நீரின்றி அமையாது உலகு...
15. மிதக்கும் நகரங்கள்
தமிழ்நாட்டின் வடக்குமுனை சென்னை முதல் தெற்குமுனை கன்னியாகுமரி வரை வடகிழக்குப்பருவமழை வெளுத்து வாங்குகிறது.சென்னையில் நவம்பர் 4ம் தேதி தீபாவளிக்கு அடுத்த நாள் முதல் நவம்பர் 12ம் தேதி வரை பெய்த மழையின் மொத்த அளவு 82 செமீ. ஒரே நாளில் 23 செமீ மழை பெய்தது. இதில் சில இடங்களில் அதிகபட்சமாகவும் சில இடங்களில் குறைந்தபட்சமாகவும் பெய்துள்ளது. ‘நீங்க சென்னைல எந்த எரியா? இப்ப சென்னை மொத்தமும் ஏரியாதான இருக்கு’ என மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாயின.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/13.jpg)
ஒருகாலத்தில் சென்னை ஏரியாகத்தான் இருந்தது. சென்னையில் மட்டும் 650 ஏரிகள் இருந்தன. இப்போது வெறும் 35 ஏரிகள் மட்டுமே உயிர்பிழைத்து இருக்கின்றன. ஏரிகளின் சமாதியில்தான் நாம் வீடுகளை, வணிக வளாகங்களைக் கட்டிவிட்டு மழையை சபித்துக்கொண்டிருக்கிறோம்.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/13a.jpg) எப்படி காடுகளை அழித்து வீடுகளை உருவாக்கிவிட்டு புலி, சிறுத்தை ஊருக்குள் புகுந்துவிட்டது என்று சொல்கிறோமோ அப்படி ஏரியில் வீடு கட்டிவிட்டு இப்போது அலறுகிறோம். ஒவ்வொரு வடகிழக்குப் பருவமழையிலும் மழைநீர் வடிகால் அமைப்பை ஏற்படுத்தவில்லை... அதனால் தண்ணீர் தேங்குகிறது... இந்த அரசு மற்றும் நிர்வாகம் என்ன செய்கிறது... என்று கேள்வியை மட்டும் எழுப்புபவர்கள், நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என சிந்திப்பதில்லை. எல்லா இடங்களிலும் குப்பையைக் கொட்டுவது, கட்டடம் கட்டிய பின் குப்பைக் கூளங்களை அப்படியே விட்டுப் போவது, பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் குடுவைகள் என எல்லாவற்றையும் கண்டபடி தூக்கி எறிவது... என நம் மீது எவ்வளவு தவறுகள் இருக்கின்றன?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை இயற்கை நமக்கு நினைவுபடுத்திச் செல்கிறது. இந்த மழையின்போது பாதாளசாக்கடைகள் அடைத்துக் கொண்டன. குறிப்பாக மேற்கு மாம்பலம், அசோக் நகர் பகுதியிலிருந்து 180 டன் பிளாஸ்டிக் குப்பைகள் - அதாவது 10 குப்பை லாரிகள் நிரம்பிவழியும் அளவிற்கு - குப்பைகள் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டன. இது சென்னையின் ஒரு பகுதியில் எடுக்கப்பட்டது. சென்னை முழுவதும் எவ்வளவு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டிவைத்துள்ளோம் என்பதை கணக்கெடுத்தால் தலை சுற்றிவிடும். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதை நாம் உணர வேண்டும்.
நாம் ஒரு சிறு பிளாஸ்டிக் பை, பாட்டில்களை போடுவதால் என்ன ஆகப்போகிறது என்று எண்ணுபவர்கள் அப்படி நாம் வீசும் சிறு பொருட்கள்தான் பெரும் பொருட்களாக உருமாறி மழைக் காலத்தில் நம் வீட்டை வெள்ளம் சூழக் காரணம் என்பதை உணர வேண்டும்.எல்லாம் வழக்கம்போல நிகழ்ந்தால் ‘நார்மல் டே’ என்று வாழ்கிறோம். மழை, காற்று என அதில் ஒரு சிறு மாற்றம் வந்தால் பதற்றம் அடைகிறோம். அதுபோலத்தானே இயற்கையும்? குப்பை கூளங்களை பூமியின் மீது நாம் கொட்டும்போது இயற்கை எப்படி வருந்தும் என சிந்திக்க வேண்டும்.
இந்த முறை வெள்ள பாதிப்பு 2015ம் ஆண்டு போல இல்லை என ஆறுதல் அடைந்தாலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நின்று ஆடி டுவெண்டி டுவெண்டி போட்டியில் வெற்றி பெற்றதுபோல் சென்னை மக்களை கதிகலங்க வைத்துவிட்டுத்தான் வடிந்திருக்கிறது. மாநில அரசின் போர்க்கால நடவடிக்கைகளால் பெரும் பாதிப்பின்றி மீண்டிருக்கிறோம். சென்னை போன்ற நகரங்களின் நிலவியல் அமைப்புக்கு தண்ணீர் வழிந்தோடி சேகரமாவதற்கு ஏரிகள்தான் சரியான தீர்வு. நம் முன்னோர்களின் மகத்தான யோசனையின் பலன்தான் ஏரிகள். அந்த ஏரிகள்தான் இத்தனை ஆண்டுகளாகப் பெரு வெள்ளத்தைத் தாங்கி வந்தன.
இனி ஏரிக்கு எங்கே போவது என்று கேட்பவர்களுக்காகவே உள்ளேன் ஐயா என குரல் கொடுக்கிறது தேர்வாய் கண்டிகை போன்ற நீர்த்தேக்கங்கள். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஏரிகளை இணைத்து, ‘கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்’ என்ற புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாக 1,485.16 ஏக்கர் பரப்பளவில், ரூ.380 கோடி மதிப்பில் இது அமைந்துள்ளது.
இதுபோன்ற நீர்த் தேக்கங்களை உருவாக்குவதுடன் பூமிக்கு அடியில் பெரும் நீர்ச்சுரங்கங்களை உருவாக்கினால் வெள்ள பாதிப்புகளைக் குறைக்கமுடியும் என்று நீரியல் பொறியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் சிகாகோ, மலேசியாவின் கோலாலம்பூர், ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் ஹாங்காங் போன்ற நகரங்களில் இதுபோன்ற நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தெலங்கானாவில் கோதாவரி ஆற்றின் குறுக்கேயும் இந்த முறையில் சுரங்க நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
2015ம் ஆண்டு நவம்பர் 18 முதல் டிசம்பர் 7ம் தேதி வரையிலான 20 நாளில் பெய்த பெருமழையில் 300 டிஎம்சி நீர் கிடைத்தபோது அதனை பாதுகாக்க நமக்கு வழியில்லை. சென்னை நகருக்கு ஒரு மாதத்திற்கு ஒரு டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் போதுமானது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 4000 ஏரிகளில் 150 டிஎம்சி நீரை சேமிக்க முடியும். ஆனால், ஏரிகள் தூர்வார முடியாமல் இருப்பதால் வெயில் காலத்தில் எங்கிருந்தோ லாரியில் நீர் கொண்டுவரப்படுகிறது என்று வேதனையை தெரிவிக்கிறார் ஒரு நீரியல் நிபுணர்.
இந்தியாவில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் மாநகரம் மும்பை. அதற்கடுத்து பெங்களூரு. அடுத்து கொல்கத்தா, தில்லி மாநகரங்கள் வருகின்றன. நகரமயமாக்கல் வேகமாக நடக்கும் நகரங்களிலும் இதுபோன்று பருவமழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்.இதைத் தடுக்க வேண்டுமென்றால் மாநகரப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டுவதைக் குறைக்க வேண்டும். இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகளை அதிகம் கொண்ட மும்பையும் பெங்களூரும் இப்போது திணறுகின்றன.
ஒரு சதுர கிலோமீட்டருக்கு இத்தனை வீடுகள்தான் கட்ட வேண்டும் என்று தேசிய கட்டட விதிமுறை (National Building Code) இருக்கிறது. அதேபோன்று இத்தனை அடுக்கு மாடிகள்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், கட்டடம் கட்டுவோர் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்கிறார் மூத்த பொறியாளர் திரு.அ.வீரப்பன்ஓர் அடுக்குமாடி கட்டடத்தில் 100 லிருந்து 1,000 பேர் வசிக்கிறார்கள். இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு நம்மிடம் எந்த அமைப்புகளும் இல்லை.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் கழிவுநீரை லாரியில் கொண்டுபோய் ஆற்றிலோ, ஏரியிலோ சேர்க்கும் நிலைதான் உள்ளது. இங்கு பாதாள சாக்கடைத் திட்டம் எல்லாம் திரும்பவும் நம்முடைய நீர்நிலைகளில்தான் வந்து சேர்கின்றன. இப்படியொரு மோசமான திட்டம் உலகில் வேறெந்த நாடுகளிலும் இல்லை என்று சூழலியலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய், மாம்பலம் கால்வாய் உள்ளிட்ட 16 கால்வாய்கள் மட்டுமல்லாமல், ஏராளமான கழிவுநீர்க் குழாய்களும், சாக்கடைகளும் இருக்கின்றன. அந்தக் கழிவுநீர் குழாய்கள், ஏதாவது ஒரு கால்வாயிலோ, கூவம் அல்லது அடையாற்றிலோ கலந்து கடலை அடைகின்றன. மழைநீா் வடிகால்களையும், கழிவுநீா் வடிகால்களையும் பராமரிப்பதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்டுதோறும் ஏறத்தாழ ரூ.500 கோடிக்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.
மழைக் காலத்துக்கு முன்னால், இந்தக் கால்வாய்களை சுத்தம் செய்வதும், மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றி தயார் நிலையில் வைத்திருப்பதும் அவசியம். இதை கடந்த 10 ஆண்டுகளாக செய்யாமல் இருந்ததால்தான் சென்னை மழைவெள்ளத்தில் தத்தளிக்கிறது.
நீர் வழித்தடங்களிலும் நீர்வழித் தடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை. அத்துடன் மழை நீர் கால்வாய்கள் பராமரிப்பு குறித்தும், அதிக தண்ணீர் கொள்ளும் ஏரிகளைத் தூர்வாருவதுடன் அதைப் பராமரிப்பது குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இப்போதைய தமிழ்நாடு அரசு இக்காரியத்தில்தான் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
(தொடரும்)
- பா.ஸ்ரீகுமார்
|