Waterproof ஆடைகளில் பர்பெரியே பேரரசன்!



உலகின் தலைசிறந்த பத்து ஆடம்பர ஃபேஷன் பிராண்டுகளை பட்டியலிட்டால் ‘பர்பெரி’க்கு நிச்சயம் ஓர் இடமிருக்கும். அந்தளவுக்கு ஃபேஷன் உலகில் முன்னணியில் இருக்கும் பிராண்ட் இது. ஆண்கள், பெண்களுக்கான ரெடிமேட் ஆடைகள், காலணிகள், தோல் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பேக்குகள் என அனைத்துவிதமான ஃபேஷன் பொருட்களையும் தயாரிக்கிறது ‘பர்பெரி’.

எளிய, நடுத்தர மக்களுக்காக உருவான இந்த பிராண்ட், இன்று பெரும் செல்வந்தர்களால் மட்டுமே நுகரப்படுகிறது. இந்த பிராண்டை உருவாக்கியவர், தாமஸ் பர்பெரி. ஆடைகள் என்பது வெறும் ஃபேஷன் மட்டுமல்ல; அது பாதுகாப்பு சம்பந்தமானது என்ற கொள்கையுடையவர் இவர்.இங்கிலாந்தில் உள்ள பிராக்கம் எனும் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஓர் எளிய குடும்பத்தில், 1835ம் வருடம் பிறந்தார், தாமஸ் பர்பெரி.

பிராக்கம் கிரீன் வில்லேஜ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த தாமஸ், பதின் பருவத்திலேயே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார். உள்ளூரில் இருந்த ஒரு துணிக்கடையில் உதவியாளராகப் பணிபுரிந்தார். அங்கே பணிபுரிந்த நாட்களில்தான் ஆடைகளின் மீதான ஆர்வம் தாமஸுக்கு உண்டானது. அந்தக் கடையில் இங்கிலாந்தில் நிலவும் காலநிலைக்கு உகந்த மாதிரியான ஆடைகளே இல்லை என்பதை கவனித்தார். குறிப்பாக மழைக்காலத்தில் அணியக்கூடிய ஆடைகளே இல்லை.

மட்டுமல்ல, அன்றைய காலத்தில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப ஆடைகளை வடிவமைப்பது குறித்து பெரிதாக யாருமே யோசிக்கக்கூட இல்லை. ஆனால், இருபது வயதிலேயே மழையின் போது தண்ணீர் புகாத ஆடையை வடிவமைக்க வேண்டும் என்று இலட்சிய வெறியுடன் செயல்பட ஆரம்பித்தார் தாமஸ். ஒரு வருடத்திலேயே, அதாவது 1856ம் வருடம் பேசிங்ஸ்டோக் எனும் இடத்தில் ‘பர்பெரி’ என்ற பெயரில் ஒரு துணிக்கடையை நிறுவினார். அப்போது அவரது வயது 21.

இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்பது மட்டுமே கடை திறந்ததற்கான ஒரே நோக்கம். இந்தக் கடைதான் இன்று உலகின் முன்னணி ஃபேஷன் பிராண்டாக பரிணமித்திருக்கிறது. கடை திறந்த நாட்களில் பேசிங்ஸ்டோக்கில் 4,500 பேர் மட்டுமே வாழ்ந்து வந்தனர். 
இன்று ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஆரம்பத்தில் தாமஸ் வடிவமைத்த ஆடைகள் தினமும் அணியக்கூடிய வகையில் இருந்தன. வியாபாரம் நன்றாகப் போனாலும் கூட தாமஸ் திருப்தியடையவில்லை. பரிசோதனை முயற்சிகளில் இறங்கினார். ஆடைகளை வடிவமைப்பதில் பிரச்னையில்லை; மெட்டீரியல்களில்தான் பிரச்னை என்பதைக் கண்டுகொண்டார்.

நெசவாளிகளுடன் சேர்ந்து புதுவிதமான மெட்டீரியல்களை உருவாக்கினார் தாமஸ். மீன் பிடித்தல் மற்றும் வேட்டையாடப் போகும்போது அணிவதற்கான ஆடைகளை அந்த மெட்டீரியலில் உருவாக்கினார். இதுவும் தாமஸைத் திருப்திப் படுத்தவில்லை. காரணம், இந்த ஆடைகளில் தண்ணீர் புகுந்தது. கிராமப்புறத்தில் வாழும் எளிய, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களுக்கான தண்ணீர் புகாத ஆடைகளை வடிவமைக்க வேண்டும் என்பது அவரது முதன்மைத் தேடலாக மாறியது.

இதற்காக இங்கிலாந்தில் இயங்கி வந்த ஒரு பஞ்சாலையுடன் கூட்டு சேர்ந்தார். 1860களில் தண்ணீர் புகாத ஆடைகளை வடிவமைத்தார் தாமஸ். இந்த வகையான ஆடைகளுக்கு பெரிய தேவை ஏற்பட, ‘பர்பெரி’ பிராண்டாக பரிணமித்தது. அடுத்த சில வருடங்களில் ‘பர்பெரி’யின் பிசினஸ் பெரிதாக விரிவடைந்தது. 1871ம் வருடம் ‘பர்பெரி’யில் 70 பேர் வேலை செய்தனர். 1878ல் துணிகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழிற்சாலையை நிறுவினார் தாமஸ். 200 ஊழியர்களுடன் இயங்கிய அந்த தொழிற்சாலை, அனைவருக்குமான ரெடிமேட் ஆடைகளை உற்பத்தி செய்தது.

பிசினஸை இங்கிலாந்து முழுவதும் விரிவாக்க வேண்டும் என்றால், ‘பர்பெரி’ என்ற பிராண்டுக்கான அங்கீகாரமும், விளம்பரமும் தேவை. இதற்காக அப்போது பெரிய பதவிகளில் இருந்த ஆளுமைகளை ஃபேஷன் மாடல்களாக மாற்றினார். ஆம்; அந்த ஆளுமைகள் அணிவதற்கான ஆடைகளை இலவசமாக நெய்து தந்தார் தாமஸ். அவர்கள் ‘பர்பெரி’யை அணிந்ததன் மூலம் பிராண்டுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

1879ம் வருடம் ‘காபர்டைன்’ என்ற புதிய வகை துணியைக் கண்டுபிடித்தார் தாமஸ். ஃபேஷன் உலகுக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே தாமஸ் கொடுத்த கொடையாக காபர்டைன் கருதப்படுகிறது. எகிப்தியன் பஞ்சினால், தண்ணீர் புகாத வகையில் நெருக்கமாக நெய்யப்பட்ட துணி வகை இது. கோடை வெப்பம், குளிர் காற்று, மழை, முட்கள் என எதுவும் தீண்ட முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டது, ‘காபர்டைன்’.

1888ம் வருடம் காபர்டைன் துணிக்கான காப்புரிமையைத் தன்வசமாக்கினார் தாமஸ். உலகம் முழுவதும் ‘பர்பெரி’ பிராண்ட் சென்றடைவதற்கான விளம்பரமாக ‘காபர்டைன்’ அமைந்தது . இதில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை வாங்குவதற்காக சாதாரண மக்களிலிருந்து, பெரும் செல்வந்தர்கள் வரை அனைவரும் காத்திருந்தனர். 1891ல் லண்டனில் புதிதாக ஒரு கடையைத் திறந்தார் தாமஸ். இங்கிலாந்தின் முக்கிய ஃபேஷன் பிராண்டாக உருவெடுத்தது ‘பர்பெரி’.  

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் காலரில் மட்டுமே பட்டன் வைக்கப்பட்ட டைலாக்கன் கோட்டை வடிவமைத்தார் தாமஸ். இராணுவ தளபதிகள், அதிகாரிகளின் மத்தியில் வெகு பிரபலமாகியது இந்த கோட். 1914லிருந்து 1918 வரையிலான காலகட்டத்தில், அதாவது முதல் உலகப்போரின் போது டிரெஞ்ச் கோட்களை வடிவமைத்தது ‘பர்பெரி’. துப்பாக்கி, விசில் உட்பட இராணுவ உபகரணங்களை இந்த கோட்டில் வைத்துக்கொள்ள முடியும். தண்ணீர் புகாது. கடுமையான குளிரைத் தாங்கும்.  

போருக்குப் பிறகு பொது மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் டிரெஞ்ச் கோட்களை விரும்பி அணிய ஆரம்பித்தனர். டிரெஞ்ச் கோட்கள் ‘பர்பெரி’யின் அடையாளமாகவே மாறியது.
1926ல் தாமஸ் மரணமடைய, அவருடைய வாரிசுகளின் வசமானது, ‘பர்பெரி’. 1955ம் வருடம் வரையிலும் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதற்குப் பிறகு இங்கிலாந்தில் இயங்கி வரும் ‘கிரேட் யுனிவர்சல் ஸ்டோர்ஸ்’ எனும் நிறுவனத்தின் வசமானது.

அறுபதுகளில் இங்கிலாந்திலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஐந்து கோட்களில் ஒன்று ‘பரிபெரி’யுடையதாக இருந்தது. ‘கிரேட் யுனிவர்சல் ஸ்டோர்ஸி’ன் வசமான ஆடம்பர பிராண்டாக மாறியது ‘பர்பெரி’. இந்த பிராண்டிலிருந்து ஆடைகள் மட்டுமல்லாமல் பேக்குகள், தோல் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் என ஏராளமான ஃபேஷன் பொருட்கள் வெளியாகின. செல்வந்தர்கள் மட்டுமே வாங்கும் அளவுக்கு அவற்றின் விலைகளும் உச்சம் தொட்டன.

இப்போது வெயில், குளிர், மழை என எல்லா காலங்களுக்கும் உரித்தான ஆடைகளை வடிவமைக்கிறது ‘பர்பெரி’. உலகம் முழுவதும் 500க்கும் மேலான இடங்களில் பிரத்யேகமான கடைகள் இருக்கின்றன. ஆன்லைனிலும் ‘பர்பெரி’யின் தயாரிப்புகள் கிடைக்கின்றன. இன்றும் ‘கிரேட் யுனிவர்சல் ஸ்டோர்ஸி’ன் கீழ் இருக்கிறது, ‘பர்பெரி’.

கவசம்

துருவ ஆய்வாளர்கள், கடும் குளிரில் மலை ஏறுபவர்கள் என பல சாகச நாயகர்களின் கவசமாக இருந்திருக்கிறது; இருக்கிறது ‘பர்பெரி’. உதாரணம்,  நார்வேவைச் சேர்ந்த புகழ்பெற்ற துருவ ஆராய்ச்சியாளர் மற்றும் விலங்கியல் நிபுணர், ஃபிரிட்ஜோப் நான்சென். 1893ம் வருடம் ஆர்க்டிக் பகுதியை ஆய்வு செய்யப்போகும்போது ‘பர்பெரி’யின் காபர்டைன் ஆடையைத்தான் அணிந்தார். துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக ‘பர்பெரி’யின் ஆடையை அணிந்த முதல் நபர் ஃபிரிட்ஜோப்தான்.

இவரைத் தொடர்ந்து  பல துருவ ஆய்வாளர்கள் ‘பர்பெரி’யின் வாடிக்கையாளர்களாக மாறினார்கள். 1911ம் வருடம் தென் துருவத்தை அடைந்த முதல் நபரான ரோல் அமுண்ட்சென்னுக்கும், 1914ல் அண்டார்க்டிகாவுக்குப் பயணம் மேற்கொண்டத் எர்னெஸ்ட் ஷாக்லெட்டனுக்கும் காபர்டைனில் ஆடைகளை வடிவமைத்துத் தந்தது, ‘பர்பெரி’. 1924ல் காபர்டைன் ஜாக்கெட்டை அணிந்து எவரெஸ்ட்டில் ஏறினார், ஜார்ஜ் மல்லோரி.

த.சக்திவேல்