இந்தியர்களின் சர்க்கரை நோய்க்கு ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்ததே காரணம்!



தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்பார்கள். அதாவது எங்கோ நடக்கும் ஒரு சம்பவத்திற்கு வேறொரு இடத்தில் பாதிப்புகள் தெரியும் என்பதைக் குறிக்கவே இப்படியொரு சொலவடை சொல்லப்படும். 
அப்படியான செய்திதான் இது. இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்தபோது ஏற்பட்ட பஞ்சங்கள்தான் இன்று இந்தியாவிலும் தெற்காசியாவிலும் நீரிழிவு மற்றும் இதயநோய்கள் அதிகரிக்கக் காரணம் என ஆய்வின் வழியாகத் தெரிய வந்திருக்கிறது.

இந்தியாவில் நீரிழிவு (டைப் 2) நோயால் சுமார் 7 கோடியே 70 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. 

இதற்கெல்லாம் நம் நாடு பஞ்சங்களால் ஆட்பட்டதே காரணமென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.பொதுவாக நீரிழிவு நோய் மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வருகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோயும், இதயநோயும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், தெற்காசியர்களுக்கு குறைந்த உடல் எடையிலும்கூட நீரிழிவு நோயும், இதயநோயும் அபாயகரமான உயர் விகிதத்தில் உள்ளதென ஆய்வில் ஆச்சரியமாகச் சொல்லப்பட்டுள்ளது.  
அதுமட்டுமல்ல. மற்றொரு ஆய்வு, ‘45 வயதிற்கு மேற்பட்ட தெற்காசிய மக்களில் 26% ஆண்களும், 32% பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஐரோப்பாவில் உள்ள வெள்ளைநிற ஆண்கள் மற்றும் பெண்களைவிட மூன்று மற்றும் ஐந்து மடங்கு அதிகம்’ என்கிறது.

இந்நிலையில்தான் கடந்த ஆண்டு ரத்தக்குழாய் மற்றும் உடல் பருமன் மருத்துவத்தில் பணிபுரியும் அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த கதிரியக்க நிபுணரான டாக்டர் முபின் சையத், பிரிட்டிஷ் காலனித்துவம் தெற்காசிய மக்களுக்கு நீரிழிவு மற்றும் இதயநோய்களை எவ்வாறு ஏற்படுத்தியது என்பதை ஓர் ஆய்வின் வழியாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
தொடர்ந்து அதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவும் வெளியிட, அது உலகம் முழுவதும் வைரலானது. இந்த ஆய்வுதான் இப்போது பல்வேறு பத்திரிகைகளிலும் வெளியாகி வருகிறது.

அந்த வீடியோவில் டாக்டர் முபின் சையத், ‘19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் பல பஞ்ச மரணங்கள் உண்மையில் உணவுப் பற்றாக்குறை அல்லது வறட்சியால் ஏற்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேள்வியுடன் தொடங்குகிறார். 

பிறகு அவர், ‘உண்மையில் அப்போது தெற்காசியாவில் (அப்போது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா எல்லாம் ஒன்றாக இணைந்திருந்தன) அனைவருக்கும் போதுமான உணவு இருந்தன. இருப்பினும், தெற்காசியாவில் பஞ்சத்தின் போது வறுமையில் வாடிய மக்களால் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வந்ததால் வாங்க முடியாமல் போனது.

இதற்கு நெறிமுறையற்ற தானிய வியாபாரிகள் உணவைப் பதுக்கி வைக்க அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணம். மேலும், பில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள அறுவடை செய்யப்பட்ட உணவுகள் எல்லாம் பஞ்ச காலம் எனத் தெரிந்திருந்தபோதும் அவை ஐரோப்பாவிற்கு, குறிப்பாக பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 

அப்போது ஐரோப்பாவில் மோசமான அறுவடை மற்றும் தொழில்மயமாக்கல் காரணமாக விவசாயிகள் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாக மாறியிருந்தார்கள். அதனால், உணவுப் பற்றாக்குறை உண்மையில் ஐரோப்பாவில்தான் இருந்தது. ஆனால், இங்கிருந்து உணவு ஏற்றுமதி செய்யப்பட்டு தெற்காசியாவில் பஞ்சம் செயற்கையாக உருவாக்கப்பட்டது.

இதுதவிர, விவசாயிகள் மீது அதிகப்படியான நிலவரியும் சுமத்தப்பட்டது. இதை அவர்கள் செலுத்தவில்லையெனில் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இவையெல்லாம் 1850 முதல் 1899 வரை 24 பஞ்சங்களுக்கு வித்திட்டன. சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இறந்துபோயினர்’ என வேதனை தெரிவிக்கும் டாக்டர் சையத், ‘இந்தப் பஞ்சங்கள்தான் பட்டினிக்கு ஏற்றதாக மக்களின் உடலமைப்பை மாற்றியது’ என்கிறார். இதனால்தான் தெற்காசிய மக்கள் மெலிந்த தசைகளைக் கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிடுகிறார்.

பொதுவாக, ஒரே ஒரு பஞ்சம் பல தலைமுறையினரிடம் வளர்சிதை மாற்ற பாதிப்புகளை ஏற்படுத்தி நீரிழிவு, ஹைப்பர் கிளைசீமியா (அதிக ரத்த சர்க்கரை), இதயநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் தன்மை கொண்டது. அந்த 50 ஆண்டுகாலத்தில் 24 பஞ்சங்கள் வந்துள்ளன. ஆக, எவ்வளவு வளர்சிதை மாற்ற பாதிப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் உருவாகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் என்கிறார் டாக்டர் சையத்.

நீரிழிவு நோய்க்கு மரபணு முக்கிய காரணம். நம் முன்னோர்களின் ஜீன்கள்தான் நமக்கு வழிவழியாக வருகின்றன. ஆக, பஞ்சங்கள் இதில் முக்கிய காரணியாக விளங்குகின்றன. இதனால், தெற்காசியர்களுக்கு நீரிழிவு நோய் அபாயம் மற்றவர்களைவிட ஆறுமடங்கு அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதயநோய் அபாயம் 2.7 மடங்கு அதிகரிக்கிறது. மேலும், தெற்காசிய நாடுகளில் மூன்றில் ஒருவர் 65 வயதுக்கு முன் இதயநோயால் இறக்கின்றனர். எல்லாவற்றுக்கும் பஞ்சங்களே காரணம்.

இன்று போதுமான அளவு உணவு உள்ளன. பஞ்சம் என்கிற பேச்சுக்கு இடமில்லை. ஆனால், பற்றாக்குறையான சூழலுக்கு பழகியிருந்த ஜீன்கள் இன்று மிகுதியான உணவுச் சூழலுக்குப் பொருந்தாமல் போகின்றன. அவை ஒரு மோதலைச் சந்திக்கின்றன. அதன் காரணமாகவே உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன’ என்கிறார் டாக்டர் சையத்.இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதை தெளிவுபடுத்த பல்வேறு ஆய்வுகளில் சொல்லப்பட்ட விஷயங்களையும் கோர்த்து இப்போது செய்திகள் பரபரக்கின்றன.

இதில் முதலாவதாக ‘அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன்’ 1959 மற்றும் 1961க்கு இடையில் சீனாவில் ஏற்பட்ட பஞ்சம் பற்றி வெளியிட்ட ஓர் ஆய்வுக் கட்டுரையை குறிப்பிட்டுள்ளனர். அதில், பஞ்சத்தின் போது கருவுற்றிருந்த நூற்றுக்கணக்கான தாய்மார்களுக்கு ஹைப்பர் கிளைசீமியா, டைப் 2 நீரிழிவு நோய்கள் அதிகரித்திருந்தன. பின்னர் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் குழந்தைகளுக்கும் ஹைப்பர் கிளைசீமியா இருந்தது கண்டறியப்பட்டது.

அப்போது பஞ்சம் கடந்து நீண்ட காலம் ஆகியிருந்தது. இரண்டாவதாக, 1943ல் 30 லட்சம் மக்கள் மடிந்த மேற்கு வங்கம் சந்தித்த பஞ்சமும் ஆட்சியாளர்களின் தவறுகளால் உருவாக்கப்பட்டதுதான். அதனால் இன்று இந்தியா உள்ளிட்ட தெற்காசியா நாடுகள் எதிர்கொள்ளும் பல கடுமையான நோய்களுக்கு நம் முன்னோர்களின் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் மோசமான ஆரோக்கியமே காரணம் என்கின்றன ஆய்வுகள். இதற்கு பஞ்சங்களே முதல் காரணியாக நிற்கின்றன.

இவை இன்றைய தலைமுறையினரை நேரடியாக பாதித்து வருகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். தவிர, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் செய்த தவறால் இன்று தெற்காசியர்கள் பல கடுமையான நோய்களுக்கு ஆட்பட்டு வருகிறார்கள் எனச் சுட்டிக் காட்டுகின்றனர்

பேராச்சி கண்ணன்