எதிர் காலத்தில் வீடுகள் எப்படி இருக்கும்? ஒரு டெக்கி ட்ரிப்!
நம் வாழ்க்கை முறையானது தொழில்நுட்பத்தால் அதிரடியாக மாறிக்கொண்டே இருக்கிறது. நாளொரு டெக்னாலஜியும் பொழுதொரு கண்டுபிடிப்புமாக களத்தில் இறங்கி நம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்த இந்த அபரிமிதமான வளர்ச்சி அடுத்து எந்த விஷயத்தில் இருக்கும் என்ற கேள்விக்கு,வீடுகளையும் கட்டுமானத்துறையையும் கைகாட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/6.jpg) குறிப்பாக, பருவநிலை நெருக்கடி என்பது இன்று உலகமே எதிர்கொண்டிருக்கும் ஆபத்து. இதைக் கட்டுப்பாட்டில் வைக்க உலக நாடுகள் அனைத்தும் முயன்று கொண்டிருக்கின்றன. கரியமிலவாயுவின் உபரியான உமிழ்வை 2050ம் ஆண்டுக்குள் பூஜ்யமாக்கிவிட வேண்டும் என்று உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்திருக்கின்றன. இதனை ‘நெட் ஜீரோ’ என்கிறார்கள். இப்படிச் செய்தால்தான் உலகின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வோடு கட்டுப்பாட்டில் இருக்கும்.
![](http://kungumam.co.in/kungumam_images/2021/20211203/6a.jpg)
இதைக் கடக்கும்போது கொடூரமான பேரழிவுகள் இருக்கும் என்கிறார்கள்.சரி, இதற்கும் வீடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், நிச்சயம் தொடர்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். உலகில் நிகழும் கரியமில வாயு உமிழ்வில் 17 - 21% வீடுகளில் இருந்துதான் வெளியேறுகின்றன என்கின்றன ஆய்வுகள்.வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் தொடங்கி, தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வரை அனைத்துவகையான மின்சார மற்றும் மின்னணு சாதனங்களாலும் இந்த உமிழ்வு நிகழ்கிறது.
குறிப்பாக, குளிர் காலத்தில் வீட்டை சூடாக்குவதற்குப் பெரும் ஆற்றல் செலவாகிறது. இதனால் கணிசமாக உமிழ்வு நிகழ்கிறது என்கின்றன ஆய்வுகள். இந்தப் பிரச்சனை ஐரோப்பிய, அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில்தான் என்றாலும் நமக்கும்தான் இதனால் பாதிப்பு உள்ளது. இதைத் தவிர ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அத்தியாவசியமான சிமெண்ட், ஓடுகள், கான்கிரீட் கட்டுமானப் பொருட்கள் தயாரிப்பதால் நிகழும் கரியமில வாயு உமிழ்தலும் வீடு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கணக்கில்தான் வரும். இதை மனதில் கொண்டே எதிர்கால வீடுகளின் கட்டுமானம் அமையும் என்கிறார்கள் நிபுணர்கள்.
வீட்டுக்குள் இருந்து வெப்பம் வெளியேறுவது தொடர்பான விஞ்ஞானபூர்வமான அடைப்புகளை உருவாக்குவது ஒரு முக்கியமான மாற்றமாக இருக்கும் என்கிறார்கள். உள்ளே வசிக்கும் மனிதர்கள் தொடங்கி வளர்ப்புப் பிராணிகள், வாசலில் உள்ள மரம் வரை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் கார்பன் டை ஆக்ஸைடையும் தோராயமாக மதிப்பிடுவது, வீட்டை கதகதப்பான சூழலில் வைத்திருப்பது, வீட்டை விட்டு அதிக வெப்பம் வெளியேறாதவாறு பார்த்துக் கொள்வது போன்றவை இதன் முக்கியமான அம்சங்கள்.
இதனால், குளிர்காலத்தில் கூட சூடுபடுத்த அதிக ஆற்றல் தேவைப்படாது. காற்றும் வெளிச்சமுமான கட்டுமானங்கள் அதிகமாகும். ஜெர்மனியின் பேசிவ்ஹாஸ் இன்ஸ்டிடியூட் இதனை பரிசோதித்துள்ளது.
இவர்கள் ஆய்வின்படி வீடுகள் கட்டினால் வீட்டைச் சூடுபடுத்த தேவையான ஆற்றலில் 75% குறைத்துவிடலாம் என்றும், இதற்கான எரிபொருள் தேவையில் 90% குறைந்துவிடும் என்றும் தெரிவிக்கிறார்கள். எழுபதுகளிலேயே இந்த டெக்னாலஜி உருவாகிவிட்டாலும் இந்தக் காலச் சூழலுக்கு இது அத்தியாவசியமான டெக்னாலஜியாக உருவெடுத்துள்ளது என்கிறார்கள். இப்போதே பிரஸ்ஸல்ஸ் போன்ற நகரங்களில் இப்படி சுற்றுச் சூழலை மையப்படுத்திய வீடுகள் கட்டப்பட வேண்டும் என்பதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் இது உலகின் மற்ற நகரங்களுக்கும் பரவும்.உலகம் முழுதும் உள்ள கார்பன் உமிழ்வுகளில் 10% கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியால் நிகழ்கிறது என்கிறது ஓர் ஆய்வு. எனவே, இதனை எப்படிக் குறைப்பது என்று யோசிக்கிறார்கள் விஞ்ஞானிகள். சிமெண்ட், இரும்பு இரண்டும் உற்பத்தி செய்ய மட்டுமல்ல, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டு செல்லவும் கார்பன் அதிகம் செலவாகும் நடைமுறை. இதைக் கையாள மாற்று நடைமுறைகளை யோசிக்கிறார்கள்.
கான்கிரீட் கற்களுக்குப் பதிலான மாற்றுகளை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். மரச் சட்டகங்களைப் பயன்படுத்துவது, இரும்பும் மரமும் இணைந்த கட்டுமானத் தொழில்நுட்பங்களை உருவாக்குவது நல்ல பலன் தரக்கூடும் என்கிறார்கள். இப்போது முதல் இதனை அமுல்படுத்தினால் எதிர்வரும் 2050ம் ஆண்டுக்குள் இது இரண்டு கோடி முதல் எட்டு கோடி டன் கார்பன் உமிழ்வுகளைத் தடுக்கும் தொழில்நுட்பமாக இருக்கும் என்கிறார்கள்.
இடம், சூழல் போன்றவற்றுக்கு ஏற்ப கட்டுமானப் பொருட்களை கார்பன் குறைந்ததாகப் பயன்படுத்திக்கொள்வது ஒரு நல்ல ஐடியா. உதாரணமாக, மூங்கில்கள், சணல், கார்க் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே பயன்படுத்திய கட்டுமானப் பொருட்களை முடிந்தவரை மீண்டும் பயன்படுத்துவது கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த ஒரு நல்ல சிக்கன நடவடிக்கை என்று ஒரு தரப்பு சொல்கிறார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், இந்த ஜீரோ கார்பன் இலக்கை அடைய வெறும் முப்பது ஆண்டுகளே உள்ளன. இப்போது உள்ள கட்டடங்களில் சுமார் எண்பது சதவீதம் அப்படியேதான் இருக்கும். எனவே, இதன் கார்பன் உமிழ்வுகளை என்ன செய்யப் போகிறோம் என்பது ஒரு முக்கியமான கேள்வி.
இன்சுலேஷன் டெக்னாலஜி மூலம் கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த வேண்டும். அதுவே ஒரே பிரதானமான வழி. ஐரோப்பியர்களுக்கு ஜன்னல்கள் ஒரு பெரும் பிரச்னை. குளிர்காலங்களில் அவை பெரும் உபத்திரவமாக மாறிவிடும். இரட்டை தடுப்பு சன்னல்கள் அமைப்பது அறையின் வெப்பத்தை தக்க வைக்க உதவும் என்று இப்போது அப்படியான கட்டுமானங்கள் அதிகம் செய்யப்படுகின்றன.
நம்முடைய நாட்டைப் பொறுத்தவரை மிதவெப்ப மண்டலம். காற்றும் வெளிச்சமுமான வீடுகளே நமக்கு வேண்டும். கட்டும்போதே காற்றோட்டமான, சூரிய வெளிச்சம் அதிகம் உள்ளே வர சாத்தியமான வீடுகளைத் திட்டமிட வேண்டும். இருக்கும் நெரிசலில் இதெல்லாம் சாத்தியமா எனக் கேட்பதில் அர்த்தமில்லை.
நகரங்களில் நெரிசலான கட்டடங்கள் கட்டிக்கொண்டே இருப்பது எந்த வகையிலும் சூழலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் விஞ்ஞானிகள். முடிந்தவரை நகரங்களில் மக்கள் தொகை பெருகுவதைத் தடுக்கும்படியாக சமூக அமைப்பை உருவாக்க வேண்டும். மறுபுறம் நகரின் கட்டடங்களை, வீடுகளை சுற்றுச் சூழல் நெருக்கடிக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும்.
ஒரு வசிப்பிடத்தின் அருகிலேயே கிடைக்கும் எளிமையானதும் அதே சமயம் வலிமையானதுமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வீடு கட்டுவது ஒரு சிறந்த முறை. லாரி பேக்கர் போன்ற பிரிட்டிஷ் கட்டுமான நிபுணர்கள் இதற்கான வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறார்கள். மினிமலிச வாழ்க்கைமுறை போன்ற நவ காந்திய சிந்தனைகளால் உரம் பெற்றவர் லாரி பேக்கர். இவரின் செலவு குறைந்த, ஆற்றல் தேவை குறைந்த கட்டுமானங்கள் உலகப் புகழ்பெற்றவை. எதிர்காலத்தில் இப்படியான கட்டுமானங்கள் அத்தியாவசியமாகக்கூடும். நம்முடைய தொழில்நுட்பங்கள் இதை நோக்கியே மையப்படுத்தப்பட்டுள்ளன. மறுபுறம் டெக்கி ரோபோக்கள் பயன்பாடும் வீட்டுக்குள் அதிகரிக்கும். சூழலியல் என்ற கருத்துக்கு முரணான இந்த வளர்ச்சியை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது ஒரு முக்கியமான கேள்வி. காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
இளங்கோ கிருஷ்ணன்
|