மாஃபியா ராணிகளின் உலகம்!



‘‘இந்தப் படம் முழுக்க முழுக்க 18 +’’ என ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு நடுமுதுகில் சில்லென்ற உணர்வைக் கொடுக்கும் விதமான பிரத்தியேக டிரெய்லருடன் பேசத் தொடங்கினார் இயக்குநர் விவேக் கே. கண்ணன். 
ப்ரியா மணி, சாரா, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘கொட்டேஷன் கேங்’ படத்தை காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் ஆகியோருடன் இணைந்து ஃபிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.

எதனால் இந்த பெயர்?

‘கொட்டேஷன் கேங்’ என்ற வார்த்தை கேரளாவில் பிரபலமானது. அதாவது பணம் வாங்கிக்கொண்டு, அதுவும் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மிகப் பெரிய குற்றங்கள் செய்யும் கூலிப்படையைத்தான் ‘கொட்டேஷன் கேங்’ என கேரளாவில் சொல்வார்கள். ஆனால், இந்தப் படம் அவர்களைப் பற்றியது அல்ல.
அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்ததால் அதை மட்டும் எடுத்துக்கொண்டேன். அந்த கும்பலைப் பற்றி கதையில் சொல்லப்பட்டாலும், அதை மட்டுமே முழுக் கதையாக எடுக்காமல், வேறு சில கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய கதையை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்படி திரைக்கதையாக அமைச்சிருக்கேன்.

முழுமையான பெண்கள் கூலிப்படை என்று சொல்லலாமா?

கூலிப்படை என்றாலே ஆண்கள்தான் இருக்கணுமா என்ற கேள்விதான் இந்தக் கதை உருவாகக் காரணம். ஒரு பெண் பத்து பேரை அடிப்பார் என்று சொன்னாலே காமெடியாகவும், சிரிப்புடனும்தான் பார்க்கிறோம். அந்த மொமென்டை மாற்றி ஆண்கள் மட்டுமல்ல பெண்களாலும் இது முடியும் என்பதுதான் கதை. கதை முழுக்கவே ப்ரியாமணி பார்வையில் நகரும். 

பேபி சாரா மற்றும் சன்னி லியோன் இரண்டு பேரையும் வேறு ஒரு களத்தில் வைத்து சிந்தித்தது ஏன்?

பேபி சாரா என்றால் மென்மையான குழந்தை... சன்னி லியோன் என்றால் கிளாமர்... என்ற டெம்பிளேட்டை பிரேக் செய்து வித்தியாசமான கேரக்டர்களிலும் அவர்கள் ஜொலிப்பார்கள் எனக் காட்ட நினைச்சேன். பேபி சாராவும் அவருடைய அப்பாவும் இந்த கேரக்டருக்கு முதலில் சம்மதிக்கவே இல்லை. 

பிறகு அவர்களைக் கன்வின்ஸ் செய்து நடிக்க வைத்திருக்கிறேன். போதைப் பழக்கத்துக்கு அடிமையான டீன் ஏஜ் கேர்ள் ஆக சாரா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு தனியா பாடல் கூட இருக்கு. ஒரு பக்கம் பணத்திற்காக கொலை செய்யும் கேங்... அதில் இணையும் ஒரு டீன் ஏஜ் கேர்ள்... ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் கதை... அது அத்தனையும் சேரும் புள்ளிதான் படம்.  

‘கொட்டேஷன் கேங் பார்ட் 2’ படப்பிடிப்பு முடிந்து விட்டதா?

ப்ரியாமணிக்கும் சன்னி லியோனுக்கும் ஒரு பின்னணி கதை இருக்கு. அதை முடித்து ‘கொட்டேஷன் கேங் பார்ட் 2’ படப்பிடிப்பையும் ஆரம்பிச்சாச்சு. இந்தப் பட வெளியீட்டுக்கு அப்புறம் முழுமையான படப்பிடிப்பு ஆரம்பிப்போம். ஆரம்பத்தில் ஒரு பார்ட்தான் திட்டமிட்டோம். ஆனால், கதை இன்னும் ஆழமா சொல்லப்பட வேண்டிய சூழல் இருந்த காரணத்தால் இப்ப ரெண்டாவது பார்ட் வரைக்கும் வந்திருக்கு.

ஜாக்கி ஷெராஃப் கதைக்குள் வந்தது எப்படி?

அவர் ஒப்புக் கொள்வாரா இல்லையா என்று தெரியாமல் முயற்சி செய்து பார்ப்போம் என கதையைச் சொன்னோம். கேட்டவுடன் ஓகே சொல்லிட்டார். அதைத்தொடர்ந்து வந்தவங்கதான் சன்னிலியோன். எனக்கு பூர்வீகம் வடசென்னை என்பதால் இந்த கேங்ஸ்டர் கதைகள் சொல்வது எனக்கு பிடிக்கும். மேலும் ஆக்‌ஷன் பின்னணியில் கதை சொல்லணும் என்கிற ஆர்வம்தான் இந்த ‘கொட்டேஷன் கேங்’.

ஏற்கனவே சினிமாவில் அதீத வன்முறை இருக்கும்போது இந்தக் கதை அவசியமா?

இந்தக் கேள்விக்கு பதிலாதான் டிரெய்லரிலேயே இது ‘18 +’ வயதினருக்கான படம்னு சொல்லியிருக்கோம். நமக்கே தெரியாம டீன் ஏஜ் பசங்க நிறைய பேர் போதைக்கு அடிமையாகி இருக்காங்க.

‘அப்படியெல்லாம் எதுவும் இல்லை’னு நமக்கு நாமே ஆறுதல் எல்லாம் சொல்லிக்கொள்ள முடியாது. கண்கூடாக நானே பார்த்திருக்கேன். இதுதான் மாடர்ன் கல்ச்சர்... இதுதான் எதிர்காலம்னு நினைச்சுகிட்டு தன்னுடைய வாழ்க்கையை சீரழிச்சுக்கிற எதிர்காலத்தை நோக்கிதான் நாம பயணித்துக் கொண்டிருக்கோம். அதையும் இந்தப் படத்தில் சொல்ல முயற்சி செய்திருக்கேன்.

அதேபோல் பணத்திற்காக கொலை செய்யும் இந்தப் பெண்களும் கூட ஏதோ ஒரு சூழல் காரணமா இந்த வலைக்குள்ள மாட்டிக்கிட்டவங்கதான். அப்படி மாட்டிக்கிட்டா அவங்களுடைய வாழ்க்கை என்ன ஆகும் என்கிறதும் சேர்த்துதான் இந்தக் கதை.

இந்தக் கதையைப் பார்க்கும் பொழுது போதைப்பழக்கம் தமிழகத்தில் இந்த அளவுக்கு இல்லையேனு தோணும். ஆனா, அப்படி சொல்லவே முடியாது. டீன் ஏஜ் பசங்க போதைக்கு அடிமையாகி வேறு ஒரு ஃபேன்டஸி உலகத்துக்குள்ள தொலைஞ்சு போய்க்கிட்டு இருக்காங்க. அதையெல்லாம் கவனத்துக்குக் கொண்டு வந்து பெற்றோர்களை அலர்ட் செய்யணும்னு நினைச்சேன்.

ட்ரம்ஸ் சிவமணி இசை மற்றும் மற்ற டெக்னீசியன்கள் பற்றி சொல்லுங்க..?

இந்தப் படத்தின் நிழல் உலக சம்பவங்களை எடுத்து வைக்கும்போது ஆக்ரோஷமான இசையும், சில வித்தியாசமான பாடல்களும் தேவைப்பட்டுச்சு. அதற்கு ட்ரம்ஸ் சிவமணி சார் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். சினிமாட்டோகிராபி அருண் பத்மநாபன், கே. ஜே. வெங்கடராமன் எடிட்டிங். படத்தின் பலம் ஆக்‌ஷன் காட்சிகள்தான். ஓம் பிரகாஷ் ஸ்டண்ட் படத்தில் அற்புதமா வந்திருக்கு.

‘கொட்டேஷன் கேங் பார்ட் 1’?

ஓடிடி தளங்கள் அதிகரித்ததால் 18 + மற்றும் வயலன்ஸ் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் அதிகரிக்கத்துவங்கிட்டாங்க. அப்படியான ரசிகர்களை நோக்கிதான் இந்தப் படம். ஒருசில கதைகளை ஆழமா உள்ளதை உள்ளபடி சொல்லிதான் ஆக வேண்டி இருக்கு. சினிமா கிளிஷேக்கலா சொன்னாலும் வொர்க் அவுட் ஆகாது.

பெண்கள் கேங்ஸ்டர் உலகம்... அதில் நடக்கும் குற்றங்கள்... ஏன் இந்தப் பெண்கள் இதுக்குள்ளே மாட்டினாங்க... போதை அடுத்த தலைமுறையை என்ன செய்து கொண்டு இருக்கு... இப்படி நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கும். இந்தப் படம் குழந்தைகளுக்கான படம் கிடையாது. ஆனால், எதிர்காலக் குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கான அலர்ட் ஆக இருக்கும்.l  

ஷாலினி நியூட்டன்