தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி!
எம்ஜிஆரே அசந்துபோன இந்தியாவின் ருடால்ப் வாலண்டினோ...
‘ஜெமினி’ நிறுவனம் தயாரித்த முதல் படத்தின் கதாநாயகன்...
வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படத்தின் ஹீரோ...
‘‘அவர் அழகானவர் மற்றும் கவர்ச்சியானவர். அவர் ஒரு பட்டதாரி மற்றும் புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞர். புதிய படத்தின் தயாரிப்பாளர்கள் அவரை ஹீரோவாக்க திட்டமிட்டுள்ளனர் என்பதை அறிந்ததும், நான் பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிந்து கொண்டேன்...’’இப்படி எழுதியவர் தமிழ் சினிமாவில் தனது நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளையடித்த எம்ஜிஆரேதான். அவர் எழுதிய ‘நான் ஏன் பிறந்தேன்’ சுயசரிதையில் ஒரு நடிகரைப் பற்றி இப்படி பொறாமைப்பட குறிப்பிட்டுள்ளார். அந்த நடிகர்தான் இந்தியத் திரையுலகின் ருடால்ப் வாலண்டினோ என வர்ணிக்கப்பட்டார். யார் அவர்?
தமிழ்த் திரையுலகில் கர்நாடக சங்கீத விற்பன்னர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி.என் பாலசுப்ரமணியம், என்.சி.வசந்தகோகிலம், எம்.எம்.தண்டபாணி தேசிகர் போன்றவர்களைப் போலவே அவரும் இசைமேதைதான்.அவரை நடிகர் என்று மட்டும் சுருக்கிட முடியாது. இசைப்பேராசிரியர், எழுத்தாளர், கவிஞர், சங்கீத வித்வான் என அவருக்கு பல முகங்கள் உண்டு.
எம்ஜிஆரே அசந்துபோன அந்த ஆணழகன் பெயர் வீரவநல்லூர் வேதாந்தம் சடகோபன். சுருக்கமாக வி.வி.சடகோபன்.திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் 1915ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி பிறந்த வி.வி.சடகோபனின் தந்தை வேதாந்தம், காப்பீட்டுக் கழக முகவராகப் பணியாற்றியவர். நாமக்கல் சேச ஐயங்காரிடமும், அரியக்குடி இராமானுஜ அய்யங்காரிடமும் கர்நாடக இசையை வி.வி.சடகோபன் முறைப்படி பயின்றவர்.
வைணவ இலக்கியத்தின் மீது பற்றுக் கொண்ட வி.வி.சடகோபன், ‘ஜெமினி’ நிறுவனம் தயாரித்த முதல் படத்தின் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.வெளிநாட்டில் (லண்டனில்) எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப் படத்தின் கதாநாயகன்; அது மட்டுமல்ல, தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி என்ற பெருமையும் வி.வி.சடகோபனுக்கு உண்டு.1937ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் மிசெல் ஒமலெவ் இயக்கிய ‘நவயுவன்’ படத்தில் வி.வி.சடகோபன் கதாநாயனாக அறிமுகமானார்.
அவருடன் சேஷகிரி பாகவதர், பி.ஆர்.ஸ்ரீபதி, பிக்சவதி, கோமதி அம்மாள், எம்.ஏ.ராஜாமணி உள்பட பலர் நடித்தனர். அந்தக் காலத்தில் படத்திற்கு தலைப்பு இரண்டாக வைக்கப்பட்டன. இப்படத்திற்கும் ‘நவயுவன் அல்லது கீதாசாரம்’ என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில் மன்னர் ஆறாம் ஜார்ஜுக்கு முடிசூட்டும் விழாவும் காட்டப்பட்டது. முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான கதாநாயகனாக பரபரப்பாக சடகோபன் பேசப்பட்டார். விடுதலைப் போராட்ட வீரர், திரைப்பட பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி என்ற ச.து.சு.யோகி 1939ம் ஆண்டு இயக்கிய படம் ‘அதிர்ஷ்டம்’. இப்படம் வி.வி.சடகோபன் கதாநாயகனாக நடித்த இரண்டாவது படம். அவருடன் கொத்தமங்கலம் சுப்பு, டி.சூர்யகுமாரி, கே.ஆர்.செல்லம், டி.எஸ்.தமயந்தி உள்பட பலர் நடித்தனர். சர்மா சகோதரர்கள் படத்திற்கு இசையமைத்தனர்.
1994ம் ஆண்டு ஜெயராம், ரேவதி, பிரபு நடிப்பில் வெளியான ‘பிரியங்கா’ படத்தில் வழக்கறிஞராக நடித்த நாசர், ரேவதியிடம் நீதிமன்றத்தில் கேட்கும் சில கேள்விகள் படம் பார்த்தோரைப் பதற வைத்தது. அதற்குக் காரணம் அப்படத்தின் வசனம்.அதேபோலவே ‘அதிர்ஷ்டம்’ படத்தில் கே.ஆர்.செல்லத்தின் வழக்கறிஞர், ஒரு பெண்ணிடம் கேட்ட கேள்விகள் இப்படத்திற்கு பெரிய சிக்கலை உருவாக்கியது.
சென்சார் போர்டு கடும் ஆட்சேபணைகளைத் தெரிவித்தது. அத்துடன் காட்சிகளை வெட்டி எறிந்தது. ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அதிர்ஷ்டம் பெற்றது.இப்படத்தில் கே.ஆர்.செல்லத்துடன் இணைந்து வி.வி.சடகோபன் பாடிய - எனது காதல் மோஹன மானே என்னுயிர் தந்தேனே செந்தேனே - மானே இனிதா மதன சிங்கார வைபோகா ஏக போகமாய் நீயும் நானுமாய் எனது காதல் மோஹன தீரா என்னுயிர்க்கு ஆதாரா...
பாடலைக் கேட்டுப் பாருங்கள். ‘மானே, தேனே’ என்ற சொற்களை வி.வி.சடகோபன் ஆலாபனை செய்திருக்கும் இடங்கள் ‘ஆஹா, அழகு’ என சொல்ல வைக்கும். இப்படத்தின் பாடல்களை ச.து.சு.யோகிதான் எழுதினார்.‘அதிர்ஷ்டம்’ திரைப்படத்தில் காதலியை எதிர்நோக்கி காத்திருக்கும் காதலனின் வேதனையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பாடலை வி.வி.சடகோபன் மிக அழகாகப் பாடியிருப்பார்.
வருவாளோ மாட்டாளோ மாலை நேரம் மீறுதே திருவினுமினியாள் தேனின் மொழியாள் தீனன் மோகம் தீரவே உருவம் தேயும் உயிரும் தீயும் ஓர் விநாடி ஓர் யுகமாய் நீளும்...
வீணையின் நாதத்துடன் போட்டி போடும் வி.வி.சடகோபனின் சங்கீதக் குரல்.ஜெமினி ஸ்டூடியோஸ் 1941ம் ஆண்டு தயாரித்த முதல் படம் ‘மதனகாமராஜன்’. திண்டுக்கல் ‘அமிர்தம் டாக்கீஸ்’ மூலம் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த பிரம்மாண்டமான இப்படத்தை பி.என்.ராவ் இயக்கினார். மதனகாமராஜனாக வி.வி.சடகோபனும், பிரேமவல்லியாக கே.எல்.வி.வசந்தாவும் நடித்தனர்.
அவர்களுடன் கே.கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு, டி.எஸ்.துரைராஜ், எம்.ஆர்.சுவாமிநாதன், எம்.வி.ராஜம்மா, கே.ஆர்.செல்லம், எம்.சுந்தரிபாய் உள்பட பலர் நடித்தனர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர் பி.எஸ்.ராமையா கதை, வசனம் எழுதினார். எம்.டி.பார்த்தசாரதி, ராஜேஸ்வரராவ் இசையமைத்தனர்.
வி.வி.சடகோபனுக்கு இணையாக கே.எல்.வி. வசந்தா போட்டி போட்டு இப்படத்தில் பாடல்களைப் பாடினார். வசந்தாவின் கவர்ச்சிகரமான உடையும், தோற்றமும், சடகோபனின் நடிப்பும், பாட்டும் காரணமாக படம் ஆறு மாதங்கள் ஓடி ஜெமினியின் முதல் தயாரிப்பை சூப்பர் ஹிட்டாக்கியது.இப்படத்தில் வி.வி.சடகோபன் பாடிய இந்தப் பாடலும் காதலியை அழைப்பது போலத்தான் அமைந்தது. பிரேமா பிரேமா நீ இல்லாமல் உறங்குவதெங்கே பாமினியே கொஞ்சும் ரூபிணியே அருகில் விரைந்து நீ வா வா...
காதலின் ஏக்கம் சடகோபனின் குரலில் தெறிக்கும். இதே படத்தில் இடம் பெற்ற ‘மின்திறமேனி...’ பாடலில் விசித்திரமே என்ற சொல்லை வி.வி.சடகோபன் பாடும் அழகே அழகு.
மின் திறமேனி கண்கவரும் விசித்திரமே ஏஏஏ ஏஏஏ கண் திறமோடு அயன் தந்த மெய்பாவையே மெய்பாவையே ஏஏஏ ஏஏஏ பொன் சிகை பொழிவோடு...
என சடகோபன் ராகமாலிகை பொழியும் இப்பாடலை பாபநாசம் சிவன் எழுதினார். இப்படத்தில் வசந்தாவுடன் இணைந்து சடகோபன் பாடிய -
இன்றே உன் மனம் இரங்கினதோ... எத்தனை நாளாய் மெய்த்தவம் புரிந்தேன் இன்றே உன் மனம் இரங்கினதோ கனவில் வந்து வந்து காட்சி தந்து மறைந்து எனையன்றோ சோதனை செய்தே...
என்ற அழகிய டூயட் பாடலும் இடம் பெற்றுள்ளது. ‘என் அண்ணன்’, ‘நினைத்ததை முடிப்பவன்’ உள்பட பல படங்களில் வில்லியாக நடித்த எம்.எஸ்.சுந்தரிபாய் துவக்க காலப்படங்களில் கதாநாயகியாக, நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தவர். ‘மதனகாமராஜன்’ படத்தில் டி.எஸ்.துரைராஜுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியிருப்பார். அவர் சடகோபனிடம் தன் காதலைச் சொல்வதைப் போல ஒரு பாடல் அமைக்கப்பட்டிருக்கும். அப்பாடலை வி.வி.சடகோபனுடன் இணைந்து பாடியவர் வேறு யாருமல்ல; எம்.எஸ்.சுந்தரிபாயேதான்.
வாழ்வினில் இன்றே நன்னாள் சோதரியே உன் சொல் விளங்கவில்லை தனிமையில் உங்கள் தரிசனம் இன்பம் தனிமை இதற்கு ஏன் மனைக்கே வருவேன் வாய்த்த சமயம் நழுவவிடுவது அழகோ அழகோ...
என போகும் இப்பாடல், ஒரு பெண் தன் காதலை பகிரங்கமாக வெளிப்படுத்துவது போல அந்தக் காலத்திலேயே காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதே படத்தில் என்.கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து வி.வி.சடகோபன், ‘துணை நீயே அருள் தாராய் பரஞ்சோதியே மாதொரு பாகா...’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.
1941ம் ஆண்டு முருகதாசா (முத்துச்சாமி அய்யர்) இயக்கத்தில் வி.வி.சடகோபன், என்.சி.வசந்தகோகிலம், கே.சாரங்கபாணி, ஏ.சகுந்தலா, எஸ்.வி.சுப்பையா உள்பட பலர் நடிப்பில் வெளியான இசைக்காவியம் ‘வேணுகானம்’. படத்தின் தலைப்பிற்கேற்ப கர்நாடக இசைமேதைகள் இணைந்து நடித்தனர். ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையில் வி.வி.சடகோபன் பாடிய -
விந்தை மாந்தர் செயலே வினைகளைத் தாம் செய்வதாகவே எண்ணி மமதையினால் மதி மயங்கி உழலும்... என அவர் பாடும் அழகில் மெய்மறந்து போவோம். இப்படத்தில் சடகோபன் பாடிய தத்துவப்பாடல் இடம் பெற்றுள்ளது.
ஏழை செல்வன் ஜாதி பேதம் இறைவனுக்கில்லையடா ஏர் உழுவோனும் பொன்முடி அணிவோனும் இறப்பது திண்ணமடா...
1942ம் ஆண்டு ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் ‘ஜீவனா முக்தி’ என்ற தெலுங்குப் படத்தில் மகாவிஷ்ணுவாக வி.வி.சடகோபன் நடித்தார். பி.சூரிபாபு, மாஸ்டர் விஸ்வம், கமலா குமாரி, அன்னபூர்ணா உள்பட பலர் நடித்தனர்.
இப்படத்துடன் திரைப்படத்துறையை விட்டு இசைத்துறைக்கு பயணமானார். மேடைகளிலும் வானொலியிலும் அவர் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அவரின் அபார திறமை அனைத்திந்திய வானொலியின் ஒலித்திறமையைக் கண்டறியும் குழு உறுப்பினராக, சென்னை இசைக் கழகத்தின் வல்லுநர்கள் குழுவிலும் இடம்பெற வைத்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் இசைக்கச்சேரி மட்டுமின்றி சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். 1966ம் ஆண்டில் மாஸ்கோவில் நடைபெற்ற இந்திய இசையின் நூற்றாண்டு விழாவில் மட்டுமின்றி 1974ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பன்னாட்டு இசை மாநாட்டிலும் வி.வி.சடகோபன் பங்கேற்று சிறப்பித்தார்.
அத்துடன் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் இசை இயக்குநராகவும், தில்லி பல்கலைக்கழகத்தில் கர்நாடக இசைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். ‘விகடன்’ உள்ளிட்ட இதழ்களில் இசைக்கட்டுரைகள், கவிதைகள், கதைகளை எழுதியுள்ளார். ‘இந்தியன் மியூசிக் ஜெர்னல்’, ‘தியாகபாரதி’ ஆகிய ஆங்கில, தமிழ் மாத இதழ்களின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். மாணவர்களுக்கு இசையைக் கற்றுக் கொடுக்க ‘தியாகபாரதி’ என்ற பத்திரிகையையும் நடத்தியுள்ளார்.
பாடுவதோடு மட்டுமின்றி பல கீர்த்தனைகளை உருவாக்கிய இசையமைப்பாளர் வி.வி.சடகோபன், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள பாசுரங்களை இசையமைத்துப் பாடியுள்ளார். அவர் பாடிய பாடல்களை கொலம்பியா நிறுவனம் ரெக்கார்டாக வெளியிட்டது.1980ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி தில்லியில் இருந்து விரைவு ரயிலில் சென்னையை நோக்கி புறப்பட்டார். 11ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கூடூர் ரயில் நிலையத்தில் இறங்கியவர், அதன்பின் என்ன ஆனார் என்றே தெரியாமல் போனது. இளமையில் கிளீன் ஷேவில் இருந்த வி.வி.சடகோபன் பின்னர் தாகூரைப் போல தாடி வைத்துக் கொண்டார்.
காணாமல்போனபின் அவரை வாரணாசியிலும், பின்னர் இமயமலைப் பகுதிகளிலும் கண்டதாக செய்திகள் வதந்திகளாக உலா வந்தன. கர்நாடக இசை உலகில் முடி சூடா மன்னனாக விளங்கிய வி.வி.சடகோபனுக்கு என்ன ஆனது என்பது இன்று வரை விளங்காத மர்மமாகவே உள்ளது.
ப.கவிதா குமார்
|