என் சுவாசக் காற்று மாசு!
ரெட் அலர்ட்தான். மழை, புயலுக்கு மட்டும்தான் அபாய எச்சரிக்கை விடவேண்டுமா என்ன..? காற்று மாசுக்கும் அலாரம் அடிக்கலாம்.தில்லி முதல் சென்னை வரை காற்று மாசின் அளவு அதிகரித்து வருவதாக சூழலியலாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். அதற்கேற்ப உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக தில்லி முதலிடத்தில் இருப்பதாக ஆய்வுகள் அறிவிப்பது வேறு கவலையை அதிகரிக்கச் செய்கிறது.
சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில்கூட கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தீபாவளி நாளன்று காற்று மாசின் அளவு உச்சத்தைத் தொட்டது. மனிதர்கள் வாழ்வதற்கு உணவையும், தண்ணீரையும் விட மிக அத்தியாவசியமான விஷயமாக காற்று இருக்கிறது. சுவாசிக்காமல் ஒரு நிமிடம் கூட நம்மால் இருக்க முடியாது. காற்றின் தரத்தை இழந்தால் என்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதை முதலில் தெரிந்துகொள்வோம்.
1. காற்று மாசால் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், ஏற்கனவே சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் இருப்பவர்கள் இதனால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வார்கள்.
2. காற்று மாசால் இதயம் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது அதிலிருக்கும் சிறு துகள்களையும் நாம் சுவாசிக்கக்கூடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
3. காற்று மாசுபாட்டால் அலர்ஜி போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. அடிக்கடி தும்மல் ஏற்படுதல், மூக்குப் பகுதியில் அரிப்பு ஏற்படுதல், கண்களில் தண்ணீர் வந்துகொண்டே இருப்பது போன்ற பிரச்னைகள் வருவதற்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.
4. ஏற்கனவே சுவாசக் கோளாறுகள், இதயப் பிரச்னைகள், அலர்ஜி போன்ற நோய்கள் இருப்பவர்கள் அதிக நேரம் தரமற்ற காற்றை சுவாசிக்கும்போது இந்த சிக்கல்கள் அதிகமாகும்.
5. அதிகநேரம் தரமற்ற காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் செயல்பாடுகள் குறைவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
6. கோவிட் 19 போன்ற உயிரைக் கொல்லும் சுவாச சம்பந்தமான தொற்று நோய்கள் ஏற்பட்டால் அதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. காரணம், ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு சுவாச சம்பந்தமான பிரச்னைகள் வரக்கூடும் என்ற அபாயம் இருப்பதால் கோவிட் 19 போன்ற உயிரைக் கொல்லும் தொற்று நோய்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
இப்படி உடல் ரீதியான பிரச்னைகள் மட்டுமில்லாது மனஅழுத்தம் போன்ற மன நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தரமற்ற காற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில வழிகள்:
* முடிந்த வரையில் காற்றின் தரம் குறைவாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும். அந்த நாட்களில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
*வெளியில் செல்லும் பொது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் வெளியில் செல்வது மிக மிக நல்லது. உதாரணத்திற்கு பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படுகிற நேரத்தை விட்டு காலை 8 மணிக்கு முன்பும் அதேபோல் இரவு 7 மணிக்குப் பின்பும் வெளியில் செல்வது நல்லது.
* முடிந்த வரையில் சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு பஸ், ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தை யன்படுத்துவது காற்று மாசுபடுவதை தவிர்ப்பதோடு போக்குவரத்து நெரிசல்களையும் தவிரக்க உதவும்.
* முடிந்த வரையில், மரங்களை நடுவதால் எதிர்காலத்தில் காற்று மாசைக் குறைக்கலாம். மரக்கன்றுகளை நட முடியாவிட்டாலும், வெட்டாமலாவது இருக்கலாம்.
‘என் சுவாசக் காற்றே...’ என காதலியை நோக்கிப் பாடாமல் நம் ஆரோக்கியத்தை நோக்கி இதை இசைப்பதே அதே காதலியுடன் பல்லாண்டு நாம் மகிழ்ச்சியாக வாழ வழிவகுக்கும்! ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது, தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலம் நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
ஜான்சி
|