கட கட வண்டி... கஸ்டமைஸ்ட் வண்டி!



போர்ஷே 911 (Porsche 911) கார்... சுமார் 80 ஆண்டுகள் கடந்தும் தனக்கென தனி இடம் பிடித்து விளையாட்டுக் கார் உலகின் ஜாம்பவானாகத் நிற்கிறது. இரண்டு கதவுகள், இரண்டு சீட்டர்கள் கொண்ட இந்த சொக்க வைக்கும் சொகுசு கார்கள் இந்தியாவில் ரூ.1.36 கோடி துவங்கி அதிகபட்சமாக ரூ.3.35 கோடியில் விற்பனையாகின்றன. 
இந்தக் காருக்குத்தான் கைகளால் உருவாக்கப்பட்ட மினியேச்சர் மாடல் காரை இந்தியாவில் முதன் முதலில் உருவாக்கி ஆட்டோ மொபைல் துறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார் கேரள மெக்கானிக்கல் இன்ஜினியரான ராக்கேஷ் பாபு.  

அதிலும் 1964 முதல் 1989 வரையான கால கட்டத்தில் புழக்கத்தில் இருந்த வின்டேஜ் போர்ஷே 911 கார் மாடலை உருவாக்கியிருக்கிறார் ராக்கேஷ். மேலும் பல கார்கள், வேன், பஸ் என அனைத்திற்கும் மினி வெர்ஷன்களை செய்து இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்த கார் காதலர். ‘‘நான் ஒரு கேரள அரசு பணியாளர். ரயில்வே உதிரிப் பாகங்கள், பாலங்கள் தயாரிக்கற அரசு நிறுவனத்தில் நான் டெக்னீஷியனாக வேலையில் இருக்கேன்.

சொந்த ஊர் கேரளா, ஆழப்புழா. படிச்சது ஐடிஐ.  இப்ப நான் லீவில் இருக்கேன். இந்த நீண்ட விடுமுறைய சும்மா எதுக்கு விடணும்னு ஓர் ஆர்வத்தில் மினியேச்சர் கார்கள் டிசைனிங்கில் ஒரு வருடம் பிரத்யேக பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். அப்பா பாபு, சொந்தமா சின்ன கரேஜ் வெச்சு அதிலே வெல்டிங் வேலைகள் செய்வார். அம்மா இந்து, ஹவுஸ்ஒயிஃப். என்னுடைய மனைவி மேகா, பட்டனகாட் அரசு பள்ளியில் டீச்சர். எனக்கு ஒரு மகள். பெயர் அன்வி. அவளுக்கு 2 வயசு.

சின்ன வயதில் வசதிகள் ஏதும் இல்லாமல் என்னைக்கு நாம கார் எல்லாம் வாங்கப் போகிறோம்னு நிறைய ஏங்கியிருக்கேன். அந்த ஏக்கம்தான் இன்னைக்கு ‘சுடுஸ் கஸ்டம்ஸ் கார்’ என ஒரு சின்ன கேரேஜ் துவங்கும் அளவுக்கு என்னை மாற்றியிருக்கு. கையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு மின்சார பேட்டரி அல்லது பெட்ரோலில் இயங்கக் கூடிய கார்களை செய்வேன். இந்தியாவில் கைகளால் கார்களை உருவாக்குகிற பழக்கம் எல்லாம் பெரிதாகக் கிடையாது...’’ என்னும் ராக்கேஷ் இதனை ஓய்வு நேர பொழுதுபோக்காக செய்யத் துவங்கியிருக்கிறார்.

‘‘ஆரம்பத்தில் கார்களை சும்மா மாடலுக்காக செய்து வைக்கத் துவங்கி சிலர் குழந்தைகளுக்காக, காலேஜ் புராஜெக்ட்களுக்காக கேட்டு வாங்க ஆரம்பிச்சாங்க. சென்னை, தஞ்சைக்குக் கூட டெலிவரி செய்திருக்கோம். இந்தியா முழுக்க இருந்து ஆர்டர்கள் வருகின்றன, வெளிநாட்டு ஆர்டர்களும் வருது. ஆட்டோ மொபைல் நிகழ்ச்சிகள், கல்லூரி கல்ச்சுரல்கள் இப்படிக் கூட கேட்டு வர்றாங்க. அதிகமா குழந்தைகளுக்காக வாங்குறவங்கதான் அதிகம்.

பெட்ரோல், பேட்டரி... இப்படி இரண்டிலும் ஓடக்கூடிய வண்டிகளை செய்யறேன். இந்த வண்டிகளை சாலைகளில் ஓட்ட முடியாது. வீட்டுக்குள், உங்களுக்கு சொந்தமான அல்லது தனியார் இடங்களில், அப்புறம் வீட்டைச் சுற்றி ஓட்டிக்கலாம். காரணம், பெட்ரோல் என்ஜின் பயன்படுத்திட்டாலே லைசென்ஸ், எஃப்.சி, இப்படி எல்லா வேலைகளும் செய்தாகணும். அதனால் குழந்தைகளுக்குக் கொடுத்தாலும் இந்த கட்டுப்பாடுகளை எல்லாம் விளக்கி சொல்லித்தான் கொடுப்பேன்.

எங்களுடைய பிராண்டையும் ரிஜிஸ்டர் செய்தாச்சு. எனக்கு ரெண்டு நண்பர்கள்- பிளெஸ்ஸன், அமல். அவங்கதான் வீடியோ ஷூட், எடிட்டிங், கூடவே என்னுடைய கார் உருவாக்கத்திலே உதவியாகவும் இருக்காங்க. நாங்க மூணு பேராதான் எப்பவும் சுத்திக்கிட்டு இருப்பேம். எங்களுடைய இந்த விஷன் செயல்படத் தொடங்கியதும் உற்சாகமாச்சு. காரை ஓட்டிப் பார்த்து முழு திருப்தி ஏற்பட்ட பிறகு யூடியூப், இன்ஸ்டாகிராம் மாதிரி சோஷியல் மீடியாவில் காரை ஓட்டி, அதன் முழு விபரங்களையும் பேசி வீடியோக்களா பதிவிடத் துவங்கினேன்.

ஆரம்பத்திலே பெரிதா பிக்அப் ஆகலை. இதிலே சிலர் இந்தக் கார் ஒரு குழந்தையைத் தாங்குமா என்னும் கேள்வி கேட்க அதற்காகவே நான்கு பேர் அமர்ந்து ஜீப்பை ஓட்டிக் காட்டினோம். அது டிரெண்டாக ஆரம்பிச்சது. மெட்ரோ டிரெயின், வேன், பஸ், வின்டேஜ் கார்கள் எல்லாமே உருவாக்கறோம். பொழுதுபோக்கா ஆரம்பிச்சது. இன்னைக்கு இதுவே என்னுடைய பிரதான பிஸினஸா மாறிடுச்சு...’’ என்னும் ராக்கேஷ் பாபுவிற்கு இணையத்தில் பல லட்சம் ரசிகர்கள், ஃபாலோயர்கள். இதன் வழியாக அங்கேயும் கணிசமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி... எப்படி கார்களை உருவாக்குகிறார், ஒரு கார் உருவாக்க எவ்வளவு நாட்கள் ஆகும்... என்ற கேள்விகளுக்கு புன்னகையுடன் பதில் அளிக்க ஆரம்பித்தார் ராக்கேஷ்.
‘‘உடைந்த கார்களின் பாகங்கள், கதவுகள்... இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா சேகரிச்சுத்தான் கார்கள் உருவாக்கணும்; உருவாக்கறோம். நானும் என் நண்பர்களும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் கேரேஜ்கள், வெல்டிங் பட்டறைகளுக்கெல்லாம் போயி அங்கே இருந்து உடைந்த கார்களுடைய பாகங்களை வாங்குவோம் அல்லது சேகரிப்போம்.

தொடர்ந்து கொண்டு வந்த பாகங்களைக் கொண்டு கார் உருவாக்கத்துக்காக திட்டமிட ஆரம்பிப்போம். இதெல்லாம் முடிச்சு, வெல்டிங் வேலைகள், என்ஜின் பணிகள் ஆரம்பிக்கும். இப்படியாக எல்லாம் முடிக்க ஒரு வண்டிக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகும். 

இன்னும் உற்பத்தியைப் பெருக்க கொஞ்சம் இதன் மூலம் வருமானமும் எடுக்க முடிவு செய்து நிறைய புரமோஷன்களும் செய்திட்டு இருக்கோம். மேலும் எங்களுடைய பட்டறைக்கு ஆட்களையும் கூட சம்பளத்தில் அமர்த்தினால் இன்னும் கொஞ்சம் சிக்கிரம் எங்களால் கார்களை டெலிவரி கொடுக்க முடியும்.

ஒரு காரை முடிச்சிட்டு, வீடியோக்கள் எல்லாம் பதிவு செய்து ஹப்பாடா... என நிமிர்ந்தால் அப்போது எந்தக் காரை உருவாக்கினோமோ அந்தக் கார் நிறுவனத்தின் முதலாளியே அழைத்துப் பாராட்டுவார்!அப்படியான சம்பவங்கள் எல்லாம் நடக்கும் போது பட்ட பாடெல்லாம் பறந்திடும்...’’ நெகிழ்கிறார் இந்த கார் லவ்வர்.

ஷாலினி நியூட்டன்