ஜெய் கிசான்!



‘‘நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம்... சிறு விவசாயிகளை முன்னேற்ற, அவர்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம்...’’இப்படி ஆர்ப்பாட்டமாக அறிவித்து வேளாண் துறையில் மூன்று சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தலைநகர் தில்லியில் பல்வேறு விவசாய அமைப்புகள் முகாமிட்டு குளிர், மழை, கொரோனா காலம் ஆகியவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் உறுதியுடன் அமைதி வழியில் போராடினர்.உலக நாடுகளில் எல்லாம் பேசு பொருளான இப்போராட்டம் இப்போது தன் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.

ஆம். 1. வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்குவித்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதல்) மசோதா, 2020; 2. விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் (அதிகாரம் அளிப்பு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த மசோதா 2020; 3. அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 - ஆகிய இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்குவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.  

இந்த திடீர் வாபஸ் ஏன்... போராடக்கூடிய விவசாயிகளின் அடுத்த கட்டம் என்ன... இவ்வளவு உறுதியுடன் போராட்டம் இன்றும் தொடர என்ன காரணம்... போன்ற கேள்விகளோடு இப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டிருப்பவரும் (சம்யுக்த கிசான் மோர்ச்சா - SKM) ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் தமிழ்நாட்டின் ஒருங்கிணைப்பாளருமான கே.பாலகிருஷ்ணனை சந்தித்தோம்.வாபஸின் பின்னணிஇரு கருத்துக்கள் பிரதானமாக இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தல்கள்.

குறிப்பாக உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய மூன்று மாநில தேர்தல்களை மையப்படுத்தி வாபஸ் வாங்கியதாக ஒரு கருத்திருக்கிறது. இன்னொன்று, விவசாயிகளின் உறுதியான போராட்டம்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா மூலம் 2021 ஜனவரி மாதத்திலேயே ‘மிஷன் உத்தரகண்ட், மிஷன் உத்தரப்பிரதேஷ்’ திட்டத்தை முன்வைத்தோம். விவசாயிகளுக்கு எதிரான ‘பாஜகவை தோற்கடிக்க வேண்டும்’ என்பதை மையப்படுத்தி விவசாயிகளின் போராட்டம் உத்தரப்பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் இருக்க வேண்டுமென்று தொடர்ந்து ‘மகா பஞ்சாயத்துகள்’ ஏற்பாடு செய்வதும் விவசாயிகளை அணி திரட்டுவதுமாக இருந்தோம்.

இதனால் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தாண்டி இந்தியாவின் பல பகுதிகளில் இதன் வீச்சைக் காண முடிந்தது. விவசாயிகள் மட்டுமின்றி தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பிலும் இப்போராட்டம் தன் செல்வாக்கை செலுத்தியது. சர்வதேச அளவிலும் பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இன்னும் கூடுதலாக பாஜக கட்சிக்குள்ளேயே இது ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்பது முக்கியமான செய்தி.

இப்படி விவசாயப் போராட்டத்தை மையப்படுத்தி தனக்கு எதிராக எழுந்துள்ள எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்காக அவர் செய்த விஷயம்தான் இந்த வாபஸ்.
போராட்டம் தொடரும்ஒரு கமா கூட இந்த சட்டத்தில் மாற்ற மாட்டோம் என்று சொன்னவர்கள் இன்று சட்டத்தையே திரும்பப் பெறுகிறோம் என்கிறார்கள்.

நிச்சயமாக பிரதமர் வாபஸ் பெறுவார் என நம்புகிறோம். ஆனால், 2014ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மோடி என்றும் விவசாயிகளின் பக்கம்  நின்றதில்லை. மாறாக விவசாயத்தை கார்ப்பரேட் கைகளில் ஒப்படைப்பதற்கான  முயற்சிகளை பல்வேறு வடிவங்களில் செய்து வருகிறார் என்பதுதான் கடந்த கால  அனுபவம்.

எனவே, பாராளுமன்றத்தில் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்.

மகா பஞ்சாயத்துகள்

2013ம் ஆண்டு மதக் கலவரத்தை ஏற்படுத்தி அங்கு ஏராளமாக மதரீதியாக ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்ற இடம் என அலகாபாத்தைச் சொல்லலாம். இங்கு 2021 செப்டம்பர் 5ம் தேதி நடத்தப்பட்ட மகா பஞ்சாயத்தில் கிட்டத்தட்ட பத்துலட்சம் விவசாயிகள் அணி திரண்டனர். ‘நாங்கள் இனி மதக் கலவரத்திற்கு எதிராக இருப்போம்.

அல்லாஹூ அக்பர். ஹரஹர மகாதேவ்’ என்கிற முழக்கத்தை மதநல்லிணக்கத்தின் குறியீடாக முன் வைத்தனர். இது பாஜகவின் இதயத்தில் கத்தியைப் பாய்ச்சியது போல் அமைந்தது.

விவசாயப் போராட்டங்களை ஒருங்கிணைத்த தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், இக்கூட்டத்தில் ‘அவர்கள் வேலை மக்களை பிளவு படுத்துவது. எங்கள் வேலை
மக்களை ஒன்றிணைப்பது’ என்று சொன்னார்.

இது போன்று மகா பஞ்சாயத்துகள் அதிக அளவில் ஏற்பாடு செய்து வருகிறோம். மகா பஞ்சாயத்துகளை அணிதிரட்டுவதற்காக பல்வேறு இடங்களில், கிராமங்களில், தாலுகாக்களில், சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கூட்டங்களும், பிரசாரங்களும் நடத்தப்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அவற்றிற்கு எதிராக இருக்கும் பாஜகவிற்கு எதிராக மக்களை அணி திரட்டுகிறோம்.  விவசாயிகளின் போராட்டத்தை எந்தக் கட்சி தேர்தலில் அறுவடை செய்யப் போகிறது என்பது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. ஆனால், பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.  

சர்வதேச அளவிலான நெருக்கடி

உலகம் முழுவதும் இந்தியர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக சீக்கியர்கள். இந்த மூன்று வேளாண் சட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது பஞ்சாப்பும், அரியானாவும்தான். அங்கு அரசு கொள்முதல் அதிகமாக  நடக்கிறது.

இந்த கொள்முதல் நிறுத்தப்பட்டால் பெரும் பாதிப்பு அங்குள்ள விவசாயிகளுக்கு ஏற்படும். எனவே வெளிநாடுகளில் பரந்து விரிந்திருக்கும் சீக்கியர்களோடு, இப்போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கும் மற்ற இந்தியர்களும் அவர்கள் இருக்கும் நாடுகளில் போராட்டத்தை முன்னெடுத்ததோடு அங்குள்ள ஜனநாயக சக்திகளையும் சிறுவிவசாயிகளையும் ஒன்றிணைத்தனர்.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள சிறு விவசாயிகள் இப்போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் வெற்றி உலகெங்கும் உள்ள கார்ப்பரேட்களுக்கு எதிரான அந்தந்த நாட்டு சிறுவிவசாயிகளுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

போராடும் எங்களுக்கு கனடா நாட்டுப் பிரதமரின் ஆதரவு ஒரு முக்கியமான விஷயம். அங்குள்ள குழந்தைகளுக்கான பாடப் புத்தகத்தில் ‘இந்தியாவில் விவசாயிகளின் பேரெழுச்சி’ என்கிற பாடத்தை வைத்துள்ளனர். தவிர பிரபல பாப் பாடகி ரிஹானாவின் பிரதமர் மோடிக்கு எதிரான டுவிட்டர் பதிவு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த வாரம் கூட ஐக்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரதிநிதி, ‘இந்த மூன்று வேளாண் சட்டங்களும் இந்தியாவில் உள்ள சிறு விவசாயிகளை பெரும் அளவு பாதிக்கப் போகிறது. அந்த சிறு விவசாயிகளில் 75%க்கு மேல் பெண்கள் இருக்கிறார்கள். எனவே சிறு விவசாயிகள், பெண்களுக்கான உணவுக்கு உத்தரவாதம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் இன்றைய நிலைக்கு நீங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்’ என்பது உட்பட ஒன்பது கேள்விகள் அடங்கிய கடிதம் (மெமோ) ஒன்றை இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளார்.

முக்கிய கோரிக்கைகள்

1. மூன்று வேளாண் சட்டங்களை நீக்க வேண்டும்.

2. குறைந்தபட்ச ஆதார விலையை அனைத்து விளை பொருட்களுக்கும் நிர்ணயிப்பதோடு, அரசு அங்கீகாரமும் அதற்கு கொடுக்க வேண்டும்.

3. விவசாய மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ வாபஸ் வாங்க வேண்டும்.

பிறகு இப்போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 675 விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுப்பதோடு, விவசாயிகள் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். ஒன்றிய அரசாங்கத்தால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து கை, கால் இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

நெருக்கடிகளைக் கடந்து தொடரும் போராட்டம்

சில சம்பவங்களை நினைவுபடுத்த விரும்புகிறேன். ‘போக்குவரத்துக்கு இடையூறு செய்கிறீர்கள், சாலையை ஏன் மறிக்கிறீர்கள்’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தில்லி ராம்லீலா மைதானத்தை நோக்கித்தான் நாங்கள் போய்க் கொண்டிருந்தோம். ஆனால், ஒன்றிய அரசும், அரியானா அரசும் எங்களை மறித்து அதற்கு மேல் போகவிடாமல் குழிகள் தோண்டி, கண்ணீர்ப் புகை வீசி, முள் வேலிகள் போட்டு நிறுத்தினார்கள்.

நிறுத்திய இடங்களில் உட்கார்ந்தோம். இப்போது அந்த தடுப்புகள் எடுத்தபிறகு இரு பக்கமும் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கிறது. மத்தியில் கூடாரங்கள் அமைத்து கிலோ மீட்டர் கணக்கில் விவசாயிகள் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளை மறிப்பது எங்கள் நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்தினோம். திக்ரி எல்லை, சிங்கூர் எல்லை, ஷாஜகான்பூர், காசீப்பூர், தன்சா என ஐந்து இடங்களில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

எவ்வளவு வசைகள்? அவதூறுகள்? காலிஸ்தானிகள், மாவோயிஸ்ட்கள், நக்சலைட்டுகள், பாக் ஏஜென்டுகள், தேசத் துரோகிகள், அந்தோலன் ஜீவி (போராட்டம் நடத்தியே பிழைப்பு நடத்துவது)... என திரும்பத் திரும்ப போராடும் எங்கள் மீது முத்திரை குத்தினார்கள். மதத்தால் பிரிக்க முடியுமா... சாதியால் பிரிக்க முடியுமா... என்றெல்லாம் பார்த்தார்கள்.
ஆனால், விவசாயிகளின் எழுச்சிக்கு முன்பாக எந்த சதியும் சாதியும் நிற்கவில்லை.

மேற்கு வங்கத்தில் இருந்து வந்து போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண் சமூக ஆர்வலரை வன்புணர்வு செய்து அந்தப் பழியை விவசாயிகள் மீது போட்டது பாஜக அரசு.
‘அவர்கள் விவசாயத் தோழர்கள் இல்லை... குண்டர்கள்’ என்று பாஜக அரசு எங்கள் மீது குத்திய முகத்திரையை அந்தப் பெண் கிழித்தார். போராட்டம் நடக்கும் பகுதியில் வாழக் கூடிய மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டார்கள். அதையும் சமாளித்து விஷயத்தை விளக்கிச் சொல்லி அவர்களையும் போராட்டத்தில் இணைத்தோம்.

போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த பெரும் விவசாயிகள் மீது ஐடி ரெய்டு நடத்தினார்கள். இப்படி ஒன்றிய அரசு கொடுத்த நெருக்கடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நாட்டு மக்களும் அதைக் கண்டார்கள். இதையெல்லாம் தாண்டி வலுவாக இன்றும் நின்று கொண்டிருக்கிறோம்.

போராட்டம் சாதித்தவை

உலகளவில் விவசாயிகள் பல போராட்டங்களை இதற்கு முன் நடத்தியிருக்கிறார்கள். அங்கெல்லாம், அவர்கள் கோரிக்கை நிறைவேறினால் போராட்டம் முடிவடையும். ஆனால், இந்தியாவில் நடைபெற்ற இந்த விவசாயப் போராட்டம் தொழிலாளி - விவசாயி ஒற்றுமை காலத்தின் தேவை என்பதை உணர்த்தியிருக்கிறது. ஓராண்டு காலமாக தொழிலாளர் இயக்கங்கள் விவசாயிகளோடு கை கோர்த்து நின்றுள்ளன.

பழமைவாத கருத்துகள் உள்ள ஜாட் மக்கள் இருக்கக்கூடிய இடத்தில் - ஆண் மேலாதிக்க கருத்து இருக்கக்கூடிய அந்தப் பகுதிகளில் இருந்து பெண்கள் கணிசமான அளவில் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக பஞ்சாப்பில் இருந்து கலந்து கொண்டார்கள். கம்யூன் கலாசாரத்தை உணவு சமைப்பதிலும் அனைவருக்கும் உணவிடுவதிலும் ஏற்படுத்தியுள்ளனர்.  

நோக்கங்களுக்கு ஏற்ப அரசியல்வாதிகளின் தன்மை போராட்டத்தை மாற்றக் கூடும் என்பதால் அவர்களை உள்ளுக்குள் அனுமதிக்கவில்லை. ஆதரவு கொடுக்கலாம். ராகுல் காந்தியையே வெளியேதான் உட்கார வைத்தார்களே தவிர மேடையில் அனுமதிக்கவில்லை.மோடி அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்தச் சட்டங்களை திரும்பப்பெற வைத்ததன் மூலம் சரிந்து கொண்டிருக்கும் இந்திய ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் பணியையும் இந்தப் போராட்டம் செய்திருக்கிறது.

மொழி, மதம், இனம், பிராந்தியம் கடந்த ஒரு நிகழ்வை இந்தப் போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிளவுவாதத்தை ஏற்படுத்தும் பாஜகவிற்கு எதிராக அமைந்துள்ளது. ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம், ஒரே தேர்வு, ஒரே பண்பாடு, ஒரே நாடு... என்கிற பாஜகவின் செயல் திட்டத்திற்கு எதிராக வேறொரு வடிவத்தில், அதாவது ஓர் அமைப்பு (சம்யுக்த கிசான் மோர்ச்சா), ஒரு போராட்ட அறைகூவல் என்ற வகையில் இப்போராட்டம் நகர்ந்துள்ளது.

பாஜக தோற்கடிக்கப்பட்டு அல்லது ஆட்சி முடிவடைந்து வேறு எந்தவொரு ஆட்சி வந்தாலும் இனிமேல் விவசாயிகளுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வருவதற்கு துணியமாட்டார்கள். அதற்கெதிராக உணர்வுரீதியாகவும், அமைப்புரீதியாகவும் இன்று விவசாயிகள் கட்டமைக்கப்பட்டுவிட்டனர்.

அன்னம் அரசு