வழக்கமான சீரியல் கில்லர் கதையை வழக்கத்துக்கு மாறா சொல்லியிருக்கோம்!



இது ‘லெவன்’ சீக்ரெட்!  

‘‘‘லெவன்’ என்கிற நம்பர், படத்தில் ஒரு முக்கியமான அங்கமாய் இருக்கும். வேறு பெயர்கள் கூட யோசித்துப் பார்த்தோம். ஆனால், ‘லெவன்’ என்கிற தலைப்பை விட வேறு எந்த பெயரும் அவ்வளவு சரியாகப் பொருந்தலை...’’ தலைப்பு குறித்த காரணத்துடன் துவங்கினார் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ்.

உங்களைப் பற்றி..?

சொந்த ஊர் காஞ்சிபுரம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சேன். புனேவில் ஒரு எம்என்சி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருந்தேன். சினிமா இயக்குநர் ஆகறதுதான் கனவு, ஆசை எல்லாமே. 2013ல வேலையை ராஜினாமா செய்திட்டு முழுமையா சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் ‘பாணா காத்தாடி’ இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் சாருடன் துணை இயக்குநராக வேலை செய்துட்டிருந்தேன். தொடர்ந்து 2015ல் சுந்தர் சி சார்கிட்ட அசிஸ்டென்டாக இணைந்தேன்.

நான் வந்த நேரம் சுந்தர் சி சார் ‘சங்கமித்ரா’ வரலாற்றுப் பட வேலைகள் ஆரம்பிச்சிருந்தார். அவர் கூட சேர்ந்து ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘ஆக்‌ஷன்’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்திருக்கேன். இப்ப ‘லெவன்’ படத்தின் மூலமா இயக்குநராக என் கனவு நிறைவேறக் காத்திருக்கேன்.

‘லெவன்’?

ஒன்லைனா சொன்னா இதுவரை நீங்கள் பார்த்துப் பழகிய அதே சீரியல் கொலைகள்... அதை நோக்கிய இன்வெஸ்டிகேஷன் என்கிற கதையாகத்தான் தெரியும். ஆனா, படமா பார்க்கும் பொழுது நிச்சயம் இந்தப் படம் மற்ற இன்வெஸ்டிகேஷன் படங்களிலிருந்து முழுமையா வேற ஒரு கதைக்களத்தில் இருக்கும். தொடர் கொலைகள்... அதை இன்வெஸ்டிகேட் செய்யும் ஒரு போலீஸ் ஆபீஸர்... ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் பொழுது யார் குற்றவாளி என்பது கிளைமாக்ஸ்.   

ஏன் நவீன் சந்திரா..?  

இப்படிப்பட்ட கதையில் மட்டும்தான் நடிப்பேன், இந்த கேரக்டர்தான் வேண்டும் இப்படி எந்த கறாரோ கண்டிப்போ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லாத நாயகன். டெடிகேஷனா திறமையா வேலை செய்கிற நபர். நாம என்ன சொல்கிறோம் என்கிறதை தெளிவாக புரிஞ்சுகிட்டு சென்சிட்டிவா வேலை செய்வார். ஆரம்பத்தில் வேறு இரண்டு நடிகர்கள் கிட்ட இந்த கதையை சொன்னேன். ஒரு சில காரணங்களால அவர்களால் நடிக்க முடியாம போயிடுச்சு.

நவீன் சந்திரா சார் இந்தக் கதையைக் கேட்கும் பொழுது ‘இனிமேல் நான் போலீஸ் கதையே நடிக்கக் கூடாது என இருந்தேன். காரணம், தொடர்ச்சியா வெறும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம்தான் தேடித்தேடி வருது. ஆனா, உங்க கதை ரொம்ப அற்புதமாக இருக்கிறதால் இதை நான் கடைசி போலீஸ் படமாக எடுத்துக்கிறேன்’னு சொன்னார்.  

டி இமான் இந்த படத்திற்குள் வந்தது எப்படி?

அவர் இந்தப் படத்திற்கு கிடைத்தது எங்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்தான். இதுவரை அவர் பணியாற்றிய பின்னணி இசை ஸ்டைலில் இருந்து முற்றிலும் வேறுவிதமான ஜோனரில் வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்தில் நாயகி ரியா, ஒரு பைக் ரைடர். பைக்கை ஓட்டிக்கொண்டு கதாநாயகி ஹீரோ பின்னாடி சுற்றுவது போல் காட்டி இருக்கேன். ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் சார், ‘வத்திக்குச்சி’ திலீபன் முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்காங்க. ரவிவர்மா, அர்ஜை நல்ல ரோலில் நடிச்சிருக்காங்க.

கார்த்திக் அசோகன் சினிமாட்டோகிராபி. ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’, ‘தில்வாலே’, ‘ஜூங்கா’, ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் வேலை செய்த கேமராமேன் டட்லியிடம் அசிஸ்டென்டாக இருந்தவர் கார்த்திக் அசோகன். 

பாலிவுட்டில் பெரிய சினிமாட்டோகிராபர் டட்லி சார். சுந்தர் சி சாரின் ‘ஆக்‌ஷன்’ படத்தில் டட்லி சார் வேலை செய்யும் பொழுது அவருக்கு அசிஸ்டென்டாக கார்த்திக் அசோகன் இருந்தார். அப்போதே என் முதல் படத்தில் கார்த்திக் அசோகன்தான் சினிமா போட்டோகிராபி என முடிவு செய்துட்டேன். எடிட்டர் ஸ்ரீகாந்த். ‘மங்காத்தா’, ‘ஆரண்ய காண்டம்’, ‘அரவான்’ உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் வேலை செய்த எடிட்டர்.

‘லெவன்’ படத்திற்கு பார்வையாளர்கள் என்ன எதிர்பார்த்து வரவேண்டும்?

பரபர திரில்லர் மொமென்ட்களை விரும்பிப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றம் கொடுக்காது. மற்ற சீரியல் கொலை படங்களிலிருந்து இந்தப் படம் நிச்சயம் வேறுபட்டு வேறு ஒரு கதைக்களத்தில் பயணிக்கும்.

ஷாலினி நியூட்டன்