இனி எய்ட்ஸ் இல்லை!



தடுப்பு மருந்தை ஆப்பிரிக்கா கண்டுபிடித்து விட்டது

ஒருகாலத்தில் எய்ட்ஸ் என்றாலே எமனே நடுங்குவார். அந்தளவுக்கு பிரபஞ்சத்தை ஆட்டிப் படைத்தது.உதாரணமாக சில பத்தாண்டுகளுக்கு முன்புகூட உலகளவில் சுமார் 20 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் இருந்தனர். ஆனால், இப்போதைய நிலையில் இதில் பாதியளவுக்குத்தான் நோயாளிகள் இருக்கிறார்கள். காரணம், விழிப்புணர்வோடு எய்ட்ஸ் தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட பலவித நவீன மாத்திரை மருந்துகள்.

அதிலும் முக்கியமானது எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கும் மாத்திரை மருந்துகள் (Preventive Medicines). இதில் முக்கியமான இரு மாத்திரைகள் ‘ட்ருவடா’ (Truvada f/tdf), மற்றும் ‘டிஸ்கொவி’ (Descovy f/taf). ஆனால், இந்த இரண்டையும் தாண்டி ஒரு மருந்து 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கடந்தவாரம் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா மற்றும் உகாண்டாவை மையமாகக் கொண்டு ஒரு மருத்துவ சோதனையை மருத்துவர்கள் செய்தார்கள்.

அந்த சோதனையில் சுமார் 5000 ஆரோக்கியமான இளம்பெண்களை சோதனைக்கு எடுத்துக்கொண்டார்கள். அவர்களில் 2134 பேருக்கு ‘லெனாகேப்பவீர்’ (Lenacapavir-len la) என்ற ஊசி மருந்தும், 1068 பேருக்கு ட்ருவடாவும், 2136 பேருக்கு டிஸ்கொவியும் கொடுக்கப்பட்டன. இதில் ட்ருவடா கொடுக்கப்பட்ட 1068 பேரில் 16 பேரும் (1.5 சதவீதம்), டிஸ்கொவி கொடுக்கப்பட்ட 2136 பேரில் 39 பேரும் (1.8 சதவீதம்) எய்ட்ஸ் நோயால் பிறகு பாதிக்கப்பட்டார்கள்.

ஆனால், லெனாகேப்பவீர் கொடுக்கப்பட்ட 2134ல் பேரில் மொத்த நபர்களும் பிறகு எந்தவித எய்ட்ஸ் நோய்க்கும் உள்ளாகவில்லை. இந்த லெனாகேப்பவீர் வருடத்துக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ளப்படக்கூடியது. இதன் அடிப்படையில் இந்த லெனாகேப்பவீர் ஊசி மருந்து எய்ட்ஸை முறியடிக்கும் மாமருந்து என அந்தக் கண்டுபிடிப்பை செய்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இருந்தாலும் பல இனத்தவருக்கும், பலவகை பாலியல் செயல்பாடுகளையும் கணக்கில் கொண்டு சோதித்துப் பார்த்தால்தான் இந்த மருந்தின் முழு வீச்சும் உணரப்படும்.

இதன் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்துக்கும் இந்த அமைப்பு, தன் கண்டுபிடிப்பைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ஒருவேளை உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தின் செயல்திறனில் நம்பிக்கை வைத்தால் வரும் காலங்களில் எய்ட்ஸ் என்ற வார்த்தையே டிக்‌ஷனரியில் இருந்து நீக்கப்படலாம்.

டி.ரஞ்சித்