11 பேர் + ஸ்டைலிஷ் ஸ்பை + போர்... துருவ நட்சத்திரம் சீக்ரெட்ஸ்



‘‘இது ஜானுடைய சீக்ரெட் பேஸ்மென்ட் டீம். அவங்களுக்கு ஒரு முக்கியமான வேலை. அது என்ன வேலை... எதுக்காக அந்த டீம் உருவாகுது... இந்த டீமுக்கு பின்னணி என்ன... இதெல்லாம் சேர்ந்துதான் ‘துருவ நட்சத்திரம்: சாப்டர் 1’ படம்...’’ ஸ்டைலிஷ் டிரெய்லருடன் நம்மை வரவேற்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.

கடந்த ஐந்தாறு வருடங்களாகவே காதில் கேட்டுக் கொண்டிருந்த இந்தத் தலைப்பின் காரணம் என்ன?

நல்லவேளை நீங்களாவது அஞ்சாறு வருடங்கள் அப்படின்னு சரியா சொல்றீங்க! கிட்டத்தட்ட என்னுடைய ஸ்கூல் நாட்களில் நான் இந்தப் படத்தை ஆரம்பித்தது மாதிரி ஒரு பிம்பம் உருவாகியிருக்கு! படத்தின் ஹீரோ விக்ரம் பெயர்தான் துருவா. அவருடைய பெயர் ஒரு ஸ்பெஷலான நட்சத்திரத்தின் பெயர். ‘துருவ நட்சத்திரம்’. அந்த நட்சத்திரம் மாதிரி விக்ரமும் ஸ்பெஷலான நபர். அதனால் இந்தப் படத்துக்கு அந்தப் பெயர். அப்ப ஜான் யார் என்கிற கேள்வி வரும். அதைப் படத்தில் பார்த்து தெரிஞ்சிக்கோங்க.

யார் இந்த பேஸ்மெண்ட் டீம்?

சர்வதேச அளவில் ஒரு சீக்ரெட் குழு. அவங்களுக்கு மிஷன் கொடுக்கற வரையிலும் நம்மை மாதிரியே சாதாரண மக்களா ஏதோ ஒரு வேலையில் இருப்பாங்க. ஆனா, யாருக்கும் தெரியாது அவங்க எல்லாம் ஒரு சீக்ரெட் ஏஜெண்ட்னு. இந்த பேஸ்மெண்ட் குழுவை ஒரு முக்கியமான பதவியில் இருக்கும் ஒரு சீனியர் ஆபீசர் உருவாக்கி நடத்தறார். ஏன் எதுக்கு... இதுதான் கதை.

விக்ரமுடன் வேலை செய்த அனுபவம்?

‘நீங்களே இல்லை என்றாலும் இன்னொரு ஹீரோ வருவான், அதேபோல் ஒரு வில்லன் போனால் இன்னொரு வில்லனும் வருவான்...’ இதுதான் இந்த சாப்டர்களின் அடிப்படை.
இதைத்தான் கதையின் துவக்கத்திலேயே சொன்னேன். விக்ரமைப் பொருத்தவரை இதுதான் கேரக்டர்னு சொல்லிட்டா போதும். அதற்கு தன்னால் எவ்வளவு மெனக்கெட்டு உழைக்க முடியுமோ உழைத்து ஒரு கெட்டப் கொடுப்பார்.

அதற்கு மேல் நாம் அவர்கிட்ட எதுவும் கேட்கவே முடியாத அளவுக்கு நாம எதிர்பார்த்ததை விடவும் சிறப்பா அமைஞ்சிடும். இந்தக் கதையை நான் சூர்யாவுக்கு சொன்னேன். இன்னும் சில நடிகர்கள் கூட இந்தக் கதையை கேட்டிருக்காங்க. இதையெல்லாம் விக்ரம்கிட்ட சொல்லிட்டுதான் அவருக்கும் கதை சொன்னேன். மும்பை அட்டாக் முடிந்த 15வது வருடத்தில் நடப்பதாக கதை இருக்கும்.

கிரிக்கெட் வர்ணனையாளராக திடீர் அவதாரம் எப்படி நடந்தது?

மேட்ச் துவங்கறதுக்கு ஒரு மணி நேரம் முன்புதான் கூப்பிட்டாங்க. எனக்கும் சர்ப்ரைஸ்தான். இந்தப் படம் கிரிக்கெட் பத்தின படம் கிடையாது. ஆனால், இந்தப் படத்துல ஒரு டீம் இருக்காங்க. அந்த டீம் மொத்தம் 11 பேர் கொண்ட குழு. அந்த ஒரு சின்ன கனெக்‌ஷன் மட்டும்தான் இந்தப் படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள தொடர்பு.  எனக்கு என்னமோ இன்னொரு புரொஃபஷனுக்கான வாய்ப்பு உருவாகி இருக்கறேதானு தோணுது!

பார்த்திபன், விநாயக், ராதிகா, சிம்ரன்... முக்கியமாக பேஸ்மெண்ட் குழுவின் லீடரான இவர்களைப் பற்றி சொல்லுங்க?

பார்த்திபன் சார் நடிப்புக்கு தீனி போட்டுக்கிட்டே இருக்கணும். ‘ஏதாவது கொடுங்க’னு கேட்டுக்கிட்டே இருப்பார். ஆர்வம் உள்ள ஒரு கலைஞன் அவர். படத்துக்கு ஒரு பவர்ஃபுல் வில்லன் தேவைப்பட்டார். அதிலும் இதுவரை மக்கள் பார்க்காத ஒரு வில்லனாக இருக்கணும்னு யோசித்துதான் முதலில் இந்தக் கதைக்கு அருண் விஜய்யை வில்லனாக தேர்வு செய்தேன்.

அதற்கிடையில்தான் ‘என்னை அறிந்தால்’ முடித்தோம். தொடர்ந்து டிடி மலையாளத்தில் ஒரு படம் பார்த்துட்டு விநாயக் பெயரை சொன்னாங்க. அவர் முதலில் இந்தப் பட வில்லன், அப்பறம்தான் ‘ஜெயிலர்’ படம். அந்தப் படத்தில் அவர் வந்ததுக்கும் இப்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நீங்க அவரைப் பார்ப்பதுக்கும் மொத்தமா வேறு ஒரு விநாயக் தெரிவார்.
ராதிகா மேம், சிம்ரன்... என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்னணி சோகம் இருக்கும். ஆனா, அந்தக் கதை எல்லாம் சொல்லி நான் கதையின் பரபரப்பைக் கெடுக்க விரும்பலை.

ஹீரோ விக்ரமுக்கும் ஒரு சின்ன பிளாஷ்பேக் உண்டு. அதையும் எடுத்தாச்சு. முழுமையான ஒரு ஸ்பை த்ரில்லர் படமா கொடுக்கணும்னு நினைச்சு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கேன்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பரதக் கலைஞர் தனஞ்செயன் சார்தான் இந்த பேஸ்மெண்ட் குழுவின் தலைவர். சாதாரணமா அவரை பார்ப்பதற்கு ஒரு சின்ன இன்ஸ்டிடியூட்டில் தமிழ், இங்கிலீஷ் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக இருப்பார். ஆனால், அவருக்குப் பின்னாடி இப்படி ஒரு குழு இருக்கு என்கிற எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. நடிகர் கௌதம் மேனனுக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கே!

கேட்க சந்தோஷமாதான் இருக்கு. ஆனா, ஒவ்வொரு முறையும் ஒரு நடிகனாக வீட்டை விட்டு கிளம்பும்போது வீட்டில் இருக்கிறவங்களுக்கு அது அவ்வளவா பிடிக்கலை. ‘நீ இதுக்காக வந்தவன் கிடையாது’னு ஒவ்வொரு முறையும் எனக்கு உணர்த்திட்டே இருக்காங்க. இப்பவும் கூட ஒரு பெரிய படத்துக்கான பேச்சுவார்த்தைகள் வந்திருக்கு. நிறைய வாய்ப்புகள் வருது. அதேநேரம் என்னுடைய டிராக் இது கிடையாதுன்னு ஒரு குரல் கேட்டுகிட்டே இருக்கு.

ஆனா, நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நடிகர்கள் மேலே ஒரு பெரிய மரியாதை வந்திருக்கு. வெற்றிமாறன் சார், லோகேஷ் கனகராஜ் மாதிரி இயக்குநர்கள் கூட வேலை செய்யும் பொழுது நிறைய கத்துக்கவும் முடிஞ்சது.  ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க வேண்டிய கட்டாயம் உண்டாச்சு. நடிச்சோம். ஒரு சில கேரக்டர்கள் ஒர்க் அவுட் ஆச்சு, ஒருசில கேரக்டர்கள் ‘இதையெல்லாம் நான் ஏன் நடிச்சேன்’னு ஓர் உணர்வைக் கூட கொடுத்துச்சு.  

ஆனா, இது நான் கிடையாது. கேமரா முன்னாடி நின்னு அதன் மூலமா பிரபலமாகணும் என்கிற எண்ணத்தில் நான் வந்தவன் கிடையாது. அதனால்தான் இப்போதைக்கு நடிப்பு வேண்டாம்னு தோணுது. கௌதம் மேனன் படங்கள் என்றாலே பாடல்கள்தான் சட்டென மண்டைக்குள் ஏறும்... படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி சொல்லுங்க?

ஏ.ஆர்.ரகுமான் சாரும் சரி ஹாரிஸ் ஜெயராஜும் சரி சரியான வார்த்தைகள் கிடைக்கற வரைக்கும் விடவே மாட்டாங்க. அதிலும் படத்துக்கு சம்பந்தப்பட்ட வரிகள் அவங்களுக்கு நிச்சயமா வேணும்.

இதில் இவர்களைக் காட்டிலும் அதீத கறாரான பேர்வழி பாடலாசிரியர் தாமரை. அவங்ககிட்ட சீன் சொல்லி வரிகள் வாங்குறதுக்குள்ள பெரிய விவாதமே கூட நடக்கும்.
ஆல்பமா ஐந்து பாடல்கள் இருக்கு. ஆனா, படத்தில் 3 பாடல்கள்தான் வரும். இப்போதைய டிரெண்ட் பால் டப்பா குரலில் ஒரு பாட்டுதான்... ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்...’ இன்னும் ஒரு பாடல் ரிலீஸ் ஆகும்.  

சினிமாட்டோகிராபி... படம் ஆரம்பிக்கும்பொழுது மனோஜ் பரமஹம்சா துவங்கினார். இடையில், எஸ்.ஆர்.கதிர்... கொஞ்ச நாள் அவர் கூடவும் இந்தப் படம் டிராவல் ஆனது. படம் முடியும்போது ஜோமன் டீ ஜான் படத்தை முடிச்சிருக்கார். இடையில் இன்னும் ஒண்ணு ரெண்டு சினிமாட்டோகிராபர்கள் வேலை செய்திருக்காங்க. படத்தின் எடிட்டர் எத்தனை வருடங்கள் ஆனாலும் ஆண்டனிதான்.  

ஏற்கனவே தமிழ் சினிமாவில் உணர்வுபூர்வமான கதைகள் குறையத் தொடங்கிடுச்சு... நீங்களும் ஆக்‌ஷன் டிராக்கை தேர்வு செய்திருக்கீங்களே..?

ஒரு ஆக்‌ஷன் பேக்கேஜா இருக்கணும்னுநினைச்சுதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கேன். மேலும் மல்டி ஸ்டார் படம். தனஞ்செயன் சார் கேரக்டருக்கு முதலில் நான் யோசிச்சது அமிதாப் பச்சன் சார்தான். ஆனா, அவருடைய உடல் நிலை அப்போது சரியில்லை. அடுத்தடுத்த பாகங்களில் நீங்க எதிர்பார்க்கற எமோஷன்கள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

எனக்கும் இதைக்காட்டிலும் ஒரு முழு நீள கிராமத்து திரைப்படம் எடுக்கணும்னு ஆர்வம் இருக்கு. ஒரு பழைய படத்தை எடுத்து ரீமேக் செய்யச் சொன்னால் நிச்சயம் ‘முதல் மரி
யாதை’ படத்தை கமல் சாரை வெச்சு ரீமேக் செய்வேன்.

ஆனா, ‘வெந்து தணிந்தது காடு’ எடுத்தப்பவே ‘உனக்கு ஏன் இந்த வேலை’னு கேட்டவங்க ஏராளம். நிறைய பேர் பாராட்டவும் செய்தாங்க. இந்தக் கதைக்கு எமோஷன் பார்ட் தேவைப்படலை அல்லது பரபரப்பான கதையை தொந்தரவு செய்யணுமான்னு தோணுச்சு. ஸோ முழுமையான ஆக்‌ஷன் படம். அவ்வளவுதான்.

‘துருவ நட்சத்திரம் சாப்டர் 1: யுத்த காண்டம்’ என்ன உணர்வைத் தரும்..?

படம் முழுக்கவே ஸ்பை, பரபரப்பு, சீக்ரெட் மெஷின், உயிர்களைக் காப்பாற்ற நடக்கும் போர்... இப்படி இருப்பதால் இந்தச் சாப்டருக்கு ‘யுத்த காண்டம்’னு பெயர். அடுத்த சாப்டருக்கு ‘உத்தரகாண்டம்’னு பெயர் வச்சிருக்கேன். இந்தப் படம் ஆக்‌ஷன் விரும்பிகள் அத்தனை பேருக்கும் நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். 

அடுத்தடுத்த பாகங்களில் ஒருவேளை ஹீரோக்கள் மாறலாம்,  வில்லன்கள் மாறலாம்... ‘துருவா’ என்கிற பெயரிலேயே ஏகப்பட்ட நடிகர்கள் ஜேம்ஸ் பாண்ட் கதை மாதிரி வரலாம்.இதையெல்லாம் நான் இப்ப சொல்ல முடியாது. ஒரு நல்ல ஸ்டைலிஷ் ஸ்பை திரில்லர் படம்... அதை மனதில் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கேன்.

ஷாலினி நியூட்டன்