ஏலத்துக்கு வரும் டைட்டானிக் கோட்!



கடந்த 1997ம் ஆண்டு வெளியான, சூப்பர் ஹிட் திரைப்படம் ‘டைட்டானிக்’ என்றுமே எவர்கிரீன்தான். சமீபத்தில் 3டி வெர்ஷனில் தியேட்டர்களில் ரீரிலீஸானபோதுகூட வசூலில் சக்கைப்போடு போட்டது. 
படத்தின் ஹீரோ லியானார்டோவும், ஹீரோயின் கேட் வின்ஸ்லட்டும் இன்றும் பலரின் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இப்போது அதற்கென்ன என்கிறீர்களா? இருக்கிறது.

இந்தப் படத்தில் கேட் வின்ஸ்லட் அணிந்து நடித்த ஓவர்கோட்தான் இப்போது ஹாட் டாப்பிக். ஏனெனில், அடுத்த மாதம் 13ம் தேதி இந்த ஐகானிக் ஓவர்கோட் ஏலம் விடப்பட இருக்கிறது. அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த மிகப்பெரிய ஏல நிறுவனமான கோல்டின் இந்தக் கோட்டினை ஆன்லைனில் ஏலம் விட இருப்பதாகக் கூறியுள்ளது.

கடந்த வாரம் இந்த ஆடைக்கான இப்போதைய ஏலத்தொகை 34 ஆயிரம் டாலரென இருந்தது. அதாவது இந்திய மதிப்பிற்கு 28 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகைக்கு ஐந்துபேர் ஏலம் கேட்டுள்ளனர்.   

பிங்க் நிற கம்பளியில் கறுப்பு எம்பிராய்டரியால் உருவாக்கப்பட்ட இந்த ஓவர்கோட் டெபோரா லின்ஸ்காட் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒன்று. இந்த ஸ்காட்தான், ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் சிறந்த காஸ்டியூம் டிசைனருக்கான ஆஸ்கார் விருதினை வென்றவர். கப்பல் மூழ்கும் காட்சியில் கேட் வின்ஸ்லட் அணிந்திருந்த இந்த ஓவர்கோட் படத்தில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பலராலும் பாராட்டப் பெற்றது. ஸ்காட்டும் புகழ்பெற்றார்.  

இப்போது கோல்டின் ஏல நிறுவனத்தின் நிறுவனரான கென் கோல்டின் இந்த ஓவர்கோட் ஒரு லட்சம் டாலருக்கும் அதிகமாக ஏலம் போகும் என, தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பின்படி சுமார் 83 லட்சத்திற்கும் அதிகமாக போகும் என்கிறார் அவர். 

இதை நல்ல விலைக்கு, ‘டைட்டானிக்’ திரைப்படத்தின் ரசிகர்கள் யாராவதோ அல்லது திரைப்பட நினைவுச்சின்னங்கள் சேகரிப்பாளரோ அல்லது பாப் கலாசார சேகரிப்பாளரோ அல்லது தங்கள் மனைவிக்காக யாராவதோ நிச்சயம் வாங்க முன்வருவார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறார் கோல்டின்.

பி.கே.