81 வயது மாடல்!



மார்த்தா  ஸ்டூவர்ட்... வயதானவர்களுக்கு இந்தப் பெயர் பரிச்சயம். 2கே கிட்ஸுக்கு..? மனதில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய பெயர்.காரணம், உலகின் வயதான மாடலாக பிரபல விளையாட்டு ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ மாத இதழின் அட்டைப் படத்தில் இவர் இடம்பிடித்திருப்பதுதான். யெஸ்... 81 வயதான மார்த்தா விளையாட்டு நீச்சல் உடையில் அட்டைப் பக்கத்தில் பிரசுரமானதுதான் தாமதம்... உலக டிரெண்டிங்கில் டாப் ஆகியிருக்கிறார்.

81 வயதில் மாடல் என்பதே ஆச்சர்யம்... அதிலும் ஒரு பிரபல அமெரிக்க மாத இதழின் அட்டைப்படத்தில் எனில் இன்னும் ஆச்சர்யம்தானே! அதிலும் இந்த ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ மாத இதழ் 1954ம் ஆண்டு முதல் பிரசுரமாகிக் கொண்டிருக்கிறது. யார் இந்த மார்த்தா... என்றால் இவர் ஒரு மாடல் மட்டுமல்ல என விரிகிறது 80 வருட சாதனை சரித்திரங்கள்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை . இது மட்டுமா..? ‘மார்த்தா ஸ்டூவர்ட் லிவிங் ஓம்னிமீடியாவின் நிறுவனர், வெளியீட்டாளர், பொறுப்பாசிரியர். ஒளிபரப்பு, வணிகம் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு வணிக முயற்சிகள் மூலம் வெற்றியைக் கண்டவர்.

அமெரிக்காவின் விற்பனைகளில் கெத்து காட்டிய பல புத்தகங்களை எழுதிய எழுத்தாளரும் இவரேதான். ‘மார்த்தா ஸ்டூவர்ட் லிவிங்’ என்னும் பத்திரிகையை சொந்தமாக நடத்தி வெளியிட்டதுடன் இரண்டு சிண்டிகேட் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாகவும் முத்திரை பதித்திருக்கிறார். என்றாலும் ஸ்டூவர்ட் ImClone பங்கு வர்த்தக வழக்கு தொடர்பான குற்றச் செயல்களில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 2004ம் ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார் மார்த்தா. ஐந்து மாதங்கள் ஃபெடரல் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு மார்ச் 2005ல் விடுதலை அடைந்தார்.

இந்த சம்பவம் அவரது ஊடக சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என பல எதிர்த்தரப்பு நிறுவனங்கள், போட்டி ஊடக உரிமையாளர்கள் நம்பினர்.
ஆனால், சிறையிலிருந்து திரும்பியவுடனேயே தனது பாதையை மாற்றினார். 2006ல் அவரது நிறுவனம் மீண்டும் லாபத்திற்குத் திரும்பியது. ஸ்டூவர்ட் 2011ம் ஆண்டு மார்த்தா ஸ்டூவர்ட் லிவிங் ஓம்னிமீடியாவின் இயக்குநர்கள் குழுவில் மீண்டும் சேர்ந்தார்.

1941ல் எட்வர்ட் கோஸ்டிரா மற்றும் மார்த்தா இருவருக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் இரண்டாவது குழந்தை. மார்த்தாவின் பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம் என்பதால் வருமானம் போதவில்லை.

கிடைக்கும் வருமானத்தில் மூன்று வேளை சாப்பிடவே அவ்வளவு சிரமப்பட்டனர். இந்நிலையில்தான் மார்த்தா தனது 10 வயதில் நியூயார்க் யாங்க்கீஸ் பேஸ்பால் அணியின் முன்னணி வீரர்களான மிக்கி, மேன்டில், யோகி பெர்ரா, மற்றும் கில் மெக்டார்ட் ஆகியோரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பராமரிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார்.

அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, வீட்டில் வேண்டிய தேவைகள் செய்வது  உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அந்த சின்ன வயதிலேயே மார்த்தா பார்க்கத் தொடங்கினார். அதில் வரும் வருமானம் மூலம் தனது தேவைகளுடன் மாடலிங்கிற்கான ஆடிஷன் பயணங்களையும் மேற்கொண்டார்.

ஏனெனில் மாடலிங் செய்வது என்பது மார்த்தாவின் கனவு, லட்சியமாக இருந்தது.அவரது விடாமுயற்சியின் விளைவாக 15வது வயதில் யுனிலிவர் தொலைக்காட்சி விளம்பரத்தில் இடம்பெற்றார். தொடர்ந்து பல டிவி விளம்பரங்கள், போஸ்டர்கள், பேனர்கள்... எல்லாம் மார்த்தாவுக்கு சாத்தியப்பட்டன.

அம்மாவிடம் சமையல், பாட்டியிடம் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் என ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டவர் அனைத்தையுமே தொழிலாகவும், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாகவுமே பயன்படுத்தத் தொடங்கினார்.மார்த்தாவின் அப்பா எட்வர்ட் தோட்டக் கலையில் கைதேர்ந்தவர்.

அதையும் விட்டு வைக்காத மார்த்தா, தோட்டக்கலையையும் கற்றுக்கொண்டு தனக்குத் தெரிந்த பணக்கார வீட்டுத் தோட்டங்களை பகுதி நேரமாக பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அத்துடன் மணிக்கு இவ்வளவு என பணத்தை வாங்கி தோட்டங்களைப் பராமரித்தார். 

வேலைக்கு இடையே பள்ளிப்படிப்பும் முடிந்தது. டிவி ஃபேஷன் மாடலாக தனது வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த மார்த்தா, அதில் வரும் பணத்தைக் கொண்டு கல்லூரிப் படிப்பையும் முடித்தார்.

மேற்படிப்பில் என்ன செய்யலாம் என்றபோதுதான் ஆண்ட்ரி ஸ்டூவர்ட்டின் நட்பு ஏற்பட்டது. அவர் மூலம் சட்டம் பயின்றவர், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் - ஆண்ட்ரியையே - 1961ல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்புதான் மார்த்தாவின் மாஸ்டர் திட்டங்கள் அரங்கேறின. தனது மாமனாரின் பங்கு வர்த்தக நிறுவனத்தை அவருக்கே சவால் வைக்கும் விதத்தில் நடத்தினார். அதை மையமாகக் கொண்டே இரண்டாவது நிறுவனத்தையும் ஆரம்பித்தார் மார்த்தா.

பல பங்குச்சந்தை வாங்கல்கள், ஏற்றங்கள் என மார்த்தாவின் வாழ்க்கை முழுக்க பணம், பணம் நோக்கிய பயணமாகவே இருந்தது. தவிர ஆண்ட்ரி மூலம் டச்சு எழுத்தாளர்களின் நட்பு கிடைக்க... சுபயோக சுபதினத்தில் பத்திரிகைத் துறையிலும் கால் பதித்தார் மார்த்தா. தொடர்ந்து பத்திரிகை, டிவி,  என அனைத்தையும் உள்ளடக்கிய ‘மார்த்தா ஸ்டூவர்ட் லிவிங்’ என்னும் மீடியா குரூப் நிறுவனத்தைத் தொடங்கினார்.

இப்படி தனது 81வது வயதிலும் மார்த்தா பிசியாக இருக்கிறார். இளமையாகவும்தான்! அதன் விளைவுதான் இப்போதைய மாஸ் டிரெண்ட்!‘‘ஒரு பெண்ணாக எப்போதுமே மார்த்தாவைக் கண்டு ஆச்சர்யப்படுகிறேன். எக்காலத்திலும் எங்களைக் காட்டிலும் மார்த்தா ஒரு ஸ்டெப் முன்னால் இருப்பார். தொழில் உலகில் மார்த்தா ஒரு பேரரசிதான்...’’ ஆச்சர்யத்துடன் சொல்கிறார் ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ இதழின் பொறுப்பாசிரியர் எம்.ஜே. டே!

ஷாலினி நியூட்டன்