Coffee Table



கொலைகாரர்களுக்குப் பாடாதீர்கள் ஜஸ்டின் பீபர்

கனடாவின் புகழ்பெற்ற பாடகர் ஜஸ்டின் பீபர். இவருக்கு உலகம் முழுவதும் இசை ரசிகர்கள் பரவலாக இருக்கிறார்கள். அடுத்த மாதம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் இவரின் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இதற்காக உலகமெங்கும் உள்ள பீபரின் ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கும்போது, ‘தனது வருங்காலக் கணவரை கொலை செய்தவர்களுக்காக பாடாதீர்கள்’ என ஹாடிஜா ஜெங்கிஸ் என்பவர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

கடந்த 2018ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை திருமணம் செய்து கொள்வதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவர் ஹாடிஜா ஜெங்கிஸ்.

சவுதி அரசாங்கத்தின் ஆலோசகராகவும், அரச குடும்பத்திற்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்ட ஜமால் கஷோக்கி அரசின் மீதான நம்பிக்கையை இழந்ததால், சவுதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார்.
அப்போது முதல் சவுதி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராகக் கருதப்பட்ட கஷோக்கி, 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்தான்புல்லில் உள்ள அதன் தூதரகத்தில் மிகவும் கொடூரமாக உடல் துண்டாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

‘ஜமாலைக் கொன்ற கொலைகாரர்களுக்காகப் பாடாதீர்கள்’ என்ற கோரிக்கையை இப்போது உலகம் முழுதும் பல மனித உரிமை ஆர்வலர்களும் தீவிரமாக எழுப்பி வருகின்றனர்.
இதனால் ஜஸ்டின் பீபர் நிகழ்ச்சி நடக்குமா என்ற சந்தேகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் பீபரின் ரசிகர்கள்.

ஓய்வை அறிவித்த டிவில்லியர்ஸ்

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் தென்ஆப்ரிக்காவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். 16 பந்துகளில் 50 ரன்களும், 31 பந்துகளில் 100 ரன்களும், 64 பந்துகளில் 150 ரன்களும் அடித்து உலகளவில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிவேகமாக ரன் குவித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் இவர். தென் ஆப்ரிக்க அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர். ஐபிஎல் போட்டிகளில் கடந்த பத்தாண்டுகளாக பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

பேட்டிங்கிலும், ஃபீல்டிங்கிலும் அவர் காட்டும் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஜான்டி ரோட்ஸை நினைவுபடுத்தும்விதமாக இருக்கும். இதனாலேயே இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தார் டிவில்லியர்ஸ்.

அவர் மைதானத்திற்குள் வந்தாலே இந்திய ரசிகர்கள் செம குஷியாகிவிடுவர். அந்தளவுக்கு இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
இதுவரை 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கும் டிவில்லியர்ஸ் டெஸ்ட்டில் 22 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 25 சதங்களும் விளாசியிருக்கிறார்.

தல வில்லனுக்கு டும் டும் டும்

அஜித்  நடிக்கும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா கும்மகோண்டாவுக்கு கடந்த நவம்பர் 21ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

தனது பால்ய தோழியான லோஹிதா ரெட்டியைக் காதலித்து கரம்பிடித்துள்ளார் கார்த்திகேயா. நிகழ்ச்சியில் சீரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அவரது ரசிகர்களும் நெட்டிசன்களும், ‘கல்லூரி நாட்களில் இருந்தே காதலர்களான இருவரும் தங்கள் புதிய பயணத்தை மிகுந்த மகிழ்ச்சியுடனும், ஆசீர்வாதங்களுடனும் தொடங்கியுள்ளனர்’ என வாழ்த்தியுள்ளனர். ஏற்கனவே ‘RX 100’ மூலம் தெலுங்கு சினிமாவில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியிருக்கும் கார்த்திகேயா, ‘வலிமை’ பட வில்லன் என்பதால் தமிழ் சினிமாவிலும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறார்.

எம்ஐ ஆடியோ ப்ளூடூத் ரிசீவர்

கேபிள் வசதியுடன் கூடிய விலை உயர்ந்த நல்ல ஹெட்செட்டும், ஸ்பீக்கரும் வைத்திருப்போம். ஆனால், அதில் ப்ளூடூத் வசதி இருக்காது. இதனால், எப்போதும் வயரிலேயே கனெக்ட் செய்ய வேண்டியதிருக்கும். இந்தப் பிரச்னைக்கு தீர்வு தருகிறது எம்ஐ ஆடியோ ப்ளூடூத் ரிசீவர் சாதனம். இதன்மூலம் எந்த ஒரு ஹெட்செட்டையும், சாதாரண ஸ்பீக்கரையும் ப்ளூடூத்தில் கனெக்ட் செய்யமுடியும்.

கேட்ஜெட்ஸ் சந்தையில் பல மாடல்கள் உள்ளன. இருந்தாலும் இது நல்ல தரத்துடனும், எளிதில் மைக்ரோ USBயுடன் சார்ஜ் செய்யும் வசதியுடனும் சந்தைக்கு வந்துள்ளது.
3.55 எம்.எம் ஆடியோ அடாப்டருடன் நான்கு மணிநேரம் பேட்டரி நிற்கக் கூடியது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுக்குப் பயன்படுத்தலாம். விலை 999 ரூபாய்.

குப்பமுனி அனுபவ வைத்திய முறை

நாவிதர்கள் பற்றி முத்துநாகு எழுதிய ‘சுளுந்தீ’ நாவல் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த ஒரு நூலுக்கும் தயாராகிவிட்டார் நாகு. நூலின் பெயர் ‘குப்பமுனி அனுபவ வைத்திய முறை’. ‘‘இது நாவல் அல்ல... என் பூட்டனாரும், தாத்தாவும் ஏட்டில் எழுதி வைத்த மருத்துவக் குறிப்புகளை என் அப்பா கையெழுத்துப் பிரதியாக எழுதி வைத்தார். அதை நான் அச்சாக்கிய நூல் இது...’’ என்று சொல்லும் முத்துநாகு, ‘‘பொதுவாக, நோய்களை 4444 வகையில் அடக்கிவிடலாம். இந்த நோய்களுக்கான மருத்துவக் குறிப்புகளே இந்நூல்....’’ என்கிறார். இதுதவிர, உப்பு பற்றிய ஒரு நாவலையும் எழுதி வருவதாகச் சொல்கிறார் முன்னாள் பத்திரிகையாளரான முத்துநாகு.

சூயஸ் கால்வாய்... 152 ஆண்டுகள்... 14 லட்சம் கப்பல்கள்!

வரலாற்றுப் புத்தகத்தில் சூயஸ் கால்வாய் பற்றி வாசித்திருப்போம். நினைவுள்ளதா? சமீபத்தில் ஒரு கப்பல் சிக்கி உலகம் முழுக்க வைரலானதே அதே கால்வாய்தான்.
கடந்த வாரம் இதன் 152ம் ஆண்டு விழாவை ‘சூயஸ் கால்வாய் ஆணையம் (SCA)’ கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறது. இந்த ஒன்றரை நூற்றாண்டில் இதுவரை பதினாலு லட்சம் கப்பல்களுக்கு மேல் இதைக் கடந்து சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே அதிகமான கப்பல்கள் கடந்த கால்வாய் இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

1869ம்ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது இந்தப் போக்குவரத்து. முக்கியமான ஆங்கிலேயப் பயணிகள் எல்’ஐக்லே என்ற கப்பலில் ஏறிக்கொள்ள எழுபத்தேழு கப்பல்கள் அதனைப் பின்தொடர்ந்தன. அதில் ஐம்பது கப்பல்கள் போர்க் கப்பல்கள். அப்போதிருந்து இதுவரை பதினாலு லட்சம் கப்பல்கள் கிட்டத்தட்ட மூன்றாயிரத்து நூறு கோடி டன் எடையுள்ள பொருட்களைச் சுமந்து சென்றுள்ளன. இது உலக கப்பல் போக்குவரத்தில் சுமார் 12% ஆகும்.

குங்குமம் டீம்