சிறுகதை - நெஞ்சின் மேல் ஒரு யானை
சென்ற வார தொடர்ச்சி
இன்று அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு ஆண், ஒரு பெண்... இருவரும் மேல்படிப்புக்காக அமெரிக்கா போயிருக்கிறார்கள்.வாழ்க்கை ராகவனை அதன்போக்கில் இழுத்துக்கொண்டு போனது. என்னதான் சத்தியம் செய்து தந்திருந்தாலும், நாகுவை அவ்வப்போது நினைத்துக்கொள்வான். சில நண்பர்கள் மூலம் அவளைப் பற்றிய செய்திகள் அவனுக்குத் தெரிய வரும். அதுவும்கூட ஒரு சந்தர்ப்பத்தில் கட்டாகி ஒரு கட்டத்தில் அவள் எங்கிருக்கிறாள் என்பதே தெரியாது போனது.
 ராகவனுக்கு திருமணமானது தெரிந்த நொடி அவள் அப்படியே ஒடுங்கிப்போனாள் என்பதுதான் முதல் தகவல். பின் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக தகவல். அதற்கும் பின் அவளுக்கு திருமணம் ஆகப்போவதாக தகவல். அந்தத் தகவலுக்குப் பின் எந்தத் தகவலும் அவள் பற்றி இல்லை.இன்றோ அவளுக்கும் அவனுக்கும் திருமணக் கனவு! படுக்கையில் இருந்து எழுந்து பல் துலக்குதல், பாத்ரூம் போதல் என்கிற அனிச்சைகளின் போதெல்லாம்கூட அவள் நினைப்புதான்!
 ‘எப்படி இப்படி ஒரு கனவு வர முடியும்?அவளை சமீபத்தில் நான் நினைக்கவேயில்லையே..?
கனவில்கூட கருக்குலையாமல், அப்படியே இருக்கிறாளே... இன்று எப்படி இருப்பாள்..? எனக்கு வயதானதில் நரைத்துவிட்டது. அவளுக்கும் நரைத்து முகத்தில் வரிகள் விழுந்திருக்குமோ? என்னை இப்போது அவள் பார்த்தால் நிச்சயம் அடையாளம் தெரியாது. அவளைப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் இருக்குமோ?’
ராகவன் தனக்குள்ளான கேள்விகளோடு வழக்கமான காபியைக் குடித்தபோது, “டீ எப்படி இருக்கு?” என்று விமலா கேட்டாள். பிறகுதான் குடித்தது டீ என்றே தெரிந்தது. “நல்லா இருக்கு நீங்க டீ குடிச்ச லட்சணம். காபிப்பொடி தீர்ந்துபோச்சு. முதல்ல வாங்கிட்டு வாங்க. இந்த டீயை குடிக்கும்போது ஏதோ ஒரு டீக்கடை வாசலில் நிக்கிற மாதிரியே இருக்கு...” என்று சடைத்துக்கொண்டாள்.
அன்றைக்கு காய்கறி மார்க்கெட்டுக்கு போய்விட்டு, காபிப்பொடி வாங்க காபி ஷாப்புக்கு போன இடத்தில் பால்ய சினேகிதன் பத்மநாபன் கண்ணில் பட்டான்.
சிறுவயதில் இருந்தே ரஜினி ரசிகன்.
கையில் ‘ரஜினி வாழ்க’ என்று பச்சை குத்திக் கொண்டிருப்பவன். அதனாலேயே அவன் ஞாபகம் நண்பர்கள் இடையே அழியாதிருந்தது. அந்த பச்சையை தன் நண்பர்கள் மனதில் குத்தாமல் குத்திவிட்டிருந்தான். அப்படிப்பட்ட பத்மநாபனைப் பார்க்கவும் பல பல்புகள் ராகவனுக்குள் அணைந்து அணைந்து எரியத் தொடங்கிவிட்டன. “பத்தா... எப்பட்றா இருக்கே?”
“டேய் ராகு... நீ எப்படிடா இருக்கே?” “ராகவான்னு ஒரு எழுத்து சேத்து கூப்பிட்றா... ராகுன்னா எனக்கு கோபம் வரும்னு தெரியும்தானே?” “நீ மட்டும் பத்தாங்கலாமா... நான் என்ன பூசணிப்பத்தையா, இல்லை பறங்கிப்பத்தையா?” “இந்த சண்டைய நாம 25 வருஷத்துக்கு மேல போட்றோம் இல்ல..?”
“கரெக்டா சொன்னே. உள்ளூர்லயே இருந்தும் எப்பவாவதுதான் பாத்துக்கறோம். இல்ல?” “அப்படியாவது பாத்துக்குறோமே... நம்ம செட்டுல பாதிப்பேர் பரலோகத்துக்கே போயிட்டாங்க. நாமதான் மிஞ்சி இருக்கோம்னு நினைக்கிறேன்...” ராகவன் அப்படிச் சொன்ன நொடி பத்மநாபன் ஒரு மாதிரி கண்ணடித்து,“உனக்கொண்ணு தெரியுமா...” என்று அவன் பாணியில் கேட்டான்.
“சொல்லுடா தெரிஞ்சுக் கிறேன்...” “உன் ஆள் இப்ப இங்கதான் இருக்கா...” “எ... எ... என்னடா சொல்றே, என் ஆளுன்னு யாரை நீ சொல்றே?”
“அவ்வளவு மறதியாடா உனக்கு? இல்ல நடிக்கிறியா?” “நா... நாகலட்சுமியையா சொல்றே?” ராகவன் தயங்கித்தான் கேட்டான்.“அவளேதான்... இதே மாதிரி ஒரு கடைலதான் பார்த்தேன். அப்படியே இருக்காடா... நாமல்லாம்தான் கெழடாயிட்டோம். அவளுக்கு நரைகூட விழலை. என்ன ஹேர் டை யூஸ் பண்றே நாகுன்னு வேடிக்கையாக கேட்டேன். ஒரிஜினல்னா. என்னால நம்பவே முடியல...” “அப்புறம்?”
“என்ன அப்புறம்... இவ்வளவு நாளா ஃபாரின்ல இருந்தாளாம். கடைசி காலத்தை சொந்த ஊர்ல கழிக்கற விருப்பத்துல திரும்ப வந்திருக்கா. அவ வந்து மூணு மாசமாச்சாம்...” “அவளுக்கு எத்தனை பசங்கடா?”“பசங்களா... கல்யாணமே ஆகல... அப்புறம் பசங்களுக்கு எங்க போக?” “நிஜமாவா... கல்யாணம் ஆயிடுச்சுன்னுல்ல கேள்விப்பட்டேன்...”
“அஃப்கோர்ஸ்... அவ அப்பா கம்பல் பண்ணி சம்மதிக்க வைத்து மாப்ளையும் பாத்துட்டாரு. ஆனா, அதை கடைசி நிமிஷத்துல எப்படியோ தவிர்த்துட்டாபோல இருக்கு...” அந்த பதில் ராகவனை வலது கையால் அவன் மார்பை பிசையச் செய்தது.“என்னடா ரொம்ப ஃபீலிங்கா இருக்கா? உன்னப்பத்திக்கூட கேட்டா... சொன்னேன். ரெண்டு பசங்கதானே?” “அ... ஆமா...”
“ஃபாரீன்ல இருக்காங்கல்ல... அதையும் சொன்னேன்...” “அப்ப நாகு இப்ப யாரோட இருக்கா?” “அவ சிஸ்டர் கூட இருக்கறதா சொன்னா...?” “எங்கேன்னு கேட்டியா?”
“பழைய அதே அக்ரிணி அப்பார்ட்மெண்ட்ல முன்ன குடியிருந்த அதே வீட்லதான். சொந்த வீடாச்சே, வாடகைக்கு விட்ருந்தாங்கலாம். இப்ப அவங்களே குடி வந்துட்டாங்க. ஆமா என்ன ஒரு மாதிரியாயிட்ட... ஃபீல் பண்றியா? நல்லா பண்ணு. இப்பகூட ஃபீல் பண்ணலேன்னா நீயெல்லாம் மனுஷனே இல்லை...” பத்மநாபன் கேட்டபோது ராகவன் விழிகளில் நீர் சுரக்கத் தொடங்கியிருந்தது.
“அழுவுறியா அழு. நல்லா அழு. அவளும் அழுதுகிட்டுதான்டா இருக்கா. நீயாவது இப்பதான் அழறே, அவ 25 வருஷமா அழுதுகிட்டிருக்காடா...”“என் குடும்ப நிலை தெரிஞ்சுமா பத்து நீ இப்படி சொல்றே?”“அடப்போடா நீ எல்லாம் காதல்ங்கற வார்த்தையை சொல்லக்கூட தகுதியில்லாதவன்டா. போகட்டும் விடு.
இனி என்ன பேசி என்ன பிரயோஜனம்...”“இல்லடா... இவ்வளவு நாளும் அவ கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துட்டிருக்கறதாதான்டா நினைச்சுக்கிட்டிருந்தேன். நீ இப்ப இப்படி சொல்லவும் நெஞ்சுமேல யானை நிக்கற மாதிரி இருக்குடா...”“நல்லா நிக்கட்டும்... கொஞ்சமாவது நீயும் கஷ்டப்படணும்ல?”பத்மநாபனின் பதிலுக்கு ஒரு மறுபதிலை ராகவனால் சொல்ல முடியவில்லை.
அதன்பின் அன்றைய தினம் முழுக்க சதா அவள் நினைப்புதான். அவனின் கனத்த மௌனத்துக்கான காரணத்தை விமலா கண்டுபிடிக்க முடியாதபடி அவள் எதிரில் எப்படியோ நடித்தான்.
அன்று ஒரு முடிவோடு நாகலட்சுமியைக் காணப் புறப்பட்டுவிட்டான். அவள் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டால் கொஞ்சம் மனம் இதமாகும் என்று தோன்றியதும் ஒரு காரணம். அந்த யானையும் சற்று கீழ் இறங்கும் என்று தோன்றியது.
ஆனால், அப்பார்ட்மெண்டுக்குள் நுழையும்போதே ஜெரகிண்டி சப்தமும், சாவு வீட்டு வாசலில் போடும் கொள்ளிக்கட்டை புகையும் ஒரு சாவு நிகழ்ந்திருப்பதை ஊர்ஜிதம் செய்துவிட்டிருந்தது.
யார் என்று தெரிய வந்தபோது நெஞ்சில் ஏறி நின்ற அந்த யானை குதிப்பதுபோல் ஆகிவிட்டது. நாகலட்சுமிதான் மாரடைப்பில் உயிரை விட்டிருந்தாள்!
கண்களில் குளத்தோடு, ஃப்ரீசருக்குள் அவளைப் பார்த்தபோது அவன் இறுதியாகப் பார்த்த அதே தோற்றத்தில் சிறிய மாற்றங்களுடன்தான் கிடந்தாள்.
வெறியோடு கத்தி அழவேண்டும் போல் இருந்தது சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். நாகலட்சுமியின் தங்கை கல்யாணி அவன் அருகில் வந்து, “நீங்கள் ராகவன்தானே” என்று சரியாகக் கேட்டாள். அவன் கண்களின் கண்ணீர்த் துளி ஆமோதித்தது.“நீங்க வருவீங்கன்னு நாகு சொல்லியிருந்தா, நீங்களும் வந்துட்டீங்க.
அக்கா ஆத்மா சாந்தியடையும்னு நான் இப்ப நம்பறேன்...” என்ற கல்யாணியை உப்புக்கண்ணீர் நடுவே கலங்கலாகப் பார்த்தவன், “நாகு திரும்பி வந்ததே தெரியாது. ஆமா நாகு கல்யாணமே பண்ணிக்கலையா?” என்று கேட்டான்.“இப்படி கேப்பீங்கன்னும் சொன்னா. ஹார்ட் அட்டாக் வந்து ட்ரீட்மெண்ட் போயிட்டுயிருக்கச்சே கூட உங்களப் பத்திதான் அதிகம் பேசினா...” “கல்யாணம்..?”
“அது என் வரைல ஒரு கெட்ட வார்த்தைன்னு சொல்வா. இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்...” “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். எனக்கு காதல் வந்திருக்கவே கூடாது. மூணு தங்கைகளுக்கு அண்ணனாக அன்னிக்கு நான் இருந்ததும் ஒரு காரணம்...” “எந்த சமாதானமும் சொல்ல வேண்டாம். நீங்க சந்தோஷமா வாழ்ந்ததுல, அக்காவுக்கு சந்தோஷம்தான். முதல்ல உங்க பிள்ளைகளை யு.எஸ்-ல பாத்திருக்கா... பழகியுமிருக்கா. நாகலட்சுமியா இல்ல... வெறும் லட்சுமியா...”
“ஓ... லட்சுமி ஆன்ட்டின்னு என் பசங்க சொன்னது இவளத்தானா?”
நாகுவின் உடல் குளிரக்குளிர படுத்திருக்கும் ஃப்ரீசரை ஒட்டி நின்றபடி அவர்கள் பேசுவதை நாகுவின் ஆத்மா கேட்டதோ இல்லையோ... யாருக்குத் தெரியும்?“ஐ’ம் சாரி, நான் பெரிய பாவி...” ராகவன் கல்யாணி முன் மெல்லிய விசும்பலுடன் சொன்னான்.
“நீங்க இப்ப என்ன சொல்லி, என்ன புண்ணியம்? என் அக்கா இனி என்ன வரவாப்போறா? இல்ல நீங்கதான் அக்கா மாதிரி காதல் நினைவுகளோடயே வாழ்ந்திட முடியுமா? கொஞ்சம் இருங்க...” கல்யாணி உள்புறம் சென்று திரும்பி வந்தபோது கையில் ஒரு அட்டைப்பெட்டி இருந்தது.
அதில் அவளுக்கு என்று எழுதியிருந்த கடிதங்கள், அவன் தந்திருந்த பரிசுப் பொருட்கள், அவர்கள் அன்று திரைப்படத்தை ஒன்றாகப் பார்த்தபோது எடுத்த திரைப்பட டிக்கெட்டுகள் என்று எல்லாம் இருந்தன!“நான் பிழைக்கமாட்டேன்... அவர் நிச்சயம் என் சாவுக்கு வருவார்.
வந்தா, இதை எல்லாம் கொடுத்திடுன்னு அக்கா சொல்லியிருந்தா... இதோ இப்ப கொடுத்துட்டேன்...” கல்யாணியின் ஒவ்வொரு வார்த்தையும் அவனை அவள் சிலுவையில் இட்டு அறைவதுபோல் இருந்தது. அந்த அட்டைப்பெட்டியை மார்போடு அணைத்துக் கொண்டான். அப்படி ஒன்றும் கனமாக இல்லை. ஆனாலும் யானை ஒன்று ஏறி நிற்பது போன்ற அந்த உணர்ச்சி குறையவே இல்லை.
திரைப்படங்களிலும், கதைகளிலும் மட்டுமே இதுபோன்ற தருணங்களை உணர்ந்திருந்தவன் அன்று தனக்கென்று உணர்ந்தபோது, உடல் முழுக்க ஒரு இனம்புரியாத வேதனையை அனுபவித்தான். அவன் நெஞ்சும் அடுத்த வினாடி வலிக்கத் தொடங்கிவிட்டது.வீடு திரும்பி தன் படுக்கையறைக்குச் சென்று படுக்கையில் விழுந்தவன், அதன்பின் எழவேயில்லை.
‘யாரும் காதலிக்காதீர்கள்... காதலித்தால் கல்யாணத்தில் அதை முடிக்காமல் விட்டுவிடாதீர்கள்!’ என்கிற ஒரு எண்ணம் திரும்பத்திரும்ப அவனுக்குள் கற்பாறை அலையாட்டம் முட்டி மோதிற்று. அதே வேகத்தில் வியர்த்துக்கொட்டி நெஞ்சின் மேல் நின்ற துரோக யானை கால்களைத் தூக்கி நின்று ஆட ஆரம்பித்தது. வலி தாங்காது கத்தினான்.
ஆஸ்பத்திரியில் மிக சிரமப்பட்டு கண்விழித்த அவன் அருகில் விமலா அமர்ந்திருந்தாள்.“விமி...” என்றான் ஈன சுரத்தில்.அவள் மெல்ல அவன் கைகளைப் பற்றினாள். வெறித்தும் பார்த்தாள். பின் நிதானமாக பேசத் தொடங்கினாள்.“எல்லாம் எனக்குத் தெரியும். எப்பவும் எஸ்கேப் ஆகறதுதான் உங்க வழக்கமா? இப்பக்கூட செத்து தப்பிக்க பார்த்தா, நான் விட்ருவேனா? அதுக்காக என்னால அந்த நாகலட்சுமியைப் போலவும் நடந்துக்க முடியாது.
நான் யு.எஸ்-ல இருக்கற என் பிள்ளைககிட்ட போய் இருந்துக்கறேன். தனியா இங்க நீங்க கிடந்து தவியுங்க. அதுதான் அந்த நாகலட்சுமிக்கு நீங்க செய்யப்போற ஒரு பரிகாரமா இருக்கும். செய்வீங்கன்னு நம்பறேன்...” என்றபடி கைகளை விடுவித்துக்கொண்டாள்.அதுவரை ஆடியபடியே அவன் நெஞ்சின் மேல் நின்று கொண்டிருந்த யானை, நின்று ஆடியது போதும் என்று கால்மடக்கி அமரத்தொடங்கியது.
- இந்திரா சௌந்தர்ராஜன்
|