113 வருடங்களுக்குப் பிறகு மறுபதிப்பு காணும் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாறு!



ஆங்கிலேயர்களுக்கு எதிராக அரசியல் ரீதியாக மட்டும் போராடினால் போதாது. வணிக ரீதியாகவும் போராட வேண்டும். அதற்கு உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே மக்கள் வாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இந்தியாவிலேயே முதல்முறையாக ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’யை ஆரம்பித்தவர்; ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று மக்கள் மனதில் அழியாப் புகழைப் பெற்றவர் வ.உ.சிதம்பரம்பிள்ளை.

அவர் வாழ்ந்தபோதே அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியானது. இத்தகைய பெருமை சிலருக்கு மட்டுமே கைகூடியிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘வி.ஓ.சிதம்பரம் பிள்ளை: ஜீவித சரித்திரம்’; எழுதியவர் எம்.கிருஷ்ணசாமி; வெளிவந்த ஆண்டு 1908. இந்த அரிய புத்தகம் 113 வருடங்களுக்குப் பிறகு மறுபதிப்பு கண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர் வ.உ.சி ஆய்வாளர் ரெங்கையா முருகன்.

‘‘‘ராஜ நிந்தனை செய்தார்...’ என்று பிரிட்டிஷ் அரசாங்கம் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து, 1908ல் கோவை சிறையில் அடைத்தது. அப்போது வ.உ.சி.க்கு வயது 36. அவர் சிறையில் அடைக்கப்பட்ட அதே வருடத்தில் அவரது வாழ்க்கையைப் பற்றி கிருஷ்ணசாமி தொகுத்த புத்தகம் இது. இதில் வ.உ.சியுடன் சேர்த்து தமிழின் பெருமையும் அடங்கியிருக்கிறது.

‘இந்து’ பத்திரிகையின் நிறுவனரான ஜி.சுப்ரமணிய ஐயர் பற்றிய நூல் வந்தபோது ஐயருக்கு வயது 50க்கு மேல் இருக்கும்...’’ என்று ஆரம்பித்த ரெங்கையாவிடம், ‘‘இந்தப் புத்தகத்தை எப்படி கண்டடைந்தீர்கள்..?’’ என்றோம்.

‘‘வ.உ.சி.யைப் பற்றிய நூல்களைப் படிக்கும்போது அவரைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். அதன் தலைப்பு இந்த தமிழ்ப் புத்தகத்தின் தலைப்பைப் போலவே இருந்தது. ஆனால், தமிழ் நூல் பற்றிய குறிப்பு இருக்காது. நானும் பல பேரிடம் அந்த ஆங்கில நூலைப் பற்றி விசாரித்து வந்தேன். அது பிரிட்டிஷ் நூலகத்தில் இருப்பதாக தெரியவந்தது. கோவை நண்பர் மூலம் லண்டனிலிருந்து அந்தப் புத்தகத்தை வரவழைத்துப் படித்தேன்.

அப்போது இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இதேபோல தமிழில் ஒரு புத்தகம் இருப்பதாகவும், அது சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆவணக்காப்பகத்தில் இருப்பதாகவும் சொன்னார்.

இதற்கிடையில் ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்க்கும் வேலையில் மும்முரமாக இருந்தேன். சில சிரமங்களுக்கு மத்தியில் தமிழ் நூலைப் பெற்று, ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இந்த தமிழ் நூலைத்தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழில் 1908ம் வருடம் வந்தது என்றால், அடுத்த வருடமே ஆங்கிலத்தில் வந்துவிட்டது. முதற்பதிப்பு சமஸ்கிருதம் கலந்த தமிழில் இருந்தது.

தமிழ் வாசகர்கள் படிக்க வேண்டும் என்பதால் தமிழ்ப் பதிப்பையும், ஆங்கிலப் பதிப்பையும் சேர்த்து ஒரு நூலாக கொண்டு வந்திருக்கிறேன்...’’ என்ற ரெங்கையா, இந்தப் புத்தகத்தின் சிறப்பியல்புகளைப் பட்டியலிட்டார். ‘‘வ.உ.சி கப்பல் விட எடுத்த முயற்சிகள், இரட்டை ஆயுள் தண்டனைக்கான விவரம், சிறையில் ஏற்பட்ட கலவரத்துக்காக அதிகாரிகளுக்கு எதிராக அவரது சாட்சியம் போன்ற அறியப்படாத பல விஷயங்களின் கோர்வையாக உள்ளது இப்புத்தகம். தவிர, அப்போது வெளியான பத்திரிகைச் செய்திகளையும் சேர்த்திருப்பது சிறப்பு...’’ என்ற ரெங்கையா, வ.உ.சி பற்றி மேலும் விவரித்தார்.

‘‘அடிப்படையில் அவர் ஒரு வழக்குரைஞர். வழக்கு கொண்டுவருபவர்களின் வசதிக்கேற்ப பணம் வாங்கக்கூடியவர். பல நேரங்களில் பணம் வாங்காமல் கூட வழக்குகளை நடத்தியிருக்கிறார். 100 சதவீதம் சுதேசியாக வாழ்ந்தவர். பேனா கூட உள்ளூர் தயாரிப்பாக இருக்க வேண்டும். இதற்காக அவ்வப்போது வீட்டில் உள்ள அந்நியப் பொருட்களை மூட்டைகட்டி எரிக்க கொடுத்துவிடுவார்.

தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு செல்லும் பிரிட்டிஷ் கப்பலில் கொள்ளைப் பணம் வசூலிப்பதாக கேள்விப்பட்டுத்தான், சுதேசி கப்பல் கம்பெனியை ஆரம்பித்தார். நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், ஆங்கிலேயனால் பொறுக்க முடியவில்லை. அதனால்தான் இரட்டை ஆயுள் தண்டனை. சிறையிலேயே வ.உ.சியின் கதையை முடித்துவிடவேண்டும் என்பதுதான் ஆங்கிலேயரின் திட்டமாக இருந்தது. அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றார்கள். கடைசியில் அவர் ஆங்கிலேயருக்கே கப்பலை விற்ற கொடுமை எல்லாம் நிகழ்ந்தது.

ஆங்கிலேய சிறை அதிகாரிகளால் அவருக்கு நிகழ்ந்த கொடுமையைப் பார்த்த சிறைக் கைதிகள் அந்த அதிகாரிகளை கொல்வதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதுதான் கலவரமாக வெடித்தது. இதில் சில கைதிகள் கொல்லப்பட்டனர். ‘என் கப்பல் கம்பெனியை அழித்ததில் முக்கியப்பங்கு ஆஷ் துரைக்கு இருக்கிறது...’ என்று வ.உ.சியே பொங்கியிருக்கிறார்.

பிறகுதான் வாஞ்சிநாதன் ஆஷ் துரையைச் சுட்டுக்கொன்ற சம்பவம் நிகழ்ந்தது. வாஞ்சிநாதன் சுட்டுக்கொன்றதை வெறும் மதம் சார்ந்ததாக மட்டுமே ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள். வாஞ்சிநாதன் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் ஆஷ் துரையைச் சுட்டதற்காக 14 காரணங்களை அடுக்குகிறார். அதில் வ.உ.சிக்கு நடந்த சிறைக் கொடுமையும் ஒன்று.

வ.உ.சி பற்றிய இந்தப் புத்தகம் அவர் வாழும் காலத்திலேயே வந்ததால் அவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தது. ஆனால், அவர் சிறையிலிருந்து விடுதலையானபோது ஒருவர்கூட அவரை அழைத்துச்செல்ல வரவில்லை.

காலம் மாறியிருந்தது. ஆனால், அவர் செய்த ஒரு முயற்சிதான் இன்றும் ‘கப்பலோட்டிய தமிழன்’ எனும் பெருமையை அவரது பெயருக்குச் சொந்தமானதாக மாற்றியிருக்கிறது...’’ என்ற ரெங்கையா, ‘‘இந்தப் புத்தகம் வெளிவருவதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.

இந்த நூலை மீள் பதிப்பு கொண்டுவர உழைத்த சக்ரா ராஜசேகர் மற்றும் பதிப்பாளர் விதை மணிகிருஷ்ணனுக்கு நன்றி. வ.உ.சியின் 85வது நினைவு தினத்தை ஒட்டி அவர் பிறந்த ஒட்டப்பிடாரத்திலேயே அமைச்சர்கள் தலைமை தாங்க பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்புத்தகத்தை வெளியிட்டார்...’’ என்று பெருமையுடன் முடித்தார்.  

டி.ரஞ்சித்