ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர்!



ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.

அதுமட்டுமல்ல. 
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைக் கைப்பற்றிய நான்காவது இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெற்றுள்ளார் அவர். இதற்குமுன் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பிஷன் சிங் பேடி ஆகியோர் நம்பர் ஒன் ஆகியிருந்தனர். இவர்களெல்லாம் சுழற்பந்து வீச்சாளர்கள். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் நம்பர் ஒன் ஆகவில்லை.

இந்திய வேகப்பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை 1979ல் கபில்தேவ் ஐசிசியின் தரவரிசையில் இரண்டாமிடமும், 2010ல் ஜாகீர்கான் மூன்றாமிடமும் பிடித்திருந்தனர். இதன்பிறகு பும்ரா சமீபம்வரை மூன்றாவது இடத்தில் இருந்தார். 
இப்போது இங்கிலாந்து உடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி சிறந்த வீரர் விருதும் வென்று நம்பர் ஒன் ஆகியுள்ளார்.  குஜராத்தின் அகமதாபாத் நகரில் 1993ம் ஆண்டு பிறந்தவர் பும்ரா. சீக்கிய பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஜஸ்பீர்சிங், பும்ராவிற்கு ஏழு வயது இருக்கும்போதே காலமாகிவிட்டார். இதனால், தாய் தல்ஜீத் பும்ராவையும், அவர் சகோதரி ஜூகிகாவையும் கஷ்டப்பட்டு வளர்த்தார்.

அகமதாபாத்தின் வஸ்த்ராபூர் பகுதியிலுள்ள நிர்மன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் பும்ரா. அவரின் அம்மா அங்கு துணை முதல்வராகப் பணியாற்றினார். சிறுவயதிலேயே கிரிக்கெட் ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய 14 வயதில்தான் கிரிக்கெட் வீரராக ஆசைப்படுவதாக தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.

பிறகு அவரின் தாய், இப்போது குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் சித்தார்த் திரிவேதியின் தந்தையான கிஷோர் திரிவேதியின் அகடமியில் பும்ராவைச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார். அங்கிருந்து பும்ராவின் கிரிக்கெட் ஜர்னி தொடங்கியது.

அப்போதே பும்ராவின் வேகபந்து வீச்சுமுறை வித்தியாசமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார் கிஷோர் திரிவேதி. இவரும், இன்னொரு பயிற்சியாளரான கேதுல் புரோஹித்தும்தான் பும்ரா இன்று இந்த இடத்திற்கு வரக் காரணமாக இருந்தவர்கள்.‘‘பும்ரா குறைந்த தூரத்திலிருந்து ஓடி வந்து வேகமாக கையை வீசி பந்து போடுவதைப் பார்த்தேன். 

அப்போதே நிச்சயம் ஒருநாள் பும்ரா சிறப்பாக வருவான் என்பது தெரியும். லைன் மற்றும் லென்த்தை மட்டும் எப்போதும் பராமரிக்க வேண்டும் என அவனிடம் தெரிவித்தேன். அவனை உற்றுநோக்கியபோது அவன் பந்தை எறிவதில்லை என்பதும் தெரிந்தது. இந்த ஆக்‌ஷன் பந்துவீச்சை ஒருபோதும் கைவிடாதே என்றும் கேட்டுக்கொண்டேன்...’’ என்கிறார் கிஷோர் திரிவேதி.

பிறகு, பும்ரா பிரஹலாத் நகரில் உள்ள ராயல் கிரிக்கெட் அகடமியில் இணைந்தார். அங்கே பயிற்சியாளரின் நம்பிக்கையைப் பெற்றதுடன் யாக்கர் வீசுவதை இன்னும் மெருகேற்றினார்.
இருந்தும் ஆரம்பத்தில் பும்ரா கிரிக்கெட்டை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தாய் தல்ஜீத் பயந்துபோய் கிஷோர் திரிவேதியிடம் அவனுக்கு கிரிக்கெட்டில் எதிர்காலம் இருக்கிறதா எனக் கேட்டுள்ளார்.

‘‘அவனுக்கு நிறைய திறமை இருக்கிறது. பயிற்சிக்கு தவறாமல் வந்தால் நிச்சயம் மாநில அளவிலான கிரிக்கெட்டிற்கு அவனை தயார்படுத்திவிடுவேன்...’’ என பும்ராவின் தாயிடம் வாக்களித்துள்ளார் கிஷோர் திரிவேதி. ஆனால், இந்த வார்த்தைகளை எல்லாம் தவிடுபொடியாக்கி இன்று சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய வீரராகி இருக்கிறார் பும்ரா. 

அவரின் வேகப்பந்துவீச்சால் 19 வயதில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஐபிஎல்லில் எடுத்தது. அதற்குமுன் சில உள்ளூர் போட்டிகளில் அவரின் பவுலிங் ஆக்‌ஷன் நடுவர்களால் ஆட்சேபணை செய்யப்பட்டது. ஆனால், எல்லாவற்றையும் கடந்து சர்வதேச போட்டிக்குள் நுழைந்தார் பும்ரா.

2016ல் ஆஸ்திரேலியாவுடன் முதன்முதலாக ஒருநாள் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பும்ரா. அதே ஆண்டு டி20 போட்டியிலும் அறிமுகமானார். 2018ல்தான் அவர் டெஸ்ட் போட்டிக்குள் சேர்க்கப்பட்டார். இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் 155 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் பும்ரா. இதில் ஒரு இன்னிங்ஸில் மட்டும் ஐந்து விக்கெட்டுகளை பத்துமுறை கைப்பற்றியுள்ளார்.

இதுதவிர, 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளும், 62 டி20 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதிலெல்லாம் அவரின் சராசரி முறையே 20.19, 23.55, 19.66 ஆகும். இதனால்தான் இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சில் தவிர்க்கமுடியாத பெயராக மிளிர்கிறார் பும்ரா.

பி.கே