வெறும் நூறு ரூபாயில் என் திருமணம் நடந்தது!
மலையாளத்தில் முகம் காட்டத் தொடங்கி இப்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக தன் எல்லைகளை விசாலப்படுத்திக் கொண்டிருப்பவர் ஹரீஷ் பேரடி. நாடகத் துறையில் நீண்ட அனுபவம் உள்ள தன்னை பன்மொழி நடிகராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் திறமையான கலைஞர் இவர்.
 *உங்கள் கலைப் பயணம் எப்படி ஆரம்பித்தது?
எதிர்காலத்தில் எப்படியும் நடிகனாகிவிடவேண்டும் என்ற மன நிலையில்தான் என்னுடைய இளமைப் பருவம் இருந்துச்சு. என்னுடைய ஸ்கூல் அதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துச்சு. ஸ்கூல், காலேஜ் என அடுத்தடுத்து படிப்பை நோக்கி நகர்ந்தாலும் நாடகம் எனக்குள் பெரிய மாயம் செய்துச்சு. நாடகத்துக்கு அடிமை மாதிரி ஆனேன். ‘ஜெயப்பிரகாஷ் டிராமா ஸ்கூலில்’தான் நான் பட்டை தீட்டப்பட்டேன். ‘அப்பு & உன்னி’ என்ற ஒரே நாடகத்தை இந்தியா முழுவதும் சுமார் 3500 முறை பண்ணியிருப்போம். அதுதவிர ஏராளமான நாடகங்கள் பண்ணினேன்.
 ஒருகட்டத்தில் குடும்பத்தை சுமக்க வேண்டிய பொறுப்பு என் தோளின் மீது இருந்ததால் பிழைப்புக்காக பல வேலைகள் செய்தேன். இருபது, இருபத்தைந்து வயதுக்குப் பிறகு நாடகம் மூலம் வரும் வருமானத்தில்தான் குடும்ப வண்டி ஓடியது.
 *சினிமாவில் உங்களுடைய பயணம் எப்போது ஆரம்பித்தது?
2000ம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். சினிமாவில் என்னுடைய ஆரம்பப் புள்ளி ‘கலாபவன் ஆக்டிங் ஸ்கூலில்’ இருந்து ஆரம்பிச்சது. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் பிரபல இயக்குநர் சிபி மலையில்.என்னுடைய நாடகம் பிடிச்சு வாய்ப்பைக் கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ என்ற படம் சினிமாவில் எனக்கு திருப்புமுனையைக் கொடுத்துச்சு. அந்தப் படத்துக்குப் பிறகு மலையாளத்தில் எனக்கான இடம் கிடைச்சதுனு சொல்லலாம். அந்தப் படத்தைப் பார்த்துட்டு தமிழிலும் அழைப்பு வந்துச்சு.
 *தமிழில் உங்கள் அறிமுகம் தாமதமாக நடந்ததாக எண்ணுகிறீர்களா?
அப்படியில்லை. ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’ படம் பார்த்துதான் மணிகண்டன் ‘ஆண்டவன் கட்டளை’யில் நடிக்க கூப்பிட்டார். சினிமாவைப் பொறுத்தவரை எதுவும் நம் கையில் இல்லை. காலத்தின் கையில்தான் இருக்கிறது. நடிப்பின் மீது எனக்கு தாகம் இருந்தாலும் நானாக எங்கேயும் வாய்ப்பு கேட்டதில்லை. எல்லோரும் என் நாடகத்தைப் பார்த்துதான் கூப்பிட்டார்கள். வாய்ப்பு கேட்பது தவறு என்று சொல்லமாட்டேன். நாடகம் என்னுடைய சினிமாவுக்கான வாய்ப்புகளை எளிதாக்கிடுச்சு.
சினிமாவிலும் என்னுடைய வேலையைப் பார்த்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சது. நம்முடைய வேலையை சரியாகச் செய்தால் கண்டிப்பாக நமக்கான இடம் கிடைக்கும் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அப்படித்தான் வாழ்க்கையில் பல தோல்விகள், சசப்பான அனுபவங்கள் ஏற்பட்டாலும் அதைத் தடைக்கற்களாகப் பார்க்காமல், என்னுடைய வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன்.
* உங்கள் சினிமா வாழ்க்கையில் மனதுக்கு நெருக்கமான படம் எது?
மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’. அந்தப் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். பீரியட் படம் என்பதால் என்னுடைய கேரக்டருக்கான சுதந்திரம் இருந்துச்சு. சமகாலக் கதையாக இருந்தால் நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்தாலே கேரக்டருக்கான ரெஃபரன்ஸ் கிடைச்சுடும். ‘அய்யனார்’ கேரக்டர் அதுமாதிரி கிடையாது. அந்தவகையில அது வித்தியாசமான படம்னு சொல்லலாம்.
*சினிமாவில் நீங்கள் சந்திச்ச கசப்பான அனுபவம்..?
வாழ்க்கை என்றால் ஏற்ற, இறக்கம் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கடந்துதான் இந்த இடத்துல வந்து நின்னுருக்கேன். எந்தளவுக்கு கசப்பான அனுபவங்கள் இருந்ததோ, அதேஅளவுக்கு சந்தோஷத்தையும் அனுபவிச்சிருக்கிறேன். கலை சார்ந்த வேலைகள் அனைத்துமே எனக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுத்துச்சு.சினிமாவில் நல்ல வருமானம் பார்த்தேன். வீடு, வாசல், பிள்ளைகள், குடும்பம் என மகிழ்ச்சியான வாழ்க்கை. முன்பு நாடகத்துக்காக கொடுத்த கடின உழைப்பின் பலன்களை இப்போது அறுவடை செய்கிறேன்.
*உங்கள் திருமணம் வெறும் நூறு ரூபாயில் நடந்ததாமே?
என்னுடைய திருமணம் காதல் திருமணம். என்னுடைய மனைவி பிந்து. கிளாசிக்கல் டான்ஸ் டீச்சர். மேடைகள்தான் எங்கள் இருவரையும் மணமேடை வரை அழைத்துச் சென்றது. திருமணம் செய்யும்போது என்னிடம் கையில சொல்லும்படி பணம் எதுவுமில்லை. கடன் வாங்கிக் கல்யாணம் என்ற சூழ்நிலையில்தான் எங்கள் திருமணம் நடந்துச்சு. தெரிஞ்சவங்களிடம் நூறு ரூபாய் கடன் வாங்கி திருமணம் செய்துகொண்டோம்.
இரண்டு மகன்கள். மூத்த பையன் விஷ்ணு பேரடி, கம்ப்யூட்டர் என்ஜினியர். திருமணமாகி குடும்பமாக லண்டனில் வசிக்கிறான். இளைய மகன் வைடி பேரடி பெங்களூரில் காலேஜ் படிக்கிறான். அவனுக்கும் சினிமா மீது ஆர்வமிருக்கு. என்னுடன் ஒரு படத்திலும் நடித்திருக்கிறான்.
சினிமாதான் அவனுக்கும் லட்சியமாக இருக்கிறதுவாழ்க்கையை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் போதும். பணத்தை எப்போதும் இரண்டாவது இடத்தில்தான் வைக்கணும். பணம் வேண்டாம்னு சொல்லவில்லை. பணம் இருந்தால்தான் வாழ முடியும் என்பதைவிட தைரியத்தையும் நம்பிக்கையையும் எப்போதும் விட்டுவிடக்கூடாது. *சினிமாவை மலையாள ரசிகர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
சினிமாவின் சக்தியை தமிழ் சினிமாவில்தான் பார்க்க முடிகிறது. கேரளாவில் சினிமாவை கலை வடிவமாக மட்டுமே பார்க்கிறார்கள். தமிழ்நாடு அப்படி அல்ல. சினிமாவை தங்கள் வாழ்க்கையாகப் பார்க்கிறார்கள். தமிழ் ரசிகர்களின் ரத்தத்தில் சினிமா ஊறிப்போனதாகவே நினைக்கிறேன். இங்கு சினிமாவின் தாக்கத்தை அரசியலிலும் பார்க்க முடிகிறது. ஆனால் கேரளாவில் அப்படி அல்ல. சினிமா வேறு, அரசியல் வேறு என்று மக்களுக்குத் தெரியும்.
* வில்லன், குணச்சித்திர வேடம் - எது மனநிறைவு தருகிறது?
எல்லா வகை வேடங்களும் பண்ணுவது பிடிக்கும். வில்லன் என்ற முத்திரை விழுவதை விரும்பவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள எந்த வேடமாக இருந்தாலும் பண்ணுவதற்கு ரெடியாக இருக்கிறேன். சமீபத்தில் ‘பம்பர்’ படம் பண்ணினேன். அதுவரை வில்லனாக நடித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பட இயக்குநர் செல்வகுமார் ஏழை லாட்டரி வியாபாரி வேடம் கொடுத்தார். அது பேசப்பட்டது. அந்தப் படத்துக்குப் பிறகு பல படங்களில் வித்தியாசமான குணச்சித்திர வாய்ப்பு வந்தது. ‘ஆண்டவன் கட்டளை’, ‘விக்ரம் வேதா’, ‘மெர்சல்’ உட்பட இதுவரை வெரைட்டியாக பண்ணியதாகத்தான் நினைக்கிறேன்.
*பயோபிக் கதையில் நடிக்க விருப்பம் உண்டா?
அது என் கையில் இல்லை. இயக்குநரின் கையில் இருக்கிறது. நான் நடிகன் மட்டுமே. யாருடைய பயோபிக் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். சமீபத்தில் ‘பல்லு படாம பாத்துக்க’ படத்துல ஹிட்லர் வேடம் பண்ணினேன். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. படம் பார்த்தவர்களுக்கு என்னுடைய கேரக்டர் எந்தளவுக்கு ஆழமாக இருந்திருக்கும்னு புரிஞ்சிருக்கும்.
* இப்போது நாடகம் பண்ணுவதற்கு நேரம் கிடைக்கிறதா?
சினிமாவில் பிஸியாக இருப்பதால் நாடகம் பற்றி யோசிக்கவில்லை. நாடகம் பண்ணுவது எளிது அல்ல. அதற்கு நிறைய டைம் வேணும்.
* சினிமாவில் ஜெயிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு உங்கள் ஆலோசனை?
கடின உழைப்பு கொடுப்பதற்கு ஆயத்தமா வரணும். சினிமாவை பணம் சம்பாதிக்கும் இடமா பார்க்கக் கூடாது. சினிமாவை கலை வடிவமா பார்க்க தெரிஞ்சிருக்கணும். சினிமாவை ஆர்வத்தோடு அணுக வேண்டும். அப்படி இருந்தால் அவர்களும் ஜெயிக்க முடியும். சினிமாவும் ஆரோக்கியமாக இருக்கும்.
*ரகுவரன், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் வில்லன் நடிகர்களாக பேர் வாங்கியவர்கள். இப்போது அதில் வெற்றிடம் ஏற்பட்டதாக நினைக்கிறீர்களா?
அப்படிச் சொல்லிவிட முடியாது. ஒருத்தர் போனால் இன்னொருத்தர் வருவார்கள். சினிமா என்பது வேகமாக ஓடும் ரயில் மாதிரி. எல்லா ஸ்டேஷன்களிலும் சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும். அதற்குள் ஏற வேண்டும் அல்லது இறங்க வேண்டும். உங்களிடம் தனித்துவமான ஆளுமை இருந்தால் சீட் கிடைக்கும். சினிமா யாருக்காகவும் காத்திருக்காது.
*கேரக்டருக்காக ஹோம் ஒர்க் பண்ணும் பழக்கம் உண்டா?
பொதுவாக என்னுடைய கேரக்டரின் முழு ஹிஸ்டரியை ஆராய்ச்சி பண்ணிவிடுவேன். அதை கதையில் காட்டமாட்டார்கள். ஆனால், அந்த கேரக்டரின் பின்னணியில் இருக்கும். அந்த அம்சங்களைக் கூர்ந்து கவனித்துப் பண்ணினால்தான் கேரக்டர் நிற்கும். அப்படித்தான் எல்லா கேரக்டரையும் அப்ரோச் பண்ணுகிறேன்.
*தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீர்களா?
எல்லா மொழிப் படங்களுக்கும் தனித்துவமான அடையாளம் இருக்கும். எது சரி, எது தவறு என்பது கிடையாது. அவரவர் ஸ்டைலில் படம் செய்கிறார்கள். தமிழ் சினிமாவில் வாழ்வியல் சார்ந்த கதைகள், சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகள் என வித்தியாசமான படைப்புகள் மூலம் இளம் இயக்குநர்கள் புது ரத்தம் பாய்ச்சுவதைப் பார்க்க முடிகிறது. யாருக்கு வில்லனாக நடிக்க விருப்பம்? ரஜினி, கமல்.
எஸ்.ராஜா
|