பெட்ரோல் பங்க்கில் பணிபுரிபவரின் மகள் ஐஐடியில் படிக்கிறார்!



கேரள மாநிலம் பையனூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்கில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா, நாட்டின் மிக உயரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான கான்பூர் ஐஐடியில் எம்.டெக் பிரிவில் சமீபத்தில் சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் காந்த் மாதவ் வைத்யா, ‘இந்தியன் ஆயிலின் வாடிக்கையாளர் உதவியாளர் ராஜகோபாலனின் மகள் ஆர்யாவின் எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்யா ஐஐடி கான்பூரில் நுழைவதன் மூலம் எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். ஆர்யாவுக்கு நல்வாழ்த்துக்கள்’ என டுவீட் செய்து உள்ளார்.

மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஐஐடியில் ஆர்யா தேர்வானது அவரது தந்தைக்கு மட்டுமில்லாமல், நாட்டின் ஆற்றல் துறை சார்ந்த அனைவருக்கும் பெருமை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.அனைவருமே பகிர்ந்தது ஒரு புகைப்படத்தை. அதுவே இன்று வைரலானதற்குக் காரணம்.

இந்த புகைப்படம் வெளியானது குறித்து ராஜகோபாலுக்கு அவ்வளவு பெருமை. “குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உதவியாளரின் மகள் கல்வியில் இவ்வளவு பெரிய முன்னேற்றங்களைப்பெற்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்.

இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக என் மகள் ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பிராந்திய மேலாளர் ஒருவர் கேட்டார். அது தான் இன்று நாடு முழுவதும் சென்றடைந்திருக்கிறது...” என்கிறார்.ஆர்யா படிப்பில் கெட்டிக்காரி என்பதற்கு சான்று உயர்நிலைப் பள்ளியில் 100%; மேல்நிலைப் பள்ளியில் 98%; காலிகட்டில் உள்ள புகழ்பெற்ற தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் CPI of 7.83; ஐஐடி கான்பூரில் - CPI of 8.33 என்ற மதிப்பெண்கள்.

“என் மனைவி ஒரு தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராகப் பணிபுரிகிறார். எங்கள் வருமானம் குறைவாக இருந்தாலும் மகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். ஆர்யாவும் கடினமாகப் படித்து, கல்வித்துறையில் பல்வேறு நிலைகளை தகுதி மூலம் பெற்றது எங்களுக்கு அதிர்ஷ்டம்.

அவளுக்கான ஹாஸ்டல் செலவுகள் மற்றும் அடிப்படைக் கட்டணங்களைப் பற்றி மட்டுமே எங்களுக்குக் கவலை. ஆர்யா மிகவும் கூச்ச சுபாவமுள்ள பெண். அவள் படிப்பு முடிந்த பின் இந்தியன் ஆயில் நிறுவனத்திலேயே உயர் பதவி பெற்றால் சிறப்பாக இருக்கும். ஆர்யாவிற்குக் கீழ் நான் பணிபுரிய வேண்டும் என விரும்புகிறேன்...” உணர்வு
பூர்வமாகச் சொல்கிறார் ராஜகோபால்.               

அன்னம் அரசு