Must watch



புல்லட் டிரெய்ன்

கலகலப்பான ஹாலிவுட் திரைப்படம், ‘ புல்லட் டிரெய்ன்’. ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. டோக்கியோவில் இருந்து புல்லட் டிரெய்ன் கிளம்புகிறது. தனது மகனைத் தாக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அந்த ரயிலில் ஏறுகிறார் யூச்சி. அதே ரயிலில் ஒரு பணப்பெட்டியை எடுத்து வருவதற்காக ஏறுகிறான் லேடி பக். 

எந்த வேலையில் இறங்கினாலும் அது தோல்வியில் முடிவதால் தன்னை ஒரு துரதிருஷ்டசாலியாக நினைத்துக்கொண்டிருப்பவன் லேடி பக். அந்தப் பணப்பெட்டியையும், டான் ஒருவரின் மகனையும் பத்திரமாக உரியவரிடம் ஒப்படைப்பதற்காக லெமனும், டேஞ்சரினும் அந்த ரயிலில் பயணிக்கின்றனர்.

மற்றவர்களுக்கு விஷம் வைத்து கொல்வதில் கெட்டிக்காரியான ஹார்னெட்டும் அதே ரயிலில்தான் இருக்கிறாள். இதுபோக தனது உறவினர்களையும், நண்பர்களையும் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக அந்த ரயிலில் ஏறுகிறான் வூல்ஃப். லேடி பக்கிறகு பணப்பெட்டி கிடைத்ததா? லெமனும், டேஞ்சரினும் பணப்பெட்டியையும், டானின் மகனையும் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார்களா? வூல்ஃப் பழிவாங்கினானா? தன் மகனைக் கொன்றவர்களை யூச்சி கண்டுபிடித்தானா... என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.

கதை முழுவதும் புல்லட் டிரெய்னுக்குள்ளே நடந்தாலும் சலிப்புத் தட்டவில்லை. படத்தின் இயக்குநர் டேவிட் லீட்ச்.   

பாஸ்ட் லைவ்ஸ்

‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியான கொரியன் மற்றும் ஆங்கிலப் படமான ‘பாஸ்ட் லைவ்ஸ்’. தென் கொரியாவில் உள்ள சியோல் நகர். 2000ம் வருடம். ஒரே பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமியான நா யங் - சிறுவனான ஹே சங் இடையில் ஆழமான ஈர்ப்பு ஏற்படுகிறது. பெரியவள் ஆனதும் ஹே சங்கை திருமணம் செய்யும் விருப்பத்தில் இருக்கிறாள் நா யங்.
இந்நிலையில் நா யங்கின் குடும்பம் டொரொண்டோவுக்கு குடிபெயர்கிறது. அங்கே போனதும் தனது பெயரை நோரா என்று மாற்றிக் கொள்கிறாள் நா யங். ஹே சங்கிற்கும், நா யங்கிற்கும் இடையிலான தொடர்பு முறிந்து போகிறது.

ஹே சங் இராணுவ சேவையை முடிக்கிறான். நியூயார்க்கிறகு இடம் பெயர்ந்திருக்கிறாள் நோரா. முகநூல் மூலமாக மீண்டும் நோராவும், ஹே சங்கும் நட்பாகின்றனர். நோராவும், ஹே சங்கும் வாழ்வில் இணைந்தார்களா அல்லது வேறு ஏதாவது நடந்ததா என்பதே படம். நிதானமாகச் செல்லும் திரைக்கதை படத்துடன் அப்படியே நம்மை ஒன்ற வைக்கிறது. தனது வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் செலின் சாங் என்கிற பெண் இயக்குநர்.  

அபூர்வா

சீட் நுனிக்கு கொண்டு செல்லும் திரில்லிங் அனுபவம் வேண்டுமா? உங்களுக்காகவே ‘ஹாட் ஸ்டாரி’ல் வெளியாகியிருக்கிறது ‘அபூர்வா’ எனும் இந்திப் படம்.ஜக்னு, சுகா,பாலி, சோட்டா ஆகிய நான்கு பேரும் நெடுஞ்சாலை கொள்ளையர்கள். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை. அதில் தனியாக வந்து கொண்டிருக்கும் ஒரு சொகுசு காரை வழி மறித்து காரில் உள்ளவர்களைக் கொல்கின்றனர். காருக்குள் இருக்கும் பொருட்களையும், காரையும் திருடிக் கொண்டு நான்கு பேரும் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர். ஒரு சாலையில் கொள்ளையர்களின் காரின் முன்பாக ஒரு ஆம்னி பஸ் வழிவிடாமல் செல்கிறது.

கோபமடையும் கொள்ளையர்கள் அந்த ஆம்னி பஸ்ஸை வழிமறித்து டிரைவரை சுட்டுக் கொல்கின்றனர். தவிர, பயணிகளிடமிருந்து பொருட்களைக் கொள்ளையடிக்கின்றனர். அத்துடன் பஸ்ஸில் இருந்த அபூர்வா என்ற இளம் பெண்ணைக் கடத்திச் செல்கின்றனர். சமீபத்தில்தான் அபூர்வாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நான்கு கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்ட அபூர்வா என்ன செய்கிறாள் என்பதே மீதிக்கதை. சுவாரஸ்யம் குன்றாமல் வேகமாகச் செல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் நிகில் நாகேஷ் பட்.  

மேட்

கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து சமீபத்தில் வெளியான முக்கியமான படம், ‘மேட்’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த தெலுங்குப்படம். ஒரு எஞ்சினியரிங் கல்லூரி. முதலாமாண்டு படிக்கும் மாணவன் ஹாஸ்டலை விட்டு வீட்டுக்கு ஓட முயற்சிக்கிறான். அவனைத் தடுத்து பிடிக்கின்றனர் சீனியர் மாணவர்கள். 

தப்பித்து ஓட முயன்ற மாணவனைக் காண வருகிறார் சூப்பர் சீனியரான கணேஷ். ‘ராக்கிங் கொடுமையா இருக்கு. நான் வீட்டுக்கே போகிறேன்’ என்று கணேஷிடம் சொல்கிறான் அந்த மாணவன். தனது கல்லூரி வாழ்க்
கையை அந்த மாணவனிடம் சொல்கிறார் கணேஷ்.

கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் கணேஷிற்கும் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. கணேஷின் அறைக்கு தாமோதர் வந்தபிறகு கணேஷும் கலகலப்பாகிறான். பிறகு அசோக்கும், மனோஜும் கூட்டு சேர ஜாலிதான். மனோஜ், அசோக், தாமோதர் ஆகிய மூன்று பேரின் கூட்டணியை ‘மேட்’ என்று சக மாணவர்கள் அழைக்கின்றனர்.

இப்படி தன்னுடைய கல்லூரிக் காலத்தில் நடந்த சம்பவங்களைச் சொல்லி எப்படி அந்த மாணவனைக் கல்லூரிக்கே திரும்ப கொண்டு வருகிறார் கணேஷ் என்பதே கதை.
கல்லூரி காலங்களை நினைவுபடுத்தும் இப்படத்தை கல்யாண் சங்கர் இயக்கியிருக்கிறார்.