சிறுகதை - பெய்யெனப் பெய்யும் மழை



வேகமாக ஓடிக்கொண்டிருந்தது பேருந்து. நெய்வேலியிலிருந்து பாண்டி செல்லும் அரசாங்கப் பேருந்து அது. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தார் ‘கோடங்கி’. அவரது இயற்பெயர் என்னவென்பது பெரும்பாலான வாசகர்களுக்குத் தெரியாது. அது தெரிந்து என்னவாகப் போகிறது அவர்களுக்கு?

அவரது வாசகர்கள் என்பவர்கள் கனமான வாசகர்களே. அவர் வெளியிடும் ‘மண் குதிரை’ இலக்கியச் சிற்றிதழில் எழுதுபவர்கள், ‘மண் குதிரை’ வெளிவரத் தங்களால் ஆன நிதி உதவிகளைச் செய்பவர்கள்! பத்திரிகை நடத்துவதற்கான பணமெல்லாம் கோடங்கியிடம் கிடையாது. அவரிடம் இருந்ததெல்லாம் இலக்கியத்தின் மீதிருந்த தீராத காதல்! எல்லையற்ற வேட்கை! எப்பாடு பட்டாவது ஒவ்வொரு இதழையும் கொண்டு வந்து விடுவார்.ஐந்தாண்டுகளுக்கு மேலாக ‘மண் குதிரை’ நடத்தி வருகிறார்.
ஒரு வீட்டின் மொட்டை மாடியில் சிமெண்ட் ஷீட் போடப்பட்ட எட்டுக்கு எட்டு அறையில் வசிக்கிறார். ஒரு இரும்பு கட்டில், சின்னதான மர மேஜை, உட்கார்ந்து எழுத நாற்காலி, வருபவர்கள் அமருவதற்கான பிளாஸ்டிக் நாற்காலி, கயிற்றுக் கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் தோய்த்துக் காய வைக்கப்பட்ட துணிகளைத் தவிர வேறு எதுவும் கிடையாது. அருகில் உள்ள டீக்கடையிலிருந்து ஒரு பையன் டீ கொண்டு வந்து தருவான். ஹோட்டல் சாப்பாடு. இவ்வளவுதான் கோடங்கி.

‘‘இதைவிடக் கொஞ்சம் பெரிய ரூமா பார்த்துக்கிட்டுப் போயிடலாமே..?’’ நண்பர்கள்தான் ஆதங்கப்படுவார்கள். ஆனால், அவருக்கு எந்த ஆதங்கமும் கிடையாது.
‘‘இந்த ஒண்டிக் கட்டைக்கு எல்லாம் இது போதும்!’’அனாவஸ்யமாக செலவு எதுவும் செய்ய மாட்டார். இரண்டு ஜதை உடுப்பு தவிர வேறு இருக்காது. இன்னொரு இட்லி சாப்பிடுவதானால் கூட யோசிப்பார். ஒவ்வொரு பைசாவும் பத்திரிகைக்குப் பயன்படுமே என்பதுதான் அவரது எண்ணமாக இருக்கும்.

இந்த நிலைமையில்தான் பத்திரிகைகள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. உலகம் முழுவதும் வீட்டிற்குள் சுருண்டது. கால் சம்பளமும், அரை சம்பளமும் அவரவர் குடும்பங்களுக்கே போதாத நிலையில், பெரிய பத்திரிகைகளெல்லாம் வெளிவராத போது, இவருடைய சிற்றிதழ் மட்டும் எப்படி வரும்?

நிலைமை சற்று சீரடைந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பியதும் ரயில், பஸ்கள் ஓட ஆரம்பித்தபிறகு, இளைத்துப் போன பத்திரிகைகள் வெளி வந்ததைப் பார்த்ததும் இவருக்கும் ‘மண் குதிரை’யை ஓட விட வேண்டுமென்று தோன்றியது. ஆனால், அதற்கான பணம் அவரிடமில்லை. அவரிடம் மட்டுமல்ல; வேறு யாரிடமும் இல்லை.  

‘‘இந்த ஒருமுறை மட்டும் யார்கிட்டயாச்சும் வாங்கி சமாளிச்சுடுங்க அடுத்த இஷ்யூவிலிருந்து நாங்க பார்த்துக்கறோம்...’’சொல்லி வைத்த மாதிரி அனைவரிடமிருந்தும் இதே பதில் வந்தது. அவர் சுணங்கி, முடங்கிப் போய்விடவில்லை. எழுந்து ஜிப்பா பையில் எவ்வளவு பணமிருக்கிறது என்று பார்த்தார். பேருந்து கட்டணத்திற்கும், தாராளமாக டீ குடிக்கவும் பணமிருக்கவே அறையைப் பூட்டி கீழ்வீட்டில் சாவி கொடுத்துவிட்டு கிளம்பினார்.

அவர் எங்கு போவதானாலும் கீழ் வீட்டில் சாவி கொடுத்து விட்டுத்தான் செல்வார். எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்பது அவரது எண்ணம். எதற்கும் எப்போதும் தயாரானவராகவே அவர் இருந்தார். யாருக்கும் எந்த இடைஞ்சலும் கொடுக்கக் கூடாது என்பதிலும் தீர்மானமானவராகவே இருந்தார். நேராகக் கோயம்பேடு போய் இப்போது போலவே அரசுப் பேருந்து பிடித்து நெய்வேலி போய் இறங்கினார். டீக்கடை ஒன்றில் ஒரு குவளை தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டார். பின்னர் டீ வாங்கிக் குடித்து விட்டு கபிலனை சந்திக்கக் கிளம்பினார்.

கபிலன் அரசாங்க உயரதிகாரி. உயர் அதிகாரிகளுக்கென தனியாக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வீட்டில் அவர் இருந்ததால் கோடங்கி அவர் வீட்டிற்குப் போவதே இல்லை. அனைத்துத் தர மக்களும் வந்து சந்திக்கும் இடம் அலுவலகம் என்பதால் அவருக்கும் அது பிடித்தமானதாகவும், வசதியானதாகவும் இருந்தது. அவர் தன் பெயரைச் சொல்லி அனுப்பியதும் உடனே உள்ளே அழைக்கப்பட்டார். எழுந்து நின்று வரவேற்றார் கபிலன். ‘‘வாங்க... வாங்க... என்ன சொல்லாமக் கொள்ளாம வந்திருக்கீங்க!’’
‘‘தோணிச்சு... வந்தேன்...’’‘‘என்ன சாப்பிடறீங்க... டீ சொல்லட்டுமா?’’

‘‘வேணாம்... இப்பத்தான் குடிச்சிட்டு வந்தேன்... இதப்பாரு கபிலன். உன் தோழன் முத்துசாமிக்கும் எனக்கும் நடந்ததை நான் எழுத்துல பதிவு பண்ணியிருக்கேன். வர இஷ்யூ ‘மண் குதிரை’ல போடலாம்னு...’’கையில் வைத்திருந்ததைக் கொடுத்தார். வாங்கிப் படிக்கத் துவங்கினார் கபிலன்.‘‘தம்பி, ரேமண்ட் கார்வர் கதைகள்ல உனக்குப் பிடிச்ச கதை எது..?’’ என்ற கேள்வியுடன் ஆரம்பித்திருந்தது கட்டுரை.‘‘கால் இஃப் யூ நீட் மீ...’’ (Call if you need me) என்றார் முத்துச்சாமி.

‘‘அதை எனக்கு மொழி பெயர்த்துக் கொடேன். அடுத்த இஷ்யூ ‘மண் குதிரை’க்கு...’‘‘ஏற்கெனவே மொழி பெயர்த்துட்டேன். ‘சூறைக்காற்று’ வெளியிட்டுவிட்டது...’’‘‘சரி. இதுவரை மொழிபெயர்க்காத கதைகளில் எது உனக்கு ரொம்பப் பிடிச்ச கதைன்னு சொல்லு?’’‘‘ட்ரீம்ஸ்! கனவுகள்!’’‘‘என்ன கதை சொல்லு?’’முத்துச்சாமி கதையைச் சொன்னார். கேட்டு முடித்ததும், ‘‘ரேமண்ட் கார்வர் இதுக்கு ஏன் கனவுன்னு பேர் வச்சார்?

‘புகை’ன்னில்ல வச்சிருக்கணும்! நீ இதை ‘புகை’ன்ற தலைப்புல மொழிபெயர்த்துவிடு...’’‘ஐயய்யோ! கார்வர் கோபித்துக் கொள்வார்! நான் ‘கனவுகள்’ன்ற தலைப்பிலேயே மொழி பெயர்த்துத்தரேன்...’முத்துச்சாமி ‘மண் குதிரை’க்காக மொழிபெயர்த்த கதை கீழே -கதையைப் படிக்காமல் அப்படியே திருப்பிக் கொடுத்த கபிலன், ‘‘கதையை இஷ்யூவில் படிச்சுக்கறேன்... ஆமா, இஷ்யூ எப்ப வருது?’’ என்றார்.‘‘வரணும்...’’ கபிலன் புரிந்து கொண்டார். ‘‘சரி எந்திரிங்க...’’ என்று நாற்காலி விட்டு எழுந்து கொண்டார்.

‘‘எதுக்கு?’’ எழுந்து நிற்காமலே கேட்டார் கோடங்கி.‘‘கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது... நான் கூப்பிடும் இடத்துக்கு என் கூட வரணும்...’’
எழுந்து கொண்டார்.கார் ஒரு மிகப் பெரிய ஆயத்த உடையகத்தின் முன்பு நின்றது. கபிலனுடன் கீழே இறங்கிய கோடங்கி அந்தக் கடையின் பிரம்மாண்டம் கண்டு மிரண்டார்.
‘‘என்னப்பா... ரெடிமேட் ஷாப்புக்குக் கூட்டிட்டு வந்திருக்க?’’‘‘உங்களை எதுவும் பேசக் கூடாதுன்னு சொன்னேனில்ல?’’கபிலனுடன் உள்ளே போனார். அவரது அளவிற்கு அவர் அணியும் ஜீன்ஸ் பேண்ட்டும், முரட்டு ஜிப்பாவையும் எடுக்கச் சொன்னதும் பதறினார் கோடங்கி.

‘‘இதப்பாரு கபிலன்... எனக்கு புதுத் துணியெல்லாம் வேண்டாம். நான் புதுசு போட்டுக்கவே மாட்டேன். புதுத்துணிக்குப் போடுற காசு இருந்துச்சுன்னா, இன்னொரு இஷ்யூ ‘மண் குதிரை’ கொண்டு வந்துடுவேன்...’’‘‘பத்திரிகை விஷயத்தை விடுங்க! நீங்க போட்டுக் கிட்டிருக்கிற ஜிப்பா நைஞ்சு, வெளுத்துப் போயிருக்குது பாருங்க...’’‘‘நீ வாங்குற புதுத்துணி கூட கொஞ்ச நாள்ல இப்படித்தான் ஆவும். எனக்கென்னப்பா அழகு வேண்டிக் கெடக்குது?’’‘‘துணி போடுறது அழகுக்காக இல்லேன்னு உங்களுக்கே தெரியும். எதுக்காகப் போடுறமோ, அதை நீட்டா போட்டுக்கணும். ‘கவிதை எழுதுகிற மாதிரித்தான் வாழ்க்கையின் எல்லாச் செயல்களும்’னு நீங்கதானே சொல்லியிருக்கீங்க? முதல்ல இந்த புதுப் பேண்ட்டையும், ஜிப்பாவையும் அந்த ரூமுக்குள்ள போய் மாத்திக்கிட்டு பழசை அங்கேயே போட்டுட்டு வாங்க...’’சொன்ன மாதிரியே செய்தார். பளிச்சென்று வெளியில் வந்தார்.

அருகில் வந்து ஜிப்பாவைத் தொட்டு சரிசெய்த கபிலன் ஜிப்பா பாக்கெட்டைப் பார்த்தார். ‘‘என்ன இருக்கு?’’
‘‘திரும்பிப் போகக் கொஞ்சம் பணம்...’’தன் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு ஒரு வெள்ளைக் கவரை எடுத்து அவரின் ஜிப்பா பாக்கெட்டில் வைத்தார் கபிலன்.
புரிந்துகொண்டார் கோடங்கி. ‘‘சரி... கிளம்பட்டுமா?’’‘‘இருங்க... இன்னும் ரெண்டு ஸெட் டிரஸ் பேக் பண்ணச் சொல்லியிருக்கேன்...’’‘‘ஐயய்யோ...’’ என்று அலறினார் கோடங்கி. ‘‘எனக்கு வேணவே வேணாம்...’’ என்றவாறே கடை வாசலை நோக்கி வேகமாக நடந்தார்.

‘‘சார்... சார்...’’ அழைத்துக் கொண்டே கபிலன் பின்னால் வருவதையும் பொருட்படுத்தாமல் கடையை விட்டு வெளியேறி கூட்டத்தில் கலந்து, பின்னர் பாண்டிக்குப் போகப் பேருந்தில் ஏறினார்.
‘‘சார்... பாண்டி வந்தாச்சு...’’நடத்துனரின் கணீர்க் குரலில் கலைந்து கடைசி ஆளாகப் பேருந்தை விட்டுக் கீழே இறங்கினார் கோடங்கி. ஜிப்பா பையினுள் கை விட்டுப் பார்த்தார். கபிலன் செருகிய கவருடன் பேருந்து கட்டணத்திற்கும், டீக்கும் பணமிருக்கவே எதிரில் இருந்த டீக் கடைக்குப் போய் டீ குடித்தார். பசி சற்று தணிந்தது.

பாண்டிச்சேரி வந்தால் தான் வழக்கமாகப் போகும் எழுத்தாளர்களான நிரஞ்ஜன், நாவண்ணன் ஆகிய இருவர் வீட்டிற்கும் போகத் திட்டமிட்டார். முதலில் நிரஞ்ஜன் வீட்டைத் தேர்வு செய்தார். ‘அங்கு போன உடனே சாப்பாடு போடச் சொல்லி சாப்பிட வேண்டும்...’இவர் நெய்வேலிப் பேருந்தை விட்டு இறங்கியபோதே நண்பகலாகியிருந்தது. வெய்யில் சுளீரென்று அடித்தது. உக்கிரம் தாங்க முடியவில்லை. பையிலிருந்த மீதப் பணம் ஆட்டோவில் போக அனுமதிக்காத காரணத்தால் நடந்து செல்லத் தீர்மானித்தார்.

அவர் இறங்கிய இடத்திலிருந்து நிரஞ்ஜனின் வீடு வெகு தொலைவில் இருந்தாலும், நடப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி இல்லை. முகத்தைத் தாக்கும் வெய்யிலில் நடப்பதன் சிரமத்தை முற்றிலுமாக உணர்ந்தார். வயிற்றுப் பசிவேறு வாட்டி எடுத்தது. அப்படியே ஏதாவதொரு மர நிழலில் உட்சார்ந்து விடலாமா என்று கூட யோசித்தார். ஒருக்களித்து இடது கை மடக்கித் தலையின் கீழ் வைத்துப்படுத்தால் பசி மயக்கத்திற்கும், களைப்பிற்கும் நன்றாகத் தூக்கம் வரும்.

 ‘ஆனால் அதை விட நிரஞ்ஜன் வீட்டிற்குப் போய் சாப்பிடுவதே உசிதம்...’நடக்க நடக்க வியர்த்துக் கொட்டியது. புது ஜிப்பா வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டு உறுத்தியது. ‘என்ன இருந்தாலும் பழசு பழசுதான்...’ எப்போதுமே கடையிலிருந்து வாங்கி புதுசாக அவர் போட்டுக் கொண்டதே இல்லை. துவைத்துக் காயவைத்து பின்னரே உடுப்பார். கடைசியாக எப்போது புதுசு வாங்கினோம் என்று யோசித்தார். நினைவுக்கு வரவில்லை. கபிலன் கூறியது சரிதான். புது உடை வாங்கி வெகு காலமாகி விட்டதுதான்.

நிரஞ்ஜனின் தெரு வந்ததும் வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார். வாசற்படியில் உட்கார்ந்துவிட்டு மேலே படியேறியதும்தான் வாயிற்கதவு பூட்டப்பட்டிருப்பதை கவனித்தார். ‘இவ்வளவு தூரம் நடந்து வந்ததும் வீணா?’    குழப்பமான மனநிலையில் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்து விட்டு, ‘சீ! என்ன பைத்தியக் காரத்தனம்’ என்று தன்னைத் தானே தொந்து கொண்டு படியிறங்கி நாவண்ணன் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார்.இப்போது கால்கள் கெஞ்சின. மனம் லேசாக உற்சாகமிழந்தது. நாவண்ணனாவது வீட்டில் இருப்பானோ மாட்டானோ என்கிற சந்தேகம் வந்தது. ஒரு வேளை நிரஞ்ஜன் வெளியில் எங்காவது போய் இதற்குள் திரும்பி வந்திருந்தால்..?

மீண்டும் நிரஞ்ஜன் வீட்டை நோக்கிப் போனார். பூட்டு தொங்கியபடி இருக்கவே வேறு வழியின்றி நாவண்ணன் வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தார். இப்போது மனம் மட்டுமின்றி உடலும் களைத்துப் போயிருந்தது. அங்கும் அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. நாவண்ணன் குடும்பத்தோடு கல்யாணம் ஒன்றிற்குப் போயிருந்ததை அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
சலித்துப் போனார். பாண்டிச்சேரி ஒரு நாளும் அவருக்கு இப்படி வெறுமையாக இருந்ததில்லை.

மீண்டும் பேருந்து நிலையம் வந்தார். புறப்படத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருந்த திருவண்ணாமலை பேருந்தில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தார். அப்போதே வயிறு உடலோடு ஒட்டிக் கொண்டு விட்டது. ‘இனி தாங்க மாட்டேன்’ எனக் கட்டளையிட்டது. பயணச்சீட்டு வாங்கியவரை அசதியும், களைப்பும், எல்லாவற்றையும் மிஞ்சிய பசியும் கண்களை மூடச் செய்தன. மறுவிநாடி தூங்கியும் போனார்.‘‘சார்... திருவண்ணாமலை வந்திடுச்சு... இறங்குங்க சார்...’’நடத்துனர் தோளைத் தொட்ட பின்பே விழித்தார்.

‘‘நன்றிங்க...’’ என்றவாறு படிகளில் இறங்கி இருட்டில் நடந்து சிவா வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினார். ‘நல்ல வேளையாக சிவா வீடு
பூட்டியிருக்கவில்லை...’உள்ளே மணியடிப்பது கேட்டது. வெளி விளக்கு போடப்பட்டது.‘‘யாரு?’’ என்ற சிவாவின் குரல் இவருக்குப் பெருத்த ஆறுதலாக இருந்தது. கதவைத் திறந்த சிவா வெளியில் நின்று கொண்டிருந்தவரைப் பார்த்துத் திகைத்தான்.‘‘ஏய்... கோடங்கி! நீயா? வா... வா... என்ன இந்த நேரத்துல?’’

‘‘மொதல்ல சாப்பாடு போடு! ரொம்பப் பசிக்குது. இன்னும் கொஞ்ச நேரம் போனா கீழ விழுந்துடுவேன் போல இருக்கு...’’‘‘உள்ள வா...’’ கை பற்றி உள்ளே அழைத்துப் போனான் சிவா. தூங்கிக் கொண்டிருந்த மனைவியையோ, அம்மாவையோ எழுப்பாமல், தானே தோசை போட்டுத் தந்தான். முதலிரண்டு தோசைகளை அவர் சாப்பிட்டு முடிக்கட்டுமென்று காத்திருந்த சிவா, மூன்றாவது தோசையை அவரது தட்டில் போட்டுவிட்டுக் கேட்டான். ‘‘கடைசியா எப்ப சாப்ட்ட?’’

‘‘ரெண்டு நாளாச்சுடா...’’‘‘அடப்பாவி, ஏண்டா?’’
‘‘பஸ்ஸுக்குத்தான் கைல காசு இருந்திச்சு. வெறும் டீ மட்டும் குடிச்சேன்...’’
‘‘நேரா இங்கதான் வரியா?’’‘‘நெய்வேலி போய், அங்கிருந்து பாண்டி வந்து, அப்புறம் இங்க வந்திருக்கேன்...’’
‘‘அங்கெல்லாம் எதுக்குப் போன?’’‘‘கபிலன், நிரஞ்ஜன், நாவண்ணன் எல்லாரையும் பார்க்கலாம்னுதான்!’’‘‘பார்த்தியா?’’

‘‘கபிலனை மட்டும்தான் பார்க்க முடிஞ்சுது. அவங்க ரெண்டு பேரும் ஊர்லேயே இல்ல...’’ என்ற கோடங்கி மூன்று தோசைகளுடன் எழுந்து கொண்டார்.‘‘என்ன எந்திரிச்சுட்ட?’’‘‘பசி ஓவராப் போயிடுச்சுன்னு வச்சுக்க, சாப்பிட முடியாது...’’  சமையலறை விளக்கை அணைத்துவிட்டு இருவரும் விருந்தினர் படுக்கையறைக்குப் போனார்கள். அத்தனை நேரமும் உறுத்திக் கொண்டே இருந்த புது ஜிப்பாவைக் கழற்றினார் அவர். சுவரில் அடிக்கப்பட்டிருந்த கோட் ஸ்டாண்டில் மாட்டப்போன போது ஜிப்பாவின் பையிலிருந்த கவர் கீழே விழுந்து, உள்ளிருந்த ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் மின்சார விசிறியின் காற்றில் பறந்து தரை முழுதும் சிதறின.

ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்த சிவா சீராக அடுக்கி கவருக்குள் போட்டுக்கொண்டே கேட்டான். ‘‘ஏண்டா பாவி! பாக்கெட்ல இவ்ளோ பணத்தை வச்சுக்கிட்டா சாப்பிடப் பணமில்லேன்னு மயக்கம் போடற லெவலுக்குப் பசியோட வந்திருக்க?’’‘‘ஹாங்... அது ‘மண் குதிரை’க்காக கபிலன் கொடுத்த பணம்!’’

-  இந்துமதி