இந்தியாவின் சிறந்த காவல் நிலையங்களில் எட்டாம் இடம் பிடித்த தொட்டியம்!
சமீபத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த பத்து காவல்நிலையங்களைத் தேர்ந்தெடுத்து அறிக்கை வெளியிட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் காவல்நிலையம் எட்டாம் இடம் பிடித்து பாராட்டுதலைப் பெற்றிருக்கிறது. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் சிறப்பாகச் செயல்படும் சிறந்த பத்து காவல்நிலையங்களைத் தேர்ந்தெடுக்கிறது.
இந்தியாவில் மொத்தம் 15,579 காவல்நிலையங்கள் உள்ளன. இதில், சொத்துக் குற்றம், பெண்களுக்கு எதிரான குற்றம், பலவீனமான பிரிவினருக்கு எதிரான குற்றம் ஆகியவற்றை எப்படி அந்தக் காவல்நிலையம் கையாண்டிருக்கிறது என்பதை முதல்கட்டமாக பார்க்கிறது. பிறகு, காவல் நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்களின் அணுகுமுறை, பொதுமக்களின் கருத்து ஆகியவற்றை இரண்டாம் கட்டமாக பார்த்து சிறந்த காவல்நிலையத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
இதன்படி கடந்த 2019ல் தேனி அனைத்து மகளிர் காவல்நிலையம் நான்காம் இடத்தைப் பிடித்தது. 2020ம் ஆண்டு சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இப்போது தொட்டியம் காவல்நிலையம் எட்டாம் இடம் பிடித்துள்ளது. ‘‘இந்த தரவரிசை கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை உள்துறை அமைச்சகத்துல இருந்து நேரடியா வந்து பார்க்கிறாங்க. அந்தக் காவல்நிலையம் சட்டம் ஒழுங்கை எப்படி கையாண் டிருக்கு... குற்ற வழக்குல ஒட்டுமொத்தமா எப்படி செயல்பட்டிருக்குனு பார்த்தே தேர்ந்தெடுக்கிறாங்க.
இது கொஞ்சம் சென்சிட்டிவ்வான ஏரியா. ஒரு சின்ன விஷயத்தைக் கூட பெரிசாக்கிடுவாங்க. அதை நாம் உடனே கட்டுப்படுத்தணும். அப்படிச் செய்யும்போது பிரச்னைகள் தீர்ந்திடும். இதை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சிறப்பா கையாண்டிருக்கார். அப்புறம், எஸ்பி சார், டிஐஜி சார், ஐஜி சார் சொல்படி பிரச்னைகளை உடனே தீர்த்து பிரச்னைகள் இல்லாமல் பார்த்துக்கிறோம். அதனால, அமைதியா போயிட்டு இருக்கு. அதுதான் எங்களுக்கு இந்த இடத்தைப் பெற்றுத் தந்திருக்கு...’’ என்கிறார் முசிறி டிஎஸ்பி அருள்மணி.
‘‘நாங்க மக்களின் பிரச்னைகளை அப்பப்ப தீர்த்திடுவோம். இதை ஒரு பாலிசியா வச்சிருக்கோம். அப்புறம், எல்லா மக்களையும் ஒரே மாதிரி நடத்துவோம். எந்த ஒரு விஷயத்துக்கும் பயந்து நிற்கிறதில்ல. நேரடியா போய் அதைச் சந்திச்சு அந்தப் பிரச்னையை தீர்த்து வைப்போம். பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் போக்குவரத்தையும் எப்பவும் கிளீன் பண்ணிடுவோம். உள்துறை அமைச்சகம் எந்த வகையில் தேர்ந்தெடுத்தாங்கனு தெரியாது. ஆனா, நாங்க சரியா செய்திட்டு இருக்கோம். எங்க செயல் சிறப்பா போயிட்டு இருக்கு. அப்புறம், மக்களிடம் எங்க அணுகுமுறையும் எளிதா இருக்கும். நான் வந்தபிறகு சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் வன்முறையை தடுக்கும் பொருட்டு உள்ள போக்சோ சட்டத்துல நான்கு வழக்குகள் பதிவு செய்திருக்கேன். அந்தக் குற்றச் செயல்ல ஈடுபட்டவங்களை உடனே கைது செய்து வழக்கு பதிந்தேன்.
இப்படி உடனே தீர்வு காண்றதால மக்களுக்கும் பிடிச்சிருக்கு. அதனால, அவங்க பொதுமக்கள் கருத்துல தேர்ந்தெடுத்திருக்கலாம். இந்த இடம் கிடைச்சதும் எஸ்பி சார் உள்பட பலரும் வாழ்த்தினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்பவும் போல தொடர்ந்து எங்க பணியை சிறப்பா செய்வோம்...’’ என்கிறார் தொட்டியம் காவல் ஆய்வாளர் மோகன்ராஜ்.
பேராச்சி கண்ணன்
|