ஜீவன் சந்தியா
காதலின் அழகான பக்கங்களை மென்மையாக சித்தரித்திருக்கும் மராத்திப்படம், ‘ஜீவன் சந்தியா’. ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்கலாம். அறுபது வயதைத் தாண்டியவர் ஜீவன். சில வருடங்களுக்கு முன்புதான் அவருடைய மனைவி இறந்துவிட்டார். தனது மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வருகிறார்.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/11.jpg) அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார் சந்தியா. கணவரை இழந்து, தனி ஒரு மனுசியாக மகளை வளர்த்து திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மகளோ சந்தியாவை ஒரு பொருட்டாகக் கூட கண்டுகொள்வதில்லை. அத்துடன் சந்தியாவை விட்டு வெகுதொலைவில் வசிக்கிறாள். முதுமையில் தனிமையில் வாடுகின்ற ஜீவனும், சந்தியாவும் எதேச்சையாக ஓர் இடத்தில் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பு நட்பாகி, காதலாக மலர்கிறது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலிருந்தும் எதிர்ப்பு கிளம்புகிறது. எதிர்ப்புகளை மீறி ஜீவனும், சந்தியாவும் திருமணம் செய்துகொள்கின்றனர்.இந்த திருமணம் இரு குடும்பத்தினரிடையே என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே நெகிழ்ச்சியான திரைக்கதை.
எல்லா எல்லைகளையும் கடந்தது காதல் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். இளம் வயதைப் போலவே முதுமையிலும் ஒரு துணை வேண்டும் என்பதையும், அதை குடும்பமும், சமூகமும் அங்கீகரிக்க வேண்டும் என்பதையும் ஒரு கோரிக்கையாகவே வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக் பிரபாகர் மன்டாடே.
|