கிஸ்மத் 2



அதிக வசூலைக் குவித்த பஞ்சாபி மொழித்திரைப்படங்களில் ஒன்று, ‘கிஸ்மத்’. இப்போது ‘கிஸ்மத் 2’ வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கிறது. ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் காணலாம்.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் சிவ். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் பானி. இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும்போது நட்பு மலர்கிறது.

நாளடைவில் பானியின் மீது காதல் கொள்கிறான் சிவ். பானிக்கும் சிவ் மீது விருப்பும் இருக்கிறது. இருந்தாலும் குடும்பத்துக்காக கபில் என்பவரைத் திருமணம் செய்து லண்டனில் செட்டில் ஆகிறாள். திருமணம் செய்யாமலே இருக்கிறான் சிவ்.

இந்நிலையில் சிவ்விற்கு கபில் இறந்துவிட்டதாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடைந்துபோயிருக்கும் பானியைத் தேற்றுவதற்காக லண்டனுக்குச் செல்கிறான் சிவ். பானியும் சிவ்வும் சந்தித்த பிறகு நடக்கும் நெகிழ்வான சம்பவங்கள்தான் திரைக்கதை.

காதலின் உன்னதமான சில பக்கங்களை அழகாக பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். முடிவு இதுதான் என்று முன்பே தெரியப்படுத்தி சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருப்பது சிறப்பு. சிவ்வாகவும், பானியாகவும் நடித்தவர்கள் மனதை அள்ளுகின்றனர். படத்தின் இயக்குநர் ஜக்தீப் சித்து.