மாஃபியாக்களின் இன்றைய பிசினஸ் திமிங்கல வேட்டைதான்!
சில வாரங்களுக்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் தமிழக காவல்துறையினர் எப்போதும் போல வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி கார் ஒன்று வேகமாகச் செல்ல முற்படவே, அந்த காரை தடுத்து நிறுத்தினர்.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/15.jpg) ‘காருக்குள் என்ன...’ என்று காவல்துறையினர் கேட்க, சந்தேகத்தை உறுதிப்படுத்தும்படியாக இருந்தது, காருக்குள் இருந்தவரின் பதற்றமும் முன்னுக்குப்பின் முரணான பதிலும். உடனடியாக காரை முழு பரிசோதனை செய்த போலீஸார் கறுப்பு நிறத்தில் மெழுகு போன்ற ஒரு பொருளைக் கைப்பற்றினர்!
‘என்ன இது?’ என்று போலீஸார் கேட்க, ‘ஒன்றுமில்லை சார், சாதாரண கல்தான்...’ என்று பதில் வரவும், விசாரணை சற்று மாறியது.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/15a.jpg) ‘இப்போது சொல், என்ன இது?’
‘அது... அது வந்து... அம்பர்கிரிஸ் சார்!’ ‘எத்தனை கிலோ?’ ‘2 கிலோ இருக்கும் சார்...’ ‘எங்கிருந்து உங்களுக்கு கிடைச்சது?’
‘தஞ்சாவூரிலிருந்து... விற்பதற்காக எடுத்துட்டு வந்தோம் சார்...’ என்று சொல்லி முடிக்கவும்... அவர்களின் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டன.கடல் வாழ் உயிரினம் மற்றும் வனவிலங்கு சட்டப்படி, அவர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.அப்படி என்ன குற்றம்? சாதாரண மெழுகு கல்லுக்கும் கடல் உயிரின சட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? முதலில் அம்பர்கிரிஸ் என்றால் என்ன, எதற்காக அது பயன்படுத்தப்படுகிறது, அதை விற்றால் தண்டனையா... போன்ற கேள்விகளை கடல்சார் உயிரியல் ஆய்வாளர், முனைவர். நாராயணி சுப்ரமணியனிடம் முன்வைத்தோம்.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/15b.jpg)
“ஸ்பெர்ம் வகை திமிங்கலத்தின் உமிழ்நீர் அல்லது வாந்தி என்று சொல்லப்படும் ஒரு கழிவுப்பொருள்தான் ‘அம்பர்கிரிஸ்’ என்று எழுதுகிறார்கள். ஆனால், சமீபத்திய ஆய்வில் அது வாந்தியாக இருக்க வாய்ப்பில்லை எனச் சொல்லப்படுகிறது.ஸ்பெர்ம் திமிங்கலம் இரையை வேட்டையாடும்போது, தனது செரிமான அமைப்பில் ஒரு வகையான மெழுகுபோன்ற திரவத்தைப் பயன்படுத்துகிறது.
குறிப்பாக, தனக்குப் பிடித்த squid எனப்படும் ஊசிக்கணவாய், Cuttlefish, ஆக்டோபஸ்களை வேட்டையாடி விழுங்கும்போது, அந்த மீன்களின் கூரிய உறுப்புகள், முட்கள் மற்றும் பற்களால் திமிங்கலத்தின் உள் உறுப்புகளில் காயம் ஏற்படவும், செரிமானப் பிரச்னைஏற்படவும் மிக அதிக அளவு வாய்ப்பிருக்கிறது.
அதைத் தடுப்பதற்காக இயற்கையிலேயே கொடுக்கப்பட்ட ஒரு தற்காப்பு கவசம்தான் அம்பர்கிரிஸ் எனப்படும் மெழுகுபோன்ற திரவம். உணவு உட்கொண்ட பின்னர், ஜீரணமாகாத உணவு மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. அப்படி வெளியேற்றப்படும் வாந்திக் கழிவுகள்தான் அம்பர்கிரிஸ்சாக கடலில் மிதக்கின்றன.
பின்னர் அவை சூரிய ஒளி மற்றும் கடலின் உப்பு நீரால் கறுப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிற அம்பர்கிரிஸ்சாக உருப்பெறுகின்றன. இறுதியாக அவை கடற்கரையோரங்களிலும், மீன்பிடி வலைகளிலும் ‘புதையல் பொக்கிஷமாக’ மீட்டெடுக்கப்படுகின்றன...” என்றவர், இதன் வரலாற்று முக்கியத்துவத்தைப் பகிர்ந்தார். “ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அம்பர்கிரிஸ் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இது எந்த மாதிரியான பொருள், எதிலிருந்து கிடைக்கிறது என்று தெரியாமலேயே கடற்கரையி லிருந்து எடுக்கப்படுகிறது, வாசனையாக இருக்கிறது, நிறைய பொருட்களுக்காக பயன்படுத்தப்படுகிறது என்றாலும் எந்த ஒரு மிருகத்தின் உடலிலிருந்து வருகிறது என்பது பற்றி வரலாற்றில் பல குழப்பங்கள் இருந்தன.
12ஆம் நூற்றாண்டு சீன குறிப்புகளில் ட்ரேகனின் எச்சில் என்கிற நம்பிக்கை இருந்தது. முதலைகளிலிருந்தும், பறவைகளிலிருந்தும் வந்திருக்கலாம் என்று வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த குறிப்புகளும் சுட்டிக்காட்டின. ஒரு கட்டத்தில் இது கடலில் உள்ள விலங்கிலிருந்து வருகிறது, அது ஸ்பெர்ம் வகை திமிங்கலம் என்பது தெளிவாகியது.
ஸ்பெர்ம் திமிங்கலங்களின் தலையில் ஸ்பெர்மாசெட்டி என்கிற ஒருவகைப் பொருளும் உண்டு. இதை ‘தலை எண்ணெய்’ என்று அழைக்கிறார்கள் திமிங்கில வேட்டைக்காரர்கள். இது வழி அறிவதற்கும், எளிதில் மிதந்து நீந்துவதற்கும் பயன்படும் ஒருவகை மெழுகு. காற்று பட்டவுடன் இது கெட்டிப்பட்டுவிடும்.
இந்த ஸ்பெர்மாசெட்டி, மெழுகுவத்திகள் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. திமிங்கலங்களின் பொதுவான கொழுப்பு எண்ணெயோடு ஒப்பிடும்போது இந்தத் தலை எண்ணெயின் விலை அதிகம் என்பதால், இந்த மெழுகுவத்திகளின் விலையும் அதிகம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இவை அந்தஸ்தின் அடையாளமாக மாறின!
விருந்தினர்கள் வரும்போது ஸ்பெர்மாசெட்டி மெழுகுவத்திகளை ஏற்றிவைத்து அலட்டிக்கொள்வது செல்வந்தர்களின் வழக்கமானது!எரிபொருளாக மட்டுமில்லாமல் சோப்புக்கட்டிகள் தயாரிக்க, சிலவகை நெய்கள் தயாரிக்கவும் திமிங்கல எண்ணெய் பயன்படுத்தப்பட்டது. லிட்டர் லிட்டராகக் குறைவான தொகைக்கு கிடைக்கும் பொருள் என்பதால் அதை அடிப்படையாக வைத்து பல தொழில்கள் உருவாகின. இரண்டாம் உலகப்போரின் போது, கிளிசரினை அடிப்படையாகக் கொண்ட வெடிகுண்டுகள் உருவாக்கப்பட்டன. இந்த கிளிசரினைத் தயாரிப்பதற்கான மூலப்பொருளாக இருந்தது திமிங்கல எண்ணெய்தான்! அதே போல் பெர்முடா தீவில் நிறைய அம்பர்கிரிஸ் இருக்கிறது எனக் கேள்விப்பட்ட பிறகுதான் பிரிட்டிஷ் காலனியவாதிகள் அத்தீவையே கைப்பற்றுகிறார்கள்...” என்று வரலாற்றைப் பகிர்ந்த நாராயணி சுப்ரமணியன், எதற்கெல்லாம் இதைப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
‘‘மரபு சார்ந்த மருத்துவ முறைகளில் ஆங்காங்கு இது பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் மூலப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். இது ஃப்ளோரல் கிடையாது. மஸ்க் பர்பியும் இல்லை. இப்போது அதற்கும் சிந்தட்டிக் ரீபிளேஸ்மென்ட் முறை வந்துவிட்டது.
முதலில் இது வாங்கும் பொருள், தானாக உருவாகும் என்பது தெரியாமல் ஒரு குறிப்பிட்ட விலங்கைக் கொன்றால் எடுத்துவிடலாம் என்பதற்காக நிறைய திமிங்கலங்கள் இதற்காகக் கொல்லப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் 1986ம் ஆண்டில் திமிங்கலங்களைக் கொல்லக் கூடாது என சர்வதேச தடை வருகிறது.
இந்தத் தடைக்குப் பிறகுதான் இல்லீகல் மார்க்கெட் திறக்கப்படுகிறது. சமீப காலமாக இந்தியாவில் இது அதிகமாகியிருக்கிறது. அம்பர்கிரிஸ் பற்றி மக்களுக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் இதற்கென்று ஒரு வேல்யூ உண்டு. நிறைய ரிஸ்க் எடுத்துக் கொண்டு வருவதால், அதன் மதிப்பு சந்தையில் கூடிக் கொண்டே போகிறது.
இந்த வியாபாரத்திற்காக ஒரு விலங்கை வேட்டையாடுவது போல் ஒரு திமிங்கலத்தை வேட்டையாடுவதை ஒப்பிட முடியாது. திமிங்கலங்கள் நீண்ட நாள் வாழக்கூடியவை. நிறைய வகை திமிங்கலம் ஒரு முறை அல்லது இரு முறைதான் குட்டி போடும். ஒரு திமிங்கலத்தைக் கொல்வது என்பது, ஆரோக்கியமான கடல் சூழலுக்கு நல்லதல்ல...” என்கிறார் நாராயணி சுப்ரமணியன். “திமிங்கலத்திற்கென்று உலகம் முழுவதும் ஒரு மாபியா இருக்கிறது...” என்று ஆரம்பித்தார் பெயர் சொல்ல விரும்பாத சுங்கத் துறை அதிகாரி ஒருவர்.“அம்பர்கிரிஸை பொதுவாக கொரியா மற்றும் தென்னாப்பிரிக்காவினர்தான் அதிக அளவில் மார்க்கெட்டிங் செய்கிறார்கள். கடல் கொள்ளையர்கள் இதற்காகவே குழுவாகச் சேர்ந்து இயங்குகிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பரவி மெல்ல மெல்ல இந்தியா நோக்கியும் வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் கேரளாவில் உள்ளோர்தான் அதிக ஈடுபாட்டோடு செயல்படுகிறார்கள்.
உதாரணமாக, நாகர்கோவிலுக்கு ஒரு பீஸ் வருகிறது என்றால், அந்த ஒரு பீஸைக் காட்டி, ‘இதன் மகத்துவம் இப்படி அப்படி...’ என்று சதுரங்க வேட்டை திரைப்படத்தில் வருவது போல் மூளைச் சலவை செய்து நூறு பேரிடம் விலை பேசி, நூறு பேரிடமும் பணம் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால், இருப்பது ஒரு பீஸ்தான். இதுவே பெரிய மோசடி.இந்தியாவைப் பொறுத்தவரை வான்வழியில் கொண்டு வர முடியாது. இந்தியாவின், வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆகவே, திமிங்கலங்களை வேட்டையாடுவது அல்லது வர்த்தகம் செய்வது குற்றமாகும். இருப்பினும், குஜராத், மும்பை, தமிழகம், கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள துறைமுகங்கள் மூலமாக சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் எல்லா இல்லீகல் பிசினசும் கடல்வழி மார்க்கமாகத்தான் நடக்கிறது...” என்கிறார் அந்த அதிகாரி.‘‘திட்டமிட்டு வேட்டையாடப்படக் கூடிய விலங்கினங்களின் பின்னணியில் பெரும்பாலும் போலி மருத்துவம்தான் இருக்கிறது...” என்கிறார் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று தனது கருத்தைப் பதிவு செய்யும் மத்திய அரசின் மூத்த விஞ்ஞானி ஒருவர்.
‘‘இதற்கு உண்மையான மருத்துவ குணம் என்பதெல்லாம் கிடையாது. இதெல்லாம் புலி நகம் போன்ற கதைகளில் இருக்கும் ‘மித்’தான். அந்த நம்பிக்கை இருப்பதால்தான் சர்வதேச அளவில் ஓடுகிறது. இந்த போலி மருத்துவத்தின் பின்னால் இருப்பது இளமையாகிவிடலாம், ஆண்மை விருத்தி அதிகரிக்கலாம், நீண்ட காலம் வாழலாம், குணப்படுத்த முடியாத சில நோய்களையும் குணப்படுத்தலாம்... என்கிற போலியான கதைகள்தான்.
இதை பயன்படுத்துபவர்கள் அதன் மூலம் பயன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வதோ அல்லது உணர்வதோ கடினம். உண்மையான மருத்துவ குணம் எல்லாம் திமிங்கலத்தில் கிடையாது. அப்படி இருந்தால் நமக்கு அதன் ஆக்டிவ் கெமிக்கல் என்னவென்று தெரியும்.முக்கியமாக சொல்லவேண்டுமென்றால், மலேரியாவுக்குக் கொடுக்கக் கூடிய சிறந்த மருந்து ஆர்டிமிஸினின்.
இதை ஆர்டிமிஸினா என்று சொல்லக்கூடிய ஒரு வகை செடியிலிருந்து கண்டுபிடித்தார்கள். பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டது. மாவோ காலத்தில்தான் நடந்தது. ஆயிரம் மூலிகையை தேடிப் பார்த்த போது இந்த மூலிகைதான் உண்மையிலேயே வேலை செய்தது என்று இதைக் கண்டுபிடித்த யூயூ டு-வுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
இப்போது ஆர்டிமிஸினின் தாவரங்களிலிருந்து எடுக்க வேண்டுமென்றால் அரிசி, கோதுமை, கரும்பு விளைவிக்காமல் முழுவதும் இந்த மருந்துக்கான செடியினை மட்டுமே விளைவிக்க வேண்டும்.
எனவே, அந்த கெமிக்கல், அதன் ஸ்ட்ரக்ச்சர் என்ன என்று கண்டுபிடித்து, செயற்கையாக உருவாக்க முடியும் என சிந்தடிக்காக கண்டுபிடித்து இன்று நாம் உருவாக்குகிறோம். தோற்றம் ஹெர்பல்தான். ஆனால், இன்று கடையில் போய் வாங்கும் போது அது செடியிலிருந்து எடுத்தது கிடையாது. எடுக்கவும் முடியாது.
மருந்துப் பொருட்கள் எல்லாம் இப்படித்தான் தயாராகிறது. அப்படி திமிங்கலத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதை நேரடியாக நம்மால் உபயோகிக்க முடியாது என்பதுதான் உண்மை. இது வியாபாரத்துக்காக மாயையாக உருவாக்கப்பட்ட விஷயம்...” என்கிறார் அந்த அதிகாரி.
அன்னம் அரசு
|