3 மரணங்களும் ஓர் இந்தியாவும்!
சென்ற வாரம் மூன்று முக்கிய மரணங்கள் இந்தியாவில் நிகழ்ந்திருக்கின்றன. அதில் ஒருவர் நம் அனைவருக்கும் தெரிந்த, மதிக்கும் தோழர் சங்கரய்யா. மற்ற இருவர் அதிகம் நாம் அறியாதவர்கள். கோடிகளில் புரண்ட பெரும் முதலாளிகள். சுப்ரதா ராயும், பிக்கி ஓபராயும்.ஆனால், இந்த மூன்று மரணங்களும் ஒரு செய்தியை உணர்த்துகின்றன.அதுதான் இன்றைய இந்தியாவின் முகம்.
சுப்ரதா ராய்
மறைந்த இரண்டு கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் சுப்ரதா ராய். இவர் சாமானியனாக இருந்து பல்லாயிரம் கோடி சஹாரா சாம்ராஜ்யத்தை நிறுவியவர். பணத்துக்கு மட்டுமில்லை, சர்ச்சைகளுக்கும் குறைவில்லாதவர்.பீகார் மாநிலத்தில் மத்திய வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் சுப்ரதா. அவரது குடும்பம் அங்கிருந்து உத்தரப்பிரதேச கோரக்பூருக்கு குடிபெயர்கிறது. அரசுக் கல்லூரியில் பொறியியல் டிப்ளமா படிப்பு. அப்பா தவறிவிட, குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு சுப்ரதாவின் தலையில் விழுந்தது. லம்ப்ரட்டா ஸ்கூட்டரில் சிப்ஸ் போன்ற பொருட்களை தெருத் தெருவாக விற்றதுதான் சுப்ரதாவின் முதல் பிசினஸ்.
1976ல் 28 வயதில் சஹாரா ஃபைனான்ஸ் என்ற சீட்டு நிறுவனம் ஒன்றில் தனது தொழில் பயணத்தைத் தொடங்கினார் சுப்ரதா. சின்னதாகத் தொடங்கிய இந்த நிதி நிறுவனம் இரண்டு வருடங்களில் மெல்ல வளர்ந்தது. 1978ல் அந்த நிறுவனத்தை வாங்கிய சுப்ரதா அதை வேறு முறைகளில் பெரிதாக்கத் திட்டமிட்டார். இதனால் நிறுவனத்துக்கு பெரிய லாபம் கிடைத்தது. இங்கே தொடங்கிய சுப்ரதாவின் வளர்ச்சி 12 லட்சம் ஊழியர்கள், 9 கோடி முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட், மீடியா, நிதி, மின்சாரம், கட்டுமானம் என பல துறைகளிலும் வளர்ந்து இந்தியாவின் மிக முக்கியமான தொழில் குழுமமாக உருவெடுத்தது.
சர்ச்சைக்கும் பஞ்சமில்லாதவர்தான் சுப்ரதா. அவரது தடாலடியான முடிவுகள் வினோதமானவை. ஆனால், வெற்றியைத் தந்தன.சஹாரா நிறுவனத்துக்கு 2014ல் மிகப் பெரிய சறுக்கல். சுப்ரதா மீது இருபதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் வந்தன. வழக்கு, விசாரணை, சிறை என்று அவரது வாழ்க்கை மாறியது. இந்தத் தடுமாற்றங்களிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இருப்பதைக் காப்பற்றிக்கொள்ளப் போராடவே அவருக்கு சரியாக இருந்தது.இறக்கும்போது அவரது வயது 75. சொத்து மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய்.
பிரித்வி ராஜ் சிங் ஓபராய்
மறைந்த இன்னொரு கோடீஸ்வரர் பிரித்வி ராஜ் சிங் ஓபராய். சுருக்கமாக பிக்கி ஓபராய். பிறக்கும்போதே பணக்காரர். அவரது தந்தை ஓபராய் ஹோட்டல் நிறுவனர். தந்தை மற்றும் அண்ணனின் மறைவுக்குப் பிறகு குடும்ப ஹோட்டல் தொழில் பிக்கி ஓபராயிடம் வந்தது. அதை எப்படி சீர் செய்து இந்தியாவின் மிக முக்கியமான ஹோட்டல்களாக - ‘ஓபராய் ஹோட்டல்களாக’ - மாற்றினார் என்பதுதான் அவரது சாதனை வரலாறு.
வெளிநாட்டில் உயர் கல்வி பெற்று இந்தியா வந்த பிக்கி ஓபராய், அப்பாவும் அண்ணனும் நடத்திக் கொண்டிருந்த ஹோட்டல் தொழிலில் அவர்களுக்கு உதவத் தொடங்கினார். பின்னர் தன்னிடம் அந்தப் பொறுப்பு வந்தபோது ஓபராய் ஹோட்டல்களின் முகத்தையே அவர் மாற்ற ஆரம்பித்ததற்கு இளம் வயதில் அப்பா - அண்ணனுக்கு அவர் உதவியாக இருந்ததுதான் காரணம். தோழர் என்.சங்கரய்யா
பொதுவாக இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை, போராட்டங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், சங்கரய்யா போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர். பள்ளிப் பருவத்தில் தொடங்கிய சங்கரய்யாவின் போராட்டம் மக்கள் உரிமைகளுக்காகவும் சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் நூறு வயதைக் கடந்தும் தொடர்ந்தது. எட்டு வருடங்கள் சிறைத் தண்டனை, ஐந்து வருடங்கள் தலை
மறைவு வாழ்க்கை எனக் கழிந்த சங்கரய்யாவின் போராட்ட வாழ்க்கை உத்வேகம் அளிக்கக் கூடியது.கோவில்பட்டியில் 1922ம் ஆண்டு பிறந்த சங்கரய்யா, தூத்துக்குடியில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் பயின்றார். இவரது தாத்தா பெயர்தான் சங்கரய்யா. இவருக்கு வீட்டில் வைத்த பெயர் பிரதாபசந்திரன். ஆனால், ஓரளவுக்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன், தாத்தா பெயர்தான் தனக்கும் வேண்டும் என்று வீட்டில் அடம்பிடித்து, அப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்து இளங்கலை வரலாற்றை இவர் படித்தாலும் தமிழ் மீது பற்றும் ஆர்வமும் அதிகம். அதனால் அமெரிக்கன் கல்லூரி பரிமேலழகர் தமிழ்க் கழகத்தின் இணைச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் செயலாளாராக இருந்த காலகட்டத்தில் அம்மன்றத்துக்கு ராஜாஜி, சத்தியமூர்த்தி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை மதுரைக்கு வரவழைத்து மாணவர்களுடன் உரையாட வைத்தார்.
1938ல் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் ‘சென்னை மாணவர் சங்கம்’ என அமைத்து சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். இதேபோல மதுரையிலும் மாணவர் சங்கம் உருவாக்கப்பட்டு அதன் செயலராக சங்கரய்யா இருந்தார்.ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், தனது போராட்ட குணத்தால், வலிய வந்து வறுமையை ஏற்றுக்கொண்டவர் சங்கரய்யா. மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சங்கரய்யா கட்சி நடத்திய பல போராட்டங்களிலும் பங்கேற்றார்.
அக்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவற்றில் சங்கரய்யா கலந்துகொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி கைதானார். இதனால், சங்கரய்யாவின் கல்லூரிப் படிப்பு முடிவுக்கு வந்தது.
சங்கரய்யா சிறையில் இருந்த நாட்களில் காமராஜர், ப.ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்தார். அவர்கள் சங்கரய்யா மீது செலுத்திய பாதிப்பால் விடுதலையாகி வெளியே வந்தபிறகு பொதுவாழ்க்கைக்குத் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அதன் முக்கிய தலைவர்களுள் ஒருவரானார்.
கட்சி சார்பாக, தொழிலாளர் நலனுக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள், மாநாடுகளை நடத்தியதோடு களப்பணிகளிலும் துடிப்புடன் ஈடுபட்டவர் சங்கரய்யா. களப்பணியுடன் பல்வேறு இதழ்களில் தனது கருத்துகளைக் கட்டுரைகளாகவும் எழுதிவந்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்படுவதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். ஒன்றிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ‘ஜனசக்தி’ இதழில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராக சங்கரய்யா பணியாற்றியுள்ளார்.
1967, 1977, 1980 ஆண்டுகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யா, மொத்தம் 11 ஆண்டுகள் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். இந்த 11 ஆண்டுகளில் சட்டப் பேரவையில் பல முக்கிய பிரச்னைகள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஏராளமான உரைகளை ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் ஆரம்பிக்க சங்கரய்யாவின் சட்டமன்ற உரையே அடிப்படையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து, அவற்றில் திறம்பட செயலாற்றி ஓய்வுபெற்ற பின்னரும்கூட, மூப்பின் காரணமாக உடல் தளர்ந்த நிலையிலும் கட்சி அலுவலகத்துக்கு வருவது, ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் என பதவிகள் வகித்தாலும் கடைசி வரை எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார், கதராடையே அணிந்து வந்தார்.
தமிழ்நாட்டில் பொது உடைமை இயக்கத்தை வலுப்படுத்தியதற்காகவும் மக்களின் உரிமைக்காக முன்னெடுத்த போராட்டங்களுக்காகவும் சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘தகைசால் தமிழர்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர்பட்டம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறிக்கையொன்றின் வாயிலாக தெரிவித்திருந்தார். அதன்படி, தோழர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு அனுமதி வழங்கக் கோரி ஆளுநருக்கு அனுப்பியும் வைக்கப்பட்டது.
ஆனால், அரசியல் காரணங்களால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்தது குறிப்பிடத்தக்கது. இரு கோடீஸ்வரர்களும் ஒரு தொழிலாளர் இயக்கத் தலைவரும் அடுத்தடுத்து மரணமடைந்திருக்கிறார்கள். இம்மூவரும் தனித் தனி வழியில் பயணித்தாலும் மூவருமே இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
என்.ஆனந்தி
|