சூப்பர் ரசிகை!



கே.எஃப்.சி என்று சொன்னாலே போதும். இன்றைய தலைமுறையினருக்கு நாக்கில் எச்சில் ஊறும். அந்தளவுக்கு இந்த உணவகத்தின் ஃப்ரைடு சிக்கன், ஹம்பர்கெர்ஸ், சிக்கன் சேண்ட்விச்சின் சுவை அள்ளும். தினமும் ஒருவேளையாவது கே.எஃப்.சிக்கு விசிட் அடிக்கும் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். தவிர, கே.எஃப்.சிக்கு என்று தனித்த ரசிகர்கள் பட்டாளமே சமூக வலைத்தளங்களில் இயங்கிவருகிறது.
அந்த ரசிகர்களில் ‘நான்தான் சூப்பர் ரசிகை’ என்று நிரூபித்து டுவிட்டரில் வைரலாகியிருக்கிறார் ஒரு பெண். @Nokuzothantuli என்ற ஐடியில் இயங்கிவரும் இந்தப் பெண் என்ன செய்தார் தெரியுமா? கே.எஃப்.சியில் வாடிக்கையாளர்களுக்கு உணவை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து , உடையாக தைத்து அணிந்திருக்கிறார் இந்த ஃபேஷன் பிரியை.

பாக்கெட் உடை அணிந்து, கையில் கே.எஃப்.சி சிக்கனுடன் டுவிட்டரில் அவர் போஸ் கொடுக்க, ‘‘இந்தப் பெண்ணை கே.எஃப்.சியின் அம்பாஸிடர் ஆக்குங்கள்...’’ என்று நூற்றுக்கணக்கானோர் மறுமொழி இட்டு வருகின்றனர். மட்டுமல்ல, பல கே.எஃப்.சியின் சமூக வலைத்தளப் பக்கங்களும் அந்தப் புகைப்படத்தைப் பெருமிதத்துடன் பகிர்ந்து வருகின்றன.

த.சக்திவேல்