எதிர்பார்ப்பது மட்டுமல்ல... எதிர்பார்க்காததும் அரண்மனை 3ல உண்டு



கதிகலங்க வைக்கும் பேய், கலர்ஃபுல் கவர்ச்சி கதாநாயகிகள், மாஸ் ஆக்‌ஷன், பிரம்மாண்ட அரண்மனை... இதோ பாகம் - 3 ட்ரீட்டுடன் சுந்தர்.சி ரெடி.
இந்த மூன்றாம் அரண்மனையில் என்ன ஸ்பெஷல்?‘‘‘அரண்மனை’ என்றாலே இதுதான் இருக்கும் என ஆடியன்ஸ் மனதில் ஒன்று இருக்கு. அதற்கான கலர்ஃபுல் விஷயங்கள் படத்தில் இல்லைன்னா ஏமாந்துடுவாங்க. அதேநேரம் முந்தைய பாகங்கள் போலவே எடுத்தா அது ஏமாற்றத்தைத் தரும்.

இதையெல்லாம் மனசுல வைச்சுதான் ‘அரண்மனை 3’ எடுத்திருக்கோம். முந்தைய பாகங்களை விட இந்த பார்ட் பிரம்மாண்டமா இருக்கும். மக்கள் எதிர்பார்ப்பது மட்டுமல்ல... எதிர்பார்க்காததும் இதுல உண்டு!  தொடர்ந்து ஒரு படத்தின் பாகங்கள் கொடுப்பதில் இருக்கும் சவால்கள் என்ன?

ஏகப்பட்ட சவால்கள் இருக்கறதாலதான் மூன்றாம் பாகம் வர்றதுக்கு கொரோனா இடைவெளியும் சேர்த்து மொத்தம் அஞ்சு வருஷம் ஆகியிருக்கு. பார்ட்தானேன்னு ஏதோ ஒரு கதையை எடுக்க முடியாது. அதிலும் நான் இந்தப் படத்தில் இயக்குநர், நடிகர், அப்புறம் தயாரிப்பாளர். பொறுப்பு அதிகம்.

உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?

என்னால் சமாளிக்க முடியாம வெறும் இயக்கம், தயாரிப்பு மட்டும் பார்த்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா, மொத்த படக்குழுவும் நான் நடிக்கணும்னு சொல்லிட்டாங்க. தட்டிக்கழிக்க முடியலை. ஒரு கார்டியன் மாதிரி இருந்து முடிச்சுகளை அவிழ்க்கும் பாத்திரத்துல இந்த பாகத்திலும் நடிச்சிருக்கேன்.

முதல் முறையா ஹாரர் படத்தில் ஆர்யா..?

முந்தைய பாகங்கள்ல ஹீரோயின்ஸ்தான் முக்கிய கேரக்டர்ஸ் செய்திருந்தாங்க. இந்தப் படத்துல ஹீரோவுக்குதான் முக்கியத்துவம்.  ‘சார்பட்டா பரம்பரை’ ஒரு பக்கம்... ‘அரண்மனை 3’ இன்னொரு பக்கம்னு ஆர்யா பம்பரமா சுழன்றார். டெடிகேஷன் அதிகம். உண்மையை சொல்லணும்னா ஆர்யாவுக்கு ஹாரர்னா பயம்! ‘ஹாரர் படமே பார்க்க மாட்டேன்... என்னை நடிக்க சொல்றீங்களே’ன்னு தயங்கினார்.

தைரியம் கொடுத்து நடிக்க வைச்சிருக்கோம். என்மேல நம்பிக்கை வைச்சு கதையே கேட்காம நடிக்க வந்தார். பிரமாதமா நடிச்சிருக்கார்.

உங்க அரண்மனைக் கிளிகள் பத்தி சொல்லுங்க..?

‘அரண்மனை’னாலே கலர்ஃபுல் கதாநாயகிகள்தானே! இந்த படத்துல நடிக்க ரெடியானு கேட்டதுமே ராஷி கண்ணா ஓகே சொல்லிட்டாங்க. இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு கலர்ஃபுல் கிளாமர் பாத்திரத்தில் அவங்க நடிச்சதே இல்லை.

முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் நாயகிகளுக்கும் முக்கியத்துவம் அதிகம். ஆண்ட்ரியாவுக்கு அரண்மனை பத்தி ஏற்கனவே தெரியும். முதல் பாகத்தில் இருந்து டிராவல் செய்யறாங்க. இதுல இம்பார்ட்டன்ட் ரோல் அவங்களுக்கு. முன்னேறத் துடிக்கும் சாக்‌ஷி அகர்வால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சின்சியரா செய்திருக்காங்க.

லிப்சிங்க் மிஸ் ஆகக் கூடாதுனு ராஷி கண்ணா உழைச்சிருக்காங்க. அவங்க கரியர்ல இந்தப் படம் முக்கிய மைல்கல்லா அமையும். அப்புறம் என்னோட எல்லாப் படங்கள்லயும் இருக்கற மாதிரி இதுலயும் திருவிழா கூட்டம் மாதிரி ஆர்ட்டிஸ்ட்ஸ் உண்டு! முந்தைய பாகங்களைக் காட்டிலும் இதுல கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகமா தெரியுதே?

ஆமா. முந்தைய பாகங்கள்ல அரண்மனை செட் போட்டோம். இதுல உண்மையான அரண்மனையை தேடிப்பிடிச்சு முக்கிய கதாபாத்திரமாக மாத்தியிருக்கோம். குஜராத் வேன்கனேர் பேலஸ் சும்மா மிரட்டலா இருக்கும்.நீங்க கேட்டமாதிரி இந்த பாகத்துல கிராஃபிக்ஸ் அதிகம்தான். ஹாரர் எலிமென்ட் இந்தப் பாகத்துல கொஞ்சம் தூக்கலா இருக்கும். மேலும் அரண்மனை ஸ்பெஷல் பிரம்மாண்ட அம்மனும் உண்டு.  நடிகர் விவேக்..?

நினைச்சுக்கூட பார்க்க முடியலை... ஆரோக்கியம் , ஃபிட்னஸ்னு எப்பவும் ஆர்வம் காட்டுகிற மனுஷன். குஜராத்தில் நாங்கள் ஷூட்டிங்குக்காக இருந்த வேளை கூட ஆர்யாவும் அவரும் தினமும் அதிகாலைல எழுந்து வாக்கிங் போவதை பார்த்திருக்கேன். படத்தில் ஒப்பந்தம் ஆகும்போது கனவில் கூட நினைச்சுப் பார்க்கல, இந்தப் படம் அவருக்கு கடைசி படமா இருக்கும்னு. கடந்து போகவே முடியாத பேரிழப்பு விவேக் சார்.ரெட் ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் கூட ‘அரண்மனை 3’… அந்த மேஜிக் குறித்து சொல்லுங்களேன்!

‘அரண்மனை 1’ ரிலீசானப்ப நான் வேற ஒரு ஷூட்டிங்ல இருந்தேன். என்ன ஆச்சுன்னு தெரியலை, ரிசல்ட் வரலை. அப்ப உதயநிதி ஸ்டாலின்தான் முதல் வார்த்தை சொன்னார் ‘படம் செம ஹிட்டு சார்...’னு. அதேபோல் இப்ப ‘அரண்மனை 3’ஐ முதன் முதலில் பார்த்தவரும் அவர்தான். பார்த்ததும் ‘படம் ரொம்ப நல்லா இருக்கு’னு சொல்லி ரிலீஸ் செய்ய முன்வந்தார். ‘அரண்மனை - 3’ பிரம்மாண்டத்தில் ரெட் ஜெயன்ட் சேரவும் டபுள் பிரம்மாண்டமா மாறி இருக்கு.

அரண்மனை அடுத்தடுத்த பாகங்கள் இருக்குமா?

‘அரண்மனை 4’ உண்டு. ‘அரண்மனை 3’ ஹிட் ஆகும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. நிச்சயம் இந்த பாகங்களை விட மாட்டேன்.

உங்களுக்கு சமமா குஷ்பூ ரொம்ப பிசியா இருக்காங்களே?

உண்மைய சொல்லணும்னா என்னை விட அவங்க அதிக பிசியா இருக்காங்க. இப்ப கூட ஷூட்டிங்கிற்காக ஆந்திராவில் இருக்காங்க. கொரோனா ஊரடங்கு காலத்திலே எல்லா வேலையும் நின்னுடுச்சு.

ஷூட்டிங் கிடையாது. குறைந்தபட்சம் ஆரோக்கியமாக இருக்கலாம்னு நானும் அவங்களும் சேர்ந்துதான் உடற்பயிற்சி, டயட் இதெல்லாம் ஸ்டார்ட் செய்தோம். நடுவில் நான் விட்டுட்டேன். ஆனா, அவங்க ரொம்ப ஸ்டிராங்கா ஃபாலோ செய்றாங்க. இப்ப நல்லா உடம்பு குறைச்சிட்டாங்க. அரசியல், சினிமா இப்படி ரெண்டிலேயும் மேடம் பிஸியோ பிஸி.

ஷாலினி நியூட்டன்