கமலுக்கு குறிவைக்கும் அட்லீ!
என்னடா இது என ஆச்சர்யப்பட வேண்டாம்.ஷாருக் கானை வைத்து அட்லீ இயக்கிய ‘ஜவான்’ மெகா ஹிட் அடித்தபிறகு ஷாருக் - விஜய் புராணத்தை அட்லீ பாட ஆரம்பித்திருப்பது என்னவோ உண்மைதான். சோஷியல் மீடியா முழுக்க இதுதான் டாக் ஆகவும் இருக்கிறது. ‘‘அடுத்து விஜய் அண்ணா, ஷாருக் சார் இரண்டு பேரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க ஆசை. இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். இவர்கள் இருவருக்குமான கதையை தயார் பண்ண வேண்டும்...’’ என்றெல்லாம் அட்லீ பேசி வருவது அறிந்ததுதான்.அதேநேரம் சத்தமில்லாமல் தனது அடுத்த வாய்ப்பிற்கான முன்பதிவையும் அட்லீ முடித்துவிட்டார் என்கிறார்கள். எஸ். அட்லீ, கமலையும் நேரில் சந்தித்திருக்கிறாராம்.அப்போது அட்லீ சொன்ன ஒரு கதையின் ஒன்லைன், கமலைக் கவர... உடனே அதை டெவலப் செய்யச் சொல்லிவிட்டாராம். இப்போது சம்பளம் எவ்வளவு, எத்தனை நாட்கள் கால்ஷீட் வேண்டுமென அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கோடம்பாக்க பட்சி கிசுகிசுக்கிறது. இந்நிலையில்தான் அதிமுக்கியமான கேள்விகளை சிலர் எழுப்புகிறார்கள்.
அதாவது இந்தக் கதை கமலை மட்டும் வைத்து எடுக்கும் படத்திற்கா அல்லது கமல் தயாரிப்பில் அட்லீ இயக்கப் போகிறாரா அல்லது ஷாருக்கான், விஜய் நடிக்கும் படத்தில் கமலையும் நடிக்க வைக்கும் முயற்சியா..?
எதற்கும் விடை இக்கணம் வரை கிடைக்கவில்லை. கமல் இப்போது இளைய ஹீரோக்களுக்கு கடும் சவால் விடுக்கும் வகையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஷங்கரின் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, அடுத்து மணிரத்னமுடன் ‘தக் லைஃப்’, ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி’ என கைவசம் பெரிய படங்களை வைத்திருக்கிறார்.
இவை தவிர சிம்பு, சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் தயாரித்தும் வருகிறார்.இதனால் கமலின் கால்ஷீட் எப்படி என்பது குறித்து இன்னும் ஒரு தெளிவு இல்லையாம். கமல் எப்போது கால்ஷீட் கொடுப்பார்... அந்த நாட்களில் ஷாருக்கானும் விஜய்யும் கால்ஷீட் கொடுப்பார்களா அல்லது ஷாருக்கான் கொடுக்கும் நாட்களில் விஜய்யும், கமலும் கால்ஷீட் கொடுப்பார்களா என பல கோணங்களில் கேள்விகள் கிளை பரப்புவதால், இது குறித்த ஒரு தகவல் வெளிவர இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்கிறார்கள்.
காம்ஸ் பாப்பா
|