சௌராஷ்டிரா மொழியில் குடும்ப விளக்கு!



பாவேந்தர் பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கு’ நூலை சௌராஷ்டிரா மொழியில் ‘ஸம்ஸாருதி3வோ’ என மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த சூர்யா ஞானேஸ்வர்.
ஏற்கனவே ‘சிலப்பதிகார’த்தின் ‘புகார் காண்டம்’, ‘மதுரைக் காண்டம்’, ‘வஞ்சிக் காண்டம்’ ஆகிய மூன்றையும் சௌராஷ்டிரா மொழியில் கொண்டு வந்தவர். இப்போது குடும்ப விளக்கை கைகளில் ஏந்தி வந்திருக்கிறார்.

‘‘சொந்த ஊர் மதுரை. பி.ஏ. தமிழ் இலக்கியம் படிச்சிருக்கேன். எனக்கு தமிழ் மேல அலாதியான ஆர்வம். கல்லூரியில் படிக்கிறப்பவே சில இலக்கியங்கள் மனசுல தெளிவா பதிஞ்சிடுச்சு. அதுல ‘சிலப்பதிகாரம்’, ‘குடும்ப விளக்கு’ எல்லாம் ரொம்பப் பிடிக்கும். வகுப்புல பாடம் எடுக்கும்போதே இதை சௌராஷ்டிரா மொழியில் எங்க மக்களுக்கு கொண்டு சேர்க்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, கைகூடி வரல.

1984ல் ‘ஸெளராஷ்ட்ர டைம்’னு ஒரு பத்திரிகை ஆரம்பிச்சு அதன்வழியா சில விஷயங்களை கொண்டு போனேன். அப்புறம், 2015ல் ‘சிலப்பதிகார’த்தின் ‘புகார் காண்ட’த்தை எங்க மொழியில் எழுத ஆரம்பிச்சேன். நான் 1975லயே சௌராஷ்டிரா மொழி எழுத்துக்களை நண்பர் ஒருவரிடமிருந்து கத்துக்கிட்டேன். இதுல உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் எல்லாம் இருக்கு. சௌராஷ்டிரா மொழியின் சிறப்பே, உச்சரிக்கிற அத்தனை ஒலிக்கும் எழுத்துக்கள் இருக்கிறதுதான்.

அப்புறம், விசேஷமா மூணு எழுத்துக்கள் இருக்கு. இருந்தாலும் எங்க மக்கள் பலருக்கும் மொழி தெரியாததால இந்தப் புத்தகங்களைப் பேசும் சௌராஷ்டிரா மொழியில் தமிழ் எழுத்துக்களை வச்சே எழுதி இருக்கேன். அதாவது, ‘amma’னு ஆங்கிலத்துல தமிழ்ச் சொல்லை எழுதுறோம் இல்லையா? அதுமாதிரி சௌராஷ்டிரா மொழி, தமிழ் எழுத்துல இருக்கும். அப்புறம், சரியான உச்சரிப்போடு வாசிக்க எண் குறியீட்டை பயன்படுத்தி இருக்கேன். இது எங்க மக்களுக்கு புரியும்.

அடுத்து, ‘சிலப்பதிகார’த்தின் ‘மதுரைக் காண்ட’மும், ‘வஞ்சிக் காண்ட’மும் முடிச்சேன். இதுல ‘மதுரைக் காண்ட’த்தை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துல அரங்கேற்றம் செய்தேன். அப்புறம், இந்த அனுபவத்தை வச்சு சௌராஷ்டிரா தமிழ் அகராதியைக் கொண்டு வந்தேன். இந்தப் புத்தகங்களைப் படிக்கும்போது புரியாத வார்த்தைகளை அந்த அகராதியைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம். இப்ப ‘குடும்ப விளக்கு’ கொண்டு வந்திருக்கேன்.

இதுல பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மேல் உள்ள அபரிமிதமான பக்தியைக் காட்டியிருப்பார். நான் சௌராஷ்டிரா மொழியில உள்ள பக்தியைக் காட்டுவதுபோல அதை மாற்றியிருக்கேன். பாரதிதாசன் தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றையும் மையப்படுத்தி எழுதியிருப்பார். அதெல்லாம் நான் கொஞ்சம் மாற்றி சௌராஷ்டிரா மொழி, பண்பாடு, கலாசாரம்னு பண்ணியிருக்கேன்.

இதுல சௌராஷ்டிரா கல்யாண முறைகள், திருமணத்திற்குப் பிறகு நடக்கிற சடங்குகள் எல்லாம் சொல்லியிருக்கேன். இதை எங்கள் மக்கள் படிக்கிறப்ப எந்தளவுக்கு சௌராஷ்டிரா கலாசாரத்தை மறந்திருக்காங்கனு புரியும். அதை மீட்டெடுக்கணும்னு செய்திருக்கேன்...’’ என்கிறவர், ஸௌராஷ்ட்ர சாகித்ய சதஸ் எனும் அமைப்புடன் இணைந்து சௌராஷ்டிரா மொழிக்கான பாடப் புத்தகங்களையும் உருவாக்கியிருக்கிறார்.

‘‘இந்த அமைப்புல நானும் ஒரு உறுப்பினர். இப்ப தாய்மொழி வழியில் கல்வினு அரசு திட்டம்கொண்டு வந்திருக்கு. இதற்காக எங்க அமைப்புல இருந்து எட்டு பேரை தேர்ந்தெடுத்து பாடப் புத்தகங்கள் தயார் பண்ணினோம். ஒருவேளை தமிழக அரசு எங்க மொழியை அங்கீகரிச்சு, சௌராஷ்டிரா பள்ளிகள்ல தாய்மொழி வழிக்கல்வி கொடுக்கலாம்னு சொல்லிப் பாடப்புத்தகம் என்ன இருக்குனு கேட்டால் என்ன பண்றது? அதுக்காகவே ஒன்றாம் வகுப்புல இருந்து எட்டாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்கள் உருவாக்கினோம்.

இப்ப சிறுபான்மை சமுதாயத்துடன் மொழிவாரி சிறுபான்மையையும் சேர்த்திருப்பதா அறிவிப்பு வந்திருக்கு. இதுல தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளுடன் சௌராஷ்டிரா மொழியையும் சேர்த்திருக்காங்க. போன வாரம்தான் அரசாணை வந்தது. அதன்படி பார்க்கிறப்ப பாடப்புத்தகம் உருவாக்கிக் காட்டுங்கனு அரசு சொன்னா எங்ககிட்ட இருக்குனு காட்டலாம். நான் இதுல ரெண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை ரெடி பண்ணியிருக்கேன்.

அப்புறம், ஏற்கனவே சௌராஷ்டிரா மொழி கத்துக்கிட்டவங்களுக்கு மறுபடியும் நினைவூட்டி ஆசிரியப் பயிற்சி அளிச்சோம். இதுல ஐந்தாறு ஆசிரியர்களை உருவாக்கி 21 மாணவர்களை படிக்க வச்சோம். அமைப்புல இருந்து ரெடி பண்ணின பாடப் புத்தகங்களை வச்சே மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்குறோம். இந்தப் பாடப்புத்தகத்தை குஜராத்ல உள்ள சௌராஷ்டிரா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வச்சோம். அவங்க அதை அங்கீகரிச்சு சான்றிதழ் கோர்ஸ் நடத்த அனுமதி தந்திருக்காங்க.

நாங்க வகுப்புகள் நடத்தி தேர்வு வச்சால் சௌராஷ்டிரா பல்கலைக்கழகம் சான்றிதழ் வழங்கும்’’ என உற்சாகமாகச் சொல்கிறவர், ‘‘அடுத்து, நான் காளிதாசரின் ‘சகுந்தலை’யை எழுதத் தயார் பண்ணிட்டே இருக்கேன். என்னால் ஆனமட்டும் தமிழ் நூல்களை சௌராஷ்டிரா மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதே என் இலக்கு. அப்புறம், தமிழ் இலக்கியங்களை மொழிச் சிறுபான்மையினர் தங்கள் மொழியில் மொழிபெயர்ப்பு செய்கிறப்ப அவங்கள உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசு மொழி பெயர்ப்பு நூல்களுக்கு வழங்கப்படும் விருதினை இதுபோன்ற நூல்களுக்கும் வழங்கணும்னு வேண்டுகோளா கேட்டுக்கிறேன்’’ என்கிறார் சூர்யா ஞானேஸ்வர்.
             
பேராச்சி கண்ணன்