம் மீளப் போகிறோமோ?!

டி.ரஞ்சித்