Family Tree - எலிவேட்டர் எஜமான்!
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இத்தாலியின் ரோம் நகரில் எலிவேட்டர்கள் அறிமுகமாகிவிட்டதாக வரலாறு சொல்கிறது! ஆனால், அப்போது பொருட்களையும், விலங்குகளையும் மேலே எடுத்துச்செல்லவும், கீழே இறக்கவும் எலிவேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
சில நூறு வருடங்கள் கழித்துதான் மனிதர்களை ஏற்றிச்செல்லும் எலிவேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதாவது 1857ம் வருடம் நியூயார்க்கில் உள்ள ஹாவூட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உலகிலேயே முதல்முறையாக மக்களை ஏற்றிச் செல்லும் எலிவேட்டர் நிறுவப்பட்டது. நீராவி எஞ்சினால் இயங்கக்கூடிய இந்த எலிவேட்டர் ஒரு நிமிடத்துக்கு 40 அடி உயரம் வரை செல்லும். இப்போது ஒரு நொடிக்கே 40 அடிக்கும் அதிகமான உயரம் செல்லும் எலிவேட்டர்கள் வந்துவிட்டன. ஐந்து தளங்களைக் கொண்ட ஹாவூட் ஸ்டோரில் நிறுவப்பட்ட எலிவேட்டரைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் நியூயார்க்கிற்கு விரைந்தனர். ஆரம்ப நாட்களில் மக்கள் எலிவேட்டரில் ஏறுவதற்கு பயந்தனர். அந்த பயம் மூன்று வருடங்களாகவே தொடர்ந்ததால் எலிவேட்டரின் பயன்பாட்டை நிறுத்திவிட்டது ஹாவூட்.
தவிர, 150 வருடங்களுக்கு முன்பு பல அடுக்குகளைக் கொண்ட கட்டடங்கள் பெரிதாக இல்லை. மூன்று அல்லது நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடங்களாக இருந்தாலுமே கூட, கீழ் தளத்தில் வசிக்கவே மக்கள் பெரிதும் விரும்பினர். அதனால் கீழ்தளத்துக்கு வாடகை அதிகம். படிக்கட்டுகளில் ஏறி மேல் தளத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால் மேல்தளத்துக்கு வாடகை ரொம்பக் குறைவு.
இதையெல்லாம் புரட்டிப்போட்டுவிட்டது நவீன எலிவேட்டர்களின் வருகை. ஆம்; எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் கட்டடங்களை எழுப்பலாம் என்ற நம்பிக்கையை எலிவேட்டர்கள் கொடுத்துள்ளன. அத்துடன் எலிவேட்டர் வசதியிருப்பதால் 10வது மாடியில் கடற்கரையை நோக்கிய பிளாட், 20 வது மாடியில் பால்கனியுடன் கூடிய அலுவலகம் என உயரம் செல்லச் செல்ல வாடகையும், விலையும் அதிகம்.
நவீன எலிவேட்டர்களைத் தொடர்ந்து, 19ம் நூற்றாண்டின் இறுதியில் அதே நியூயார்க்கில் பழைய இரும்புத்தூண்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இயங்கும் படிக்கட்டுகளான எஸ்கலேட்டர்கள் அறிமுகமாகின. மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், மால்கள், வானளவு கட்டடங்கள்... போன்ற பெரும் கட்டமைப்புகளில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன எஸ்கலேட்டர்கள்.
இருபதாம் நூற்றாண்டில்தான் எலிவேட்டர்களும், எஸ்கலேட்டர்களும் பரவலான பயன்பாட்டுக்கு வந்தன. இதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று, ‘கோன்’ நிறுவனம். பின்லாந்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்ட குடும்ப நிறுவனம் இது. எலிவேட்டர் மற்றும் எஸ்கலேட்டர் தயாரிப்பில் உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமும் இதுவே. மட்டுமல்ல; தானியங்கி கதவுகள் தயாரிப்பிலும் தனித்துவத்தைப் பதித்து வருகிறது ‘கோன்’. பின்னிஷ் மொழியில் ‘கோன்’ என்றால் இயந்திரம் அல்லது கருவி என்று அர்த்தம்.
ஹெரால்டு ஹெர்லின்
பின்லாந்தின் தலைநகரான ஹெல்சிங்கியில் 1908ம் வருடம் ‘டர்மோ’ என்ற பெயரில் இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் கடை ஒன்று திறக்கப்பட்டது. அடுத்த இரண்டு வருடங்களில் அந்தக்கடை ‘கோன்’ என்று பெயர் மாற்றப்பட்டு, ஒரு நிறுவனமாக பரிணமித்தது. அத்துடன் ஜெனரேட்டர், மோட்டார் தயாரிக்கும் ‘ஸ்ட்ரோம்பெர்க்’ எனும் நிறுவனத்தின் கிளையாக மாறியது ‘கோன்’.
அன்றிலிருந்து ‘ஸ்ட்ரோம்பெர்க்’கின் பழைய மோட்டார்களைக் கொள்முதல் செய்து, அதைப் புதுப்பித்து விற்பது ‘கோன்’ நிறுவனத்தின் முக்கிய பிசினஸ். இதுபோக ஸ்வீடனைச் சேர்ந்த ‘கிரஹாம் பிரதர்ஸ்’ நிறுவனத்தின் எலிவேட்டர்களை இறக்குமதி செய்யும் லைசென்ஸை ‘ஸ்ட்ரோம்பெர்க்’ வைத்திருந்தது. எலிவேட்டர்களை இறக்குமதி செய்து நிறுவும் வேலை, கிளை நிறுவனமான ‘கோனி’ன் கைக்கு வந்தது.
முதல் உலகப்போரால் ஐரோப்பாவே ஸ்தம்பித்தது. எலிவேட்டர்களுக்கான ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. அதனால் ரஷ்ய இராணுவத்துக்குத் தேவையான ஒரு கோடி வெண்கலக் குண்டுகளைத் தயாரித்துக் கொடுத்தது, ‘கோன்’. இதன்மூலம் வருமானம் எகிறியது. ஊழியர்களின் எண்ணிக்கை 10லிருந்து 600 ஆக உயர்ந்தது. போரினால் பின்லாந்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் எலிவேட்டர்களின் விற்பனையும் சரிந்தது. 1918ல் வியாபாரத்தை வலுவாக்க எலிவேட்டர்களுக்கான முதல் விளம்பரத்தை வெளியிட்டது ‘கோன்’. ஆனாலும் அந்த வருடத்தில் 4 எலிவேட்டருக்கான ஆர்டர்கள் மட்டுமே வந்தன.
1924ல் கடன், பழைய தொழில்நுட்பம், விற்பனை சரிவு போன்ற காரணங்களால் ‘கோனி’ன் தாய் நிறுவனமான ‘ஸ்ட்ரோம்பெர்க்’ திவாலானது. கடனில் இருக்கும் ‘ஸ்ட்ரோம்பெர்க்’கை விட, அதன் கிளையான ‘கோன்’ நிறுவனத்தை வாங்குவது புத்திசாலித்தனம்; ‘கோனி’ற்கு நல்ல எதிர்காலமும், பிசினஸ் வாய்ப்பும் இருக்கிறது என்பதைக் கவனித்தார் எஞ்சினியர் மற்றும் பிசினஸ்மேனான ஹெரால்டு ஹெர்லின். அந்த வருடமே ‘கோன்’ நிறுவனம் ஹெரால்டின் வசமானது.
ஹெல்சிங்கியைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு 1874ம் வருடம் மகனாகப் பிறந்தார் ஹெரால்டு ஹெர்லின். முறைப்படி பொறியியல் படித்தவர். தவிர, ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரியாவுக்குச் சென்று எஞ்சினியரிங் குறித்து விரிவாகப் படித்திருக்கிறார். ஹெல்சிங்கியில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் உதவிப் பொறியாளராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய ஹெரால்டு, பல நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தார்.
குறிப்பாக ஒரு பிளம்பிங் நிறுவனத்தில் 15 வருடங்களுக்கு மேலாக மேலாளராக இருந்தார். தவிர, ‘ஸ்ட்ரோம்பெர்க்’ நிறுவனத்துக்கு ஆலோசகராகவும் பணிபுரிந்திருக்கிறார். அதனால் ‘கோனி’ன் செயல்பாடுகள் அவருக்கு அத்துப்படி. சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் ஹெரால்டு இருந்தபோது தான் ‘கோன்’ நிறுவனம் விற்பனைக்கு வந்தது. ‘கோன்’ நிறுவனத்தை ஹெரால்டு நிர்வகிக்க ஆரம்பித்த முதல் வருடத்திலேயே 100 எலிவேட்டர்களுக்கு ஆர்டர்கள் குவிந்தன. இது 1927ல் 200ஆக உயர்ந்தது. 1928ல் தினமும் ஒரு எலிவேட்டர் தயாரிக்கும் நிறுவனமாக வளர்ந்தது ‘கோன்’. இந்நிலையில் குடும்ப நிறுவனத்துக்குள் நுழைந்தார் ஹெரால்டின் மகனான ஹெய்க்கி ஹெர்லின்.
ஹெய்க்கி ஹெர்லின்
‘கோன்’ நிறுவனம் ஆரம்பித்த வருடங்களில் ஹெல்சிங்கி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, இரண்டு வருடங்கள் ஜெர்மனியில் உள்ள ஒரு எஞ்சினியரிங் நிறுவனத்தில் பணியாற்றினார் ஹெய்க்கி. 1926ல் பின்லாந்துக்குத் திரும்பி வேறொரு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தார். அது பிடிக்காமல் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கச் சென்றுவிட்டார். அமெரிக்காவில் படித்துக்கொண்டே சில எஞ்சினியரிங் வேலைகளையும் செய்து வந்தார்.
குடும்ப நிறுவனத்தில் வேலை செய்ய தந்தை அழைப்பு விட, 1928ல் பின்லாந்துக்கு விரைந்தார் ஹெய்க்கி. ஆரம்பத்தில் எலிவேட்டர் டிசைனராக இருந்து, டெக்னிக்கல் மேனேஜராக உயர்ந்தார். முப்பதுகளில் பின்லாந்தின் பொருளாதாரம் வளரத் தொடங்கியது. நாலாப்பக்கமும் அடுக்கு மாடி கட்டடங்கள் புதிதாக முளைத்தன. அதனால் எலிவேட்டர்களுக்கான ஆர்டர்கள் குவிந்தன.
ஹெய்க்கியின் பிசினஸ் திறமையால் பின்லாந்தின் எலிவேட்டர் சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து 1932ல் ‘கோன்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உயர்ந்தார் ஹெய்க்கி.
வெளிநாடுகளில் படித்த, வேலை பார்த்த அனுபவங்கள் அவருக்கு பல பிசினஸ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. பின்லாந்திலிருந்து முதன் முதலாக வெளிநாடுகளுக்கு எலிவேட்டர்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வளர்த்தெடுத்தார் ஹெய்க்கி.
முக்கிய நிகழ்வுகள்
1933ல் கிரேன் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் தயாரிப்பிலும் இறங்கியது ‘கோன்’.
1939ல் 3000வது எலிவேட்டரைத் தயாரித்தது. 1940ல் 200வது கிரேனை டெலிவரி செய்தது.
1945 முதல் 1952 வரை ரஷ்யாவிற்கு 108 எலிவேட்டர்களையும், 202 இண்டஸ்ட்ரியல் கிரேன்களையும் அனுப்பியது ‘கோன்’. இதற்குண்டான தொகையை பின்லாந்து அரசு ‘கோன்’ நிறுவனத்துக்குத் தந்தது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு 1950ல்தான் பின்லாந்தின் கட்டுமானத்துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்கள் மட்டுமல்லாமல் மக்களின் குடியிருப்புக்கும் எலிவேட்டர்களின் தேவை அதிகமானது. வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக எலிவேட்டர்களைத் திறக்கவும், மூடவும் தானியங்கி கதவுகளை அறிமுகம் செய்தது ‘கோன்’.
1958ல் ஹெய்க்கியின் மகன் பெக்கா ஹெர்லின், குடும்ப நிறுவனத்துக்குள் நுழைந்தார். 1964ல் தலைமைப் பொறுப்புக்கு வந்த பெக்கா, ஹைவின்கா நகரில் எலிவேட்டர் தயாரிக்க நவீனமான ஓர் ஆலையைத் திறந்தார்.
1967ல் வருடத்துக்கு 2000 எலிவேட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்தது ‘கோன்’.
1968ல் எலிவேட்டர் தயாரிப்பில் வடக்கு ஐரோப்பாவிலேயே தன்னிகரற்ற நிறுவனமாக பெயர் பெற்றது ‘கோன்’. அந்த வருடமே ஒன்பது நாடுகளில் கிளைகளைத் திறந்து எலிவேட்டர் தயாரிப்பு, சேவை, விற்பனையை ஆரம்பித்தது.
1977ல் எஸ்கலேட்டர்கள் தயாரிப்பில் கால்பதித்தது. அடுத்த வருடத்தில் எலெக்ட்ரிக் மோட்டார் தயாரிப்பதற்காக பிரத்யேகமான ஓர் ஆலையை ஹைவின்கா நகரில் திறந்தது. ‘கோன்’. 1986ல் சவுதி அரேபியாவின் அமைச்சகத்துக்குச் சொந்தமான கட்டடத்துக்கு எலிவேட்டர் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்க ஆர்டர் வந்தது. இதைத் தொடர்ந்து உலகின் முக்கியமான பல கட்டடங்களில் தனது தயாரிப்புகளைப் பதித்தது ‘கோன்’.
1996ல் எலிவேட்டர் இயங்குவதற்கான மோட்டாருக்கு என்று தனியறை தேவைப்படாத ‘மெஷின்ரூம்லெஸ்’ எலிவேட்டரை உலகுக்கு முதன் முதலாக அறிமுகம் செய்தது ‘கோன்’. 2001ல் வானளாவிய கட்டடங்களுக்குத் தேவையான எலிவேட்டர்களையும் தயாரிக்கத் தொடங்கியது.
2010ல் வருடத்துக்கு 60 ஆயிரம் எலிவேட்டர்கள், எஸ்கலேட்டர்களைத் தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்தது.
இன்று
பின்லாந்தின் தலைமையகமான ஹெல்சிங்கியில் தலைமையகம் இயங்கிவருகிறது. ஒவ்வொரு நாளும் 100 கோடிக்கும் அதிகமானோர் இந்நிறுவனத்தின் எலிவேட்டர்களையும், எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்துகின்றனர். 60க்கும் மேலான நாடுகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கிவருகிறது இந்நிறுவனம். நான்காம் தலைமுறையைச் சேர்ந்த அன்ட்டி ஹெர்லின் சேர்மனாக உள்ளார். கடந்த ஆண்டின் வருமானம் 84,164 கோடி ரூபாய்.
த.சக்திவேல்
|