சிறுகதை - வியூகம்
“உள்ளே வரலாமா..?” கவனக் குறைவாய் இருந்தால் கேட்டிருக்க முடியாத மென்மையான குரல். எட்டிப் பார்த்தான். 30 அல்லது 35 வயது இருக்கலாம். அதென்னவோ பார்க்கும் எந்தப் புது மனிதரின் வயதைத்தான் புத்தி முதலில் யூகிக்க முயற்சி செய்கிறது.“வரலாம்...” என்றான் சிரிப்புடன்.“வேற யாரும் இல்லியா..?’’ என்றாள் குழப்பமாய்.
“உங்களுக்கு என்ன வேணும்..?’’ “வாசல்ல போர்டு. யோகா கற்றுத் தரப்படும். பெண்களுக்குன்னு...” “எஸ். இதே இடம்தான்...”“லேடிதான் சொல்லித் தருவாங்கன்னு...” “என் மனைவிதான்...”“ஓ...” பெருமூச்சு விட்டாள். “அவங்க இல்லியா..?” “பர்ஸ்ட் ஒக்காருங்க. குடிக்க தண்ணி வேணுமா..?’’
அவன் நிதானமும் சிரிப்பும் அவளை ஆஸ்வாசப்படுத்துவதற்குப் பதில் இன்னும் கலவரப்படுத்தியது. அவள் பார்வை சுழன்று வேறு யாராவது இருக்கிறார்களா என்று தேடியது. அதனால் பாதிக்கப்படாமல் அவன் இன்னும் மென்மையாய் சொன்னான்.“இன்னிக்கு மார்னிங் செஷன் இல்லம்மா. தவிர்க்க முடியாத காரணம். வாசல்ல போர்ட் வச்சிருக்கோம். ரெகுலரா வரவங்களுக்கு நேத்தே சொல்லிட்டோம்...” “ஓ...” ‘‘அப்பா...’’ என்று கத்திக் கொண்டு வாசலிலிருந்து ஒரு சிறுமி வந்தாள். ‘‘அம்மா இன்னும் வரலியா..?’’ உள்ளே வந்தபிறகுதான் இன்னொரு நபரைப் பார்த்தாள். ‘‘ஸாரிப்பா...’’ ‘‘பேக்கை வச்சுட்டு கைகால் அலம்பிக்கோ. தண்ணி குடி...’’ ‘‘உங்க பெண்ணா..?’’சிரித்தான்.
தன் அசட்டுத்தனம் உணர்ந்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். ‘‘மேடமை எப்போ பார்க்கலாம்..?’’ “ஈவ்னிங் அஞ்சு மணிக்கு...” “நாளைக்கு மார்னிங் க்ளாஸ் உண்டா..?” உள்ளே போன சிறுமி வந்து விட்டாள். கையில் டம்ளர்.
“ஆண்ட்டி தண்ணி வேணுமா..?” நீட்டியதை வாங்கிக் குடித்தாள். சிறுமி மடமடவென்று பேசினாள். “புதுசா இருக்காங்க. எல்லாம் சொல்லிட்டிங்களாப்பா..?” “இல்லம்மா. இப்பதான் வந்தாங்க...”“ஆண்ட்டி. சுரிதார் போடுவிங்களா. ஈசியா இருக்கும். எதுவும் சாப்பிடாம வரணும். இல்லாட்டி சாப்பிட்டு ஒரு மணி நேரமாச்சும் ஆகியிருக்கணும். ஏதாச்சும் உங்களுக்கு ஸ்பெஷலா பிரச்னை இருந்தா அதை முதல்லியே சொல்லிரணும். ஹ்ம்ம்... அப்புறம்...’’ பெரிய மனுஷி போலத் தலையில் ஒற்றை விரலால் தட்டிக் கொண்டாள்.
“அவ்வளவுதானேப்பா...” “ஏதாச்சும் சர்ஜரி ஆகியிருந்தா அதை சொல்லிடணும்...” “அதான் சொல்லிட்டேனே. ஸ்பெஷலான்னு...” “கரெக்ட். இன்னும் தெளிவா இருக்கட்டும்னு...” “ஓக்கே. ஓக்கே...’’
கீழே ஒரு விரிப்பைப் போட்டாள். “மயூராசனம் சரியா பண்றேனான்னு சொல்லுப்பா...” அலட்டிக் கொள்ளாமல் கைவிரல்களைத் தரையில் ஊன்றி தலையை நிமிர்த்தி கால் களையும் உயர்த்தினாள். உடல் அழகாய் இசைந்து கொடுத்தது.
“கை ஒட்டியிருக்கணும். இவ்ளோ கேப் வேண்டாம்...’’ “உங்களுக்கும் யோகா தெரியுமா?’’ சிறுமி சிரித்தாள். “அப்பாதான் அம்மாக்கே மாஸ்டர்...’’ “ஏய்...’’ செல்லமாய் அதட்டினான்.“லேடிசுக்கு சொல்லித் தரலாம்னு அவங்களையும் தயார் பண்ணிட்டேன்...”“அந்த சர்டிபிகேட், போட்டோஸ்லாம் பாருங்க ஆண்ட்டி...’’எதிர் சுவரில் படங்கள்.
படத்தை விட நேரில் இன்னும் இளமையாய் இருந்தான். பக்கத்திலேயே அவன் மனைவியின் படமும் சர்டிபிகேட்டும்.“எவ்ளோ நாள் வரணும்?’’“உங்க தேவை என்னன்னு தெரியல. நார்மல் ஃபிட்னஸ், குறிப்பா ஏதாவது உடல் சிக்கல் இப்படி தேவைக்கேற்ப பயிற்சிக் காலம் மாறும்...” “நீங்க ஃபிட்டா இருக்கீங்க ஆண்ட்டி. ரெண்டு மூணு மாசம் போதும்...”“ஸ்ஸ்...” அதட்டினான்.
விளையாட்டாய் வாயைப் பொத்திக் கொண்டாள்.“மேலூர்லேர்ந்து வரேன். பஸ்லதான். டூவீலர் ஓட்டத் தெரியாது...’’ “அங்கேர்ந்தும் வராங்க...”“அவங்கதான் சொன்னாங்க. நல்லா சொல்லித் தராங்கன்னு...” சிறுமி கையில் இப்போது பாடப் புத்தகம். கவனம் சிதறாமல் அமர்ந்திருந்தாள். தன் மகளைப் பற்றி நினைத்தாள். அவளையும் கூட இங்கே அழைத்து வரலாமோ. “சின்னப் பசங்களுக்கும் சொல்லித் தருவீங்களா..?”
“என்ன வயசு?’’ “இவ மாதிரி. இவ வயசு...” “ம்ம்...” அவளுக்கு அடுத்த பஸ்ஸுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. வேறு வேலையும் இல்லை. பஸ் ஸ்டாப்பில் போய் நிற்பதற்கு இங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் இருந்து விட்டுப் போகலாம் என்கிற யோசனையும் மனசுக்குள் ஓடியது.கையில் வைத்திருந்த கட்டைப்பையை கீழே வைத்தாள். விரல்களை சொடுக்கிக் கொண்டாள். மீண்டும் பையை எடுக்கக் குனிந்தவளிடம் சொன்னான். “வேற டவுட் இருந்தாலும் கேளுங்க...” “வந்து...”
சிறுமி நிமிர்ந்து பார்த்து விட்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். வந்தவள் நெளிந்ததும் அவனுக்குப் புரிந்து விட்டது. “பீரியட்ஸ் டயத்துல வர வேண்டாம்...”
“ம்ம்...” “மோர் வேணுமா ஆண்ட்டி?’’ “இல்லம்மா. கிளம்பணும். வரேன். தேங்க்ஸ்...’’ கட்டைப்பையைத் தூக்கியதும் சட்டென்று அதன் வாய் பிளந்துகொண்டு உள்ளிருந்தவை சிதறின. “ஸாரி...’’ என்றாள் பதற்றமாய்.
குனிந்து திரட்ட முயன்று கூடுதலாய் இன்னும் பதற்றம். சிறுமி எழுந்து வந்து பொறுமையாய் எடுத்தாள். அவன் உள்ளே போய் ஒரு கட்டைப்பையை எடுத்து வந்தான்.
“இதுல வச்சுக்குங்க...” தடுமாறி மறுக்க முயன்றவளிடம் சொன்னான்.“ஒண்ணும் பிரச்னை இல்லை. எங்க வீட்டுல நிறைய இருக்கு. ஜவுளி வாங்கப் போனாலே கட்டப்பையைக் கேட்டு வாங்கிருவோம் மறக்காமல். அப்படி ஃபீல் பண்ணா நாளைக்கு வரப்போ திருப்பிக் கொடுங்க...” என்றான் சிரிப்புடன்.சுவரின் ஓரத்திற்கு ஒன்று ஓடியிருந்தது. சிறுமி அதைப் பார்த்துவிட்டு எடுக்கப் போனாள். உருண்டை வடிவில் ஏதோ ஒரு தின்பண்டம். பிளாஸ்டிக் டப்பாவுக்குள் கிரீம்.
“ரிஷிக்கு பிடிச்சது. என் பையன்...” என்றாள் சிரிப்புடன். “டிவில காட்டுவாங்க...’’ “உனக்குப் பிடிக்குமா? எடுத்துக்கோ. ரெண்டு வாங்கி இருக்கேன்...” “வேண்டாம் ஆண்ட்டி. எனக்கு பல்வலி வரும்...” கட்ைடப்பைக்குள் அதைப் போட்டு விட்டாள். மறுபடி படிக்கப் போய் விட்டாள். “யோகா மட்டுமா இல்லாட்டி வேற ஏதாச்சும் சொல்லித் தருவீங்களா?” “வேறன்னா...’’
“தியானம்...” “யோகாவே ஒரு வகை தியானம். உடல் அமைதிப்படும்போது மனசுக்கும்...’’ “தியானம் செஞ்சா மனசுல அமைதி வருமா?” “ம்ம்...”
“யார் என்ன செஞ்சாலும் சொன்னாலும் அமைதியா இருக்க முடியுமா..?” அவள் குரலில் ஒருவிதத் தவிப்பு. அவன் சொல்லப் போகும் பதிலைவிட அவள் மனதில் இருப்பதைக் கொட்டும் ஆவேசம். மூன்றாம் மனிதனிடம் பேசுகிற எச்சரிக்கை உணர்வு இப்போது தளர்ந்து ஒரு வித நம்பிக்கை பற்றிக் கொண்ட மாதிரி. “எதுக்கு அமைதியா இருக்கணும்?” அவன் திருப்பிக் கேட்டதில் அவளிடம் குழப்பம்.
“நமக்குப் பிடிக்காத நம்மைப் பாதிக்கிற ஏதாச்சும் நடந்தா அப்ப அது தப்புன்னு சொல்லத் தெரியணும்தானே?” ரொம்ப நிதானமாய் சொன்னான். “எல்லார்ட்டயும் அப்படி சொல்ல முடியுமா..?” “ஏன் முடியாது?’’“அடி விழும்...’’
சொல்லும்போதே அவளிடம் கசப்புடன் கூடிய சிரிப்பும் வெளிப்பட்டது. கூடவே சொன்னாள். “நிறைய வாங்கியாச்சு...’’ கண் கலங்கி விட்டது அவளுக்கு. சொல்லும்போது இல்லாத கூச்சம் வார்த்தைகள் வெளிப்பட்டபின் அப்பிக் கொண்டது. தலையைத் தாழ்த்திக் கொண்டவளை நேராகப் பார்த்தான். “நம்ம மனசுல தைரியம் இருந்தா எதிராளிக்குப் பயம் வரும். கை ஓங்க மாட்டான். யோசிப்பான்...’’
அவளுக்கு அந்த வார்த்தை களில் நம்பிக்கை வரவில்லை. அதெப்படி சாத்தியம் என்பது போல் அவனையே வெறித்தாள். “நம்ப முடியலியா?” “அது வந்து...’’
“பிரபா... இங்கே வா...” மகளை அழைத்தான். “நீயே சொல்லு...” “என்னப்பா?” “அம்மாவை நான்...” சிறுமியிடம் ஒரு வினாடி தயக்கம். அப்பாவே சொல்ல சொன்னாலும் சரிதானா என்கிற மாதிரி. பிறகு பட்டென்று சொன்னாள்.
“அம்மாவை அப்பா அடிச்சிருக்கார். சண்டை போட்டிருக்கார் ஆண்ட்டி. அப்பத்தான் அம்மா கேட்டாங்க. ‘என்னை எந்த தைரியத்துல அடிக்கிறீங் க’ன்னு. எனக்கும் யோகா சொல்லிக் கொடுங்கன்னு...’’பிரபா அப்பாவை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.“சொல்லிக் கொடுத்தார். எனக்கும். கோவம் வந்தா மூச்சுப் பயிற்சி பண்ணுவோம். அப்பதான் அப்பா சொன்னார். மனுஷனுக்கு எல்லாக் குணமும் இருக்கும். பயந்து பின் வாங்கினா நமக்குத்தான் சிக்கல்.
துணிஞ்சு நிக்கும்போது எப்பேர்ப்பட்டவனும் யோசிப்பான்னு...”“யோகாதான்னு இல்லே. உங்க மனசுல துணிச்சல் வரவழைக்கிற ஏதாவது நல்ல உத்தி இருந்தா அதை ப்ராக்டிஸ் பண்ணுங்க. அடி வாங்கறதுதான் விதின்னு நம்பாதீங்க. உங்க மகன் உங்களைப் பார்த்துத்தான் கத்துக்குவான் வாழ்க்கைப் பாடத்தை...”கட்டைப்பையை எடுத்தவள் கீழே வைத்துவிட்டு பிரபாவை நெருங்கிக் கட்டிக் கொண்டாள். “தேங்க்ஸ்...”பையை எடுத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள். இன்னொரு தேங்க்ஸை அவள் பார்வை உதிர்த்தது திரும்புவதற்குள்.
- ரிஷபன்
|