தகிக்கும் வெப்பம்...என்ன காரணம்.. ?என்ன செய்ய வேண்டும்..?
சமீபமாக அதிக வெயிலைச் சந்தித்து வருகிறது தமிழ்நாடு. கடந்த வாரம் 115 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சில இடங்களில் பதிவாகி எல்லோரையும் களைப்பாக்கியது. சென்னையில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை ஏறியிறங்கியது. கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட மிகமிக அதிகமாக அதாவது 5.1 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.அதுமட்டுமல்ல.
மியான்மர் அருகே கரையைக் கடந்த மோக்கா புயலின் காரணமாக வெப்பம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இருந்தும் மாலை நேரங்களில்கூட மக்களால் வெளியில் நடமாட முடியவில்லை. அந்தளவுக்கு வெயில் தகித்தது. தகித்துக் கொண்டும் இருக்கிறது. ஃபேன் ஓடினாலும் வியர்வை வழிந்தோடுகிறது.
இந்த வெயில் ஏன் இவ்வளவு வெயிலாக இருக்கிறது... இது வெப்பஅலையா... என்கிற கேள்விகளுடன் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் பேசினோம்.
‘‘சென்னையில் 40, 42 டிகிரிக்கு மேல் வந்ததுக்கே வெயில் படுத்தி எடுக்குதுனு பேசுறோம். ஆனா, இதே சென்னையில் 2003ம் ஆண்டு 45 டிகிரி பதிவாகியிருக்கு. 44, 43 எல்லாம் அப்ப இருந்திருக்கு. ஆனா, பலரும் முதல் தடவையாக ஃபீல் பண்ற மாதிரி சொல்லிட்டு இருக்கோம்.
அப்போது ஒருநாள் மட்டும் 43 டிகிரினு இருக்காமல் தொடர்ந்து நான்கு நாட்கள் எல்லாம் 43 டிகிரி, 44 டிகிரினு இருந்திருக்கு. ஆக, இப்ப ஒருநாள் 42 டிகிரி செல்சியஸ் போயிட்டு கீழிறங்கி வர்றதுக்கும், அப்ப தொடர்ந்து 43, 44 டிகிரி இருந்ததிருப்பதுக்கும் ஒப்பீடு செய்தால் எவ்வளவு மோசமான சூழ்நிலையை எல்லாம் சந்தித்திருக்கோம்னு புரியும். இப்ப காலப்போக்கில் சுற்றுப்புறச் சூழ்நிலை மாறுகிறபோதும், மற்ற காரணிகளாலும் வெப்பம் அதிகரிப்பதைப் பார்க்கிறோம். அந்தவகையில்தான் இந்த வெப்ப அதிகரிப்பை எடுத்துக்கணும். இது வெப்பஅலை கிடையாது...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.
‘‘வெப்ப அலையை எப்படி கணக்கிடுறோம்னா இயல்பைவிட, அதாவது மலைப்பகுதி, கடல்பகுதி, உள்பகுதினு ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு மாதிரி வெப்பம் இருக்கும். அங்க சராசரி எவ்வளவு பதிவாகுது, சராசரியிலிருந்து எவ்வளவு அதிகம் பதிவாகுது என்பதைப் பொறுத்து அது வெப்ப அலையா இல்லையானு தெரியும்.
இப்ப மலைப்பகுதிக்கு 30 டிகிரி, கடல்பகுதிக்கு 37 டிகிரி, உள்பகுதிகளுக்கு 40 டிகிரி அல்லது அதுக்குமேல் இருக்கலாம். இயல்பு 40 டிகிரினு வைத்தால் 45 டிகிரி எனப் பதிவாகும்போது 5 டிகிரி அதிகம். இதுல 4.6 டிகிரியிலிருந்து 6 டிகிரி வரை போனால் அதை வெப்ப அலைனு சொல்றோம். அதுவும் ஆறு டிகிரி வரை போச்சுனாதான் அது வெப்பஅலை. அதுக்கு கீழ உள்ளதை எல்லாம் இயல்பைவிட வெப்பம் அதிகம்னு சொல்றோம். கடந்த வாரம் வந்தது வெப்ப அலை கிடையாது. இதுக்குனு ஒரு அளவுகோல் இருக்கு. அதாவது இந்த ஆறு டிகிரி உயர்வு ரெண்டு இடத்துல இருக்கணும். அதுவும் தொடர்ச்சியாக ரெண்டு நாட்கள் இருக்கணும். ஆனா, இங்க வெப்பம் ஆறு டிகிரிக்குப் போகல. நான்கு டிகிரி போயிருக்கு. அதனால, இதை வெப்பம் அதிகமாக பதிவான சூழல்னு சொல்றோம். வெப்ப அலை இதைவிட இன்னும் மோசமாக இருக்கும்...’’ என்கிறவர், இதற்கான காரணங்கள் பற்றிக் குறிப்பிட்டார்.
‘‘இந்தமுறை வெப்பம் அதிகரிக்க மோக்கா புயலும் ஒரு காரணம். வங்கக்கடல்ல புயல் திசைமாறி வடகிழக்கு நோக்கிப் போகும்போது அதையொட்டி காற்றிலுள்ள ஈரப்பதம் எல்லாம் போயிடும். அப்ப மேகக்கூட்டங்கள் உருவாகாத சூழல் இருக்கும். வடமேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். அப்ப வெப்பம் அதிகரித்து காணப்படும்.
உள்பகுதியா, கடல்பகுதியா, மலைப்பகுதியா என்பதைப் பொறுத்து இந்த வெப்பத்துல மாற்றங்கள் இருக்கும்.சென்னை போன்ற நகரங்களில் கடல்காற்று ரொம்ப முக்கியம். கடல்காற்று உருவானால்தான் அது வெப்பத்தைக் கட்டுப்படுத்தும். கடந்த வாரம் இந்த மோக்கா புயல் போனபிறகுதான் கடல்காற்று 15ம் தேதி உருவானது. அது ரொம்ப பலவீனமாக இருந்தது. அதனால, மூணு நாட்கள் வெப்பம் அதிகமாக இருந்தது.
ஆனா, அந்த வெப்பம் உச்சத்தைத் தொட்டுட்டு அங்கேயே ரொம்ப நேரம் நிற்குதா இல்ல உடனே இறங்கி வருதானு இரண்டு நாட்கள் ஒப்பீடு பண்ணும்போது மூன்றாவது நாள் சீக்கிரமாக இறங்கிடுச்சு. ஏன்னா, கடல்காற்று வீச ஆரம்பிச்சிடுச்சு.
அப்புறம், இயல்பாகவே மே மாதத்தின் ரெண்டாவது வாரம் வெப்பம் அதிகமாகவே இருக்கக்கூடிய காலக்கட்டம். சூரிய வெளிச்சம் நேரடியாக பூமியில் வந்து விழும். அதனால இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும். புயல் இருப்பதால் மட்டுமல்ல, புயல் இல்லாத காலக்கட்டத்துலகூட நமக்கு வெப்பநிலை அதிகம் இருந்திருக்கு. 44 டிகிரி எல்லாம் போயிருக்கு. அடுத்து, தமிழக பகுதியைப் பொறுத்தளவில் நாம் ஆந்திராவை ஒட்டி இருக்கிறோம். அங்க வெப்பம் அதிகம் இருந்தால், வடமேற்குத் திசையில் இருந்து வறண்ட காற்று வீசும்போது நமக்கு வெப்பம் உயரும். இதுதவிர நகர்மயமாதல், காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமடைதல் உள்ளிட்ட வற்றையும் வெப்பம் உயர்ந்திட்டு வருவதற்கான காரணங்களாக பார்க்கிறோம்.
இந்த முறை மேற்கு தாம்பரத்துல சென்னையைவிட அதிக வெப்பம் பதிவாகியிருக்கு. பொதுவாக, நகரத்தில் வண்டியின் புகை உள்ளிட்ட காரணிகளால் வெப்பம் அதிகம்னு சொல்வாங்க.
இதை Urban heat islandனு குறிப்பிடுவாங்க. அதாவது புறநகர்ப் பகுதியைவிட நகர்ப்பகுதியில் வெப்பம் அதிகம் இருக்கும். ஆனா, இப்ப புறநகர்ப் பகுதியில் வெப்பம் அதிகமாகியிருக்கு. இதையும் பார்க்கிறோம்.
இனி, அந்தளவுக்கு வெப்பம் இருக்காது. இயல்பைவிட கொஞ்சம் கூடலாம். ஆனா, சீக்கிரமே தென்மேற்குப் பருவமழை செட்டாகப் போகுது. கேரளா, கர்நாடகாவுல நல்ல மழை பெய்தால் அந்தக் காற்றில் உள்ள வெப்பம் இங்கே வரும்போது நமக்கு வெப்பம் கூட வாய்ப்பு இருக்கு. அவ்வளவுதான்...’’ என்கிறார் பாலச்சந்திரன்.
என்ன சாப்பிடலாம்..?
வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கோடைக்கான உணவுகள் குறித்தும் டயட்டீசியன் அம்பிகா சேகர் தரும் டிப்ஸ்... ‘‘முதல்ல வெயிலுக்கு டீைஹட்ரேடு ஆகாமல் அதாவது நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கணும். அதனால், வழக்கமாக குடிப்பதைவிட எல்லோரும் அதிகமாக நீர் அருந்தணும். ஜூஸ், இளநீர், மோர் இந்தமாதிரி எடுத்துக்கணும்.
நார்மலாக நாம் 2ல் இருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்தணும். இந்த வெயில் காலத்துல வெப்பத்தைத் தணிக்க அதைவிட அதிகமாக குடிக்கணும். சிறுநீர் போகலனு நினைக்கக்கூடாது. ஏன்னா, அது வியர்வையாக வெளியேறிடும். அடுத்து சாப்பாடும் நீர் ஆகாரமாக இருந்தால் நல்லது. பொதுவாக, வெயில் காலத்துல பலருக்கும் உணவு எடுக்காது.
அப்ப கூழ், கஞ்சி, தயிர்சாதம் மாதிரியான உணவுகளை எடுத்துக்கணும். அப்புறம், மசாலா பொருட்கள் உள்ள உணவுகளைக் குறைச்சுக்கணும். அது செரிமானம் ஆகாது. வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ரொம்ப நீரிழப்பை ஏற்படுத்திடும். மருத்துவமனையில் சேர்க்கிற அளவுக்குப் போயிடும். அதனால கவனம் தேவை. மசாலா ஐட்டம் தவிர்த்து கடை உணவுகளையும் தவிர்க்கணும். முடிந்தவரை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது. லைட்டான உணவை சாப்பிடுவது இன்னும் நல்லது. அப்புறம், அசைவ உணவுகள் சாப்பிடுவதையும் குறைச்சுக்கணும். அப்படியே சாப்பிட்டால் காலையிலோ, மதியமோ எடுத்துக்கலாம். எண்ணெயில் பொரித்த பலகாரங்களும் சாப்பிட வேண்டாம். வேணும்னா குறைவாக எடுத்துக்கலாம்.அப்புறம், உடம்பில் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் குறையாமல் இருக்க காய்கறிகளும், பழங்களும் எடுத்துக்கணும்.
இந்தக் கோடை காலத்திற்கென்றே உள்ள காய்கறிகள், பழங்களை சாப்பிடலாம். வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் இதெல்லாம் இயற்கையாகவே கோடை காலத்துலதான் அதிகம் வருது. சூட்டைத் தணிக்கும் பழங்கள் இவை. ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை உடலுக்கு ஒத்துவந்தால் சாப்பிடலாம். சிலருக்கு ஒவ்வாமை இருக்கும். அதைப் பார்த்து எடுத்துக்கணும்.
அடுத்து குழந்தைகள் முடிந்தவரை வெயிலில் விளையாடுவதை தவிர்க்க செய்யணும். வியர்வை அதிகம் வெளியேறாமல் பார்த்துக்கணும். அப்படியே ஆனாலும் தண்ணீர், பழ ஜூஸ் கொடுக்கணும். முதியோர்களுக்கு, குறிப்பாக சுகர் உள்ளவங்களுக்கு மோர், லெமன் ஜூஸ் மாதிரி கொடுக்கலாம்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த சீசனை பயன்படுத்திக்கணும். ஏன்னா, இந்த சீசன்ல பசி அவ்வளவாக இருக்காது. அவங்க கூழ் மாதிரி டயட்டை பின்பற்றி, கார்போஹைட்ரேட் குறைவாக எடுத்து வொர்க்அவுட்டில் கவனம் செலுத்தினால் உடல் எடை நிச்சயம் குறையும்...’’ என்கிறார் அம்பிகா சேகர்.
சில தகவல்கள்...
மதியம் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.
தாகமாக இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
வெளிர் நிற, தளர்வான, மெல்லிய பருத்தி ஆடைகளை அணியவும். வெளியே செல்லும்போது கூலிங் கிளாஸ், குடை, தொப்பி, காலணிகள் பயன்படுத்தவும்.
வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்கவும். ஜன்னல்களை திரைச்சீலைகள் கொண்டு போர்த்தவும். இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்.
பேராச்சி கண்ணன்
|