நீரின்றி அமையாது உலகு...



9. மாமழையை வரவேற்போம்

நீலவானத்தை மறைத்து, சூழ்ந்து நிற்கும் கருமேகங்களில் இருந்து விழும் பூஞ்சாரல், மெல்ல மெல்ல வேகமெடுத்து, வெள்ளிக் கம்பிகளாய் மாறி, வைரத் துளிகளாய் மண்ணில் இறங்கும்போது பெரும் மாற்றங்கள் நிகழ்கின்றன.
காய்ந்த செடி, கொடிகள், மரங்கள் சில நாட்களில் பச்சை மேலாடையை போட்டுக்கொள்கின்றன. விதைக்குள் இருந்து விருட்சம் மெல்ல எட்டிப்பார்க்கிறது. மழை பெய்யாது பொய்த்துப்போனால் என்னவாகும் என்பதை திருவள்ளுவர் இரண்டே அடிகளில் மிக எளிதாக விளக்குகிறார்.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி.

அதாவது உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும் என்று கூறுகிறார்.தமிழகத்தில் இது பருவமழைக் காலம். தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை பொழியும் காலம். அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்கும்.
இந்த மழை தமிழகத்திற்கு சுமார் 47 சதவீத மழைப்பொழிவைத் தருகிறது. இந்தக் காலகட்டத்தில் தோன்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் புயல் காரணமாக மழைப்பொழிவு அதிகரிக்கும்.

பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பருவம் தவறாமல் வரும் பருவமழை எப்படி உருவாகிறது என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

மழை பெய்வதற்கும் சூரியன்தான் துணைபுரிகிறது. சூரியனின வெப்பம் காரணமாக கடல் நீர் ஆவியாகி மேலே செல்கிறது. ஆவியாகும் தண்ணீரின் எடை மிக மிகக் குறைவு. மேலே செல்லும் நீராவியானது மேகத் திரள்களை உண்டாக்குகிறது. சிறு சிறு நீர் மூலக்கூறுகள் ஒன்றாகி பெரும் மேகமாக மாறுகிறது. குளிர்ந்த சூழல் காரணமாக நீரானது மேகத்திலிருந்து விட்டு விடுதலையாகி மண்ணை நோக்கி பயணப்படுகிறது.

இப்படி உருவாகும் ஒவ்வொரு மழைத்துளியிலும் 10 லட்சம் நீர் மூலக்கூறுகள் உள்ளன. மண்ணைத் தொடும் மழைநீர் பூமிக்குள் இறங்குகிறது. நீர் நிலைகளை நிறைத்த பின், கடலுக்குள் சங்கமிக்கிறது.

அதே நேரத்தில் கடலிலும் மழைப்பொழிவு இருக்கும். மீண்டும் சூரிய வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி மேலே செல்கிறது, மழை மீண்டும் மண்ணில் பொழிகிறது. இது ஒரு சுழற்சி. இந்த சுழற்சியின்போது சத்தமில்லாமல் ஓர் அதிசயம் நிகழ்கிறது.

ஆம். கடல் நீர், நன்னீர் அல்ல. உப்பு நீர். வாயில் ஊற்றி சுவைத்தால் ‘உவ்வே’ என்று காரித்துப்பி விடுவோம். ஆனால், இந்த நீர்தான் ஆவியாகி மேலே சென்று நல்ல குடிநீராக நமக்கு கிடைக்கிறது. வெப்பத்தின் காரணமாக கடல் நீர் ஆவியாகும்போது அதிலிருக்கும் உப்பு, கடலில் தங்கிவிடுகிறது.

எடை குறைந்த ஆவியான நீரின் மூலக்கூறுகள் மேலே செல்கின்றன. அப்பொழுதே கடல்நீர் நன்னீராக மாறிவிடுகிறது. சரி. கடல் நீரில் எவ்வளவு உப்பு இருக்கிறது? ஒரு கிலோ கடல்நீரில் 35 கிராம் உப்பு இருக்கும். எனவே, கடல் நீர் நன்னீரை விட அதிக அடர்த்தியானது. கடல் நீரின் அடர்த்தி ஒரு மில்லி லிட்டருக்கு 1.025 கிராம். நன்னீரின் அடர்த்தி ஒரு மில்லி லிட்டருக்கு சராசரியாக 1.0 கிராம்.

கடல் நீர் அடர்த்தி மிகுந்தது. எனவே அது எளிதில் உறைந்துவிடாது. சாதாரண நீர் ஸீரோ டிகிரியில் உறைந்து பனிக் கட்டியாகிவிடும். அதுவே கடல் நீர் பனிக் கட்டியாக மாறுவதற்கு மைனஸ் 2 டிகிரி தேவை.ஒரு கனசதுர மைல் அளவுள்ள கடல் நீர் சுமார் 4.7 மில்லியன் டன் எடை கொண்டது. இதில் 166 மில்லியன் டன் எடை உப்பு உள்ளது (ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் - ஒரு டன் என்பது ஆயிரம் கிலோ).

இதில் 140 மில்லியன் டன் சோடியம், 25 மில்லியன் டன் மக்னீஸியம் மற்றும் தாது உப்புகள் உள்ளன. ஒரு கிலோகிராம் கடல்நீரில் 19.353 கிராம் குளோரைடு, 10.76 கிராம் சோடியம், 1.294 கிராம் மாங்கனிஸ் மற்றும் சிறிய அளவில் கால்சியம், பொட்டாசியம் பைகார்பனேட், புரோமைட், ஸ்ட்ராண்டியம், போரான், புரோமைடு, புளோரைடு என பல தாதுஉப்புகள் உள்ளன.

கடல் நீர் ஆவியாகும்போது இவை எல்லாம் கடல்நீரில் தங்கிவிடும்.நீர் மூலக்கூறுகள் அந்நியன் போல உருமாறக்கூடியவை. திரவமாக இருக்கும்போது V என்ற வடிவில் இருக்கும். ஐஸ்கட்டியாக திட நிலைக்கு மாறும் போது அறுகோண வடிவமெடுக்கும். வான் வெளியில் சிறு சிறு நீர்த் திவலைகளாக இருக்கும் போது கனசதுரமாகக் காணப்படும்.

இந்த மூன்று அவதாரம் தவிர உறைந்த நிலையில் நீர்மூலக்கூறு 16 வகையான படிக வடிவங்களை எடுக்கிறது. பனிக்கட்டியாக மாறும் தண்ணீர் அடர்த்தி குறைவாக இருக்க வேண்டும். இதனால்தான் ஒரு டம்ப்ளர் பழச்சாறில் ஐஸ் கியூப்ஸ் போடும்போது அது மிதக்கிறது.

குளிர்ப் பிரதேசங்களின் (ஆர்க்டிக், அண்டார்க்டிக்) மேல்பரப்பு ஐஸ்கட்டியாக இருக்கும். அடிப்பகுதியில் நிலவும் 4 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் நீராகவே இருக்கும்.அப்படியே நீரானது 100 டிகிரி சென்டிகிரேடில் வெப் பமாகும் போது நீர்மூலக்கூறுகள் காற்றில் ஆவியாகி கலக்கும். இதைத்தான் நீராவி என்கிறோம்.

இப்படி நீர் பல வடிவங்களை எடுத்து பல நன்மைகளை உயிரினங்களுக்கு மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க சமீபகாலமாக  எல்  நினோ, லா  நினா விளைவுகள் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விளைவுகள் எப்படி நமது கால நிலையை, குறிப்பாக மழைப் பொழிவைப் பாதிக்கின்றன?

கிழக்கு பசிபிக் கடலின் பெரு நாட்டை ஒட்டியுள்ள பகுதியில் கடல் வெப்பம் வழக்கத்தைவிட சற்றே அதிகரித்தால் அது எல் நினோ என்று அழைக்கப்படும். இது உருவானால் நமது தென்மேற்குப் பருவமழையின் அளவு குறையும். அதுவே கடலின் வெப்பம் வழக்கத்தைவிட குறையும் போது அது லா நினா என்று அழைக்கப்படும். இது நமக்கு அதிகபட்ச மழையை வாரி வழங்கும்.ஸ்பானிய மொழியில் ‘எல் நினோ’ என்றால் ‘சின்னப் பையன்’ என அர்த்தம். ‘லா நினா’ என்றால் ‘சின்னப் பெண்’ என அர்த்தம்.

இந்த சின்னப் பையன், சின்னப் பெண் என்ன  விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதைச் சற்று தெளிவாகப் புரிந்துகொள்வோம். ஓரிடத்தில் காற்று வெப்பமடையும்போது அது விரிவடையும். விரிவடைந்தால் அது எடை குறைந்து மேல் எழும்பும். இதனால் முன்பு காற்று இருந்த இடம் வெற்றிடமாக மாறும்.

இந்த வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு இடத்திலிருந்து காற்று நகர்ந்து வரும்.ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளடக்கிய மேற்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் வெப்பமானது அதே நேரத்தில் ஈரம் குறைந்த காற்றழுத்தப் பகுதியாகிறது. இங்கு கடலின் மேற்பரப்பில் நீரானது வெப்பமாக காணப்படும். இந்த வெப்பம் கடலுக்கு மேலிருக்கும் காற்றைச் சூடாக்கும். அதனால் நீராவி உருவாகி காற்றுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது.

இக்காற்று மேலெழும்பிச் சென்று மழை மேகமாக மாறும். இது மழையாகப் பொழிந்த பின் வறண்ட காற்று வளிமண்டல மேலடுக்கில் உயர் அழுத்தமாக மாறி கிழக்கு நோக்கிச் செல்லும்.

அதே சமயம் பெரு நாட்டின் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பகுதி வறண்ட குளிரான உயர் அழுத்தப் பகுதியாக இருக்கும். இது கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் ஓர் அழுத்தச் சரிவை உண்டாக்கி கடலின் மேற்பரப்பின் காற்றை கிழக்கிலிருந்து மேற்காக வீசச் செய்யும்.

இந்நிலையில் மேற்கு பசிபிக் மண்டலப் பகுதிகளிலிருந்து வந்து சேரும் வறண்ட காற்று, இங்கு குளிர்ச்சி யடைந்து, அங்கு நிலவும் அழுத்தச் சரிவின் காரணமாக மீண்டும் மேற்கு நோக்கிப் பயணிக்கிறது. அதாவது ஒரு சுழற்சி வட்டத்தை முழுமையாக்குகிறது. இந்த சுழற்சிதான் உலகம் முழுக்க - குறிப்பாக தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் மழைப்பொழிவில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்த நிகழ்வு தலைகீழாக மாறும் போது ‘எல் நினோ’ ஏற்படுகிறது. அப்போது குளிரான கிழக்கு பசிபிக் மண்டலம் வெப்பமாக மாறும். இது உலகம் முழுதும் வழக்கத்திற்கு மாறாக பெருமழை அல்லது கடும் வறட்சியை உருவாக்கும்.  

இப்படியாக ஒவ்வொரு 7 ஆண்டுகளுக்கும் ஒருமுறை எல் நினோ நிகழ்வு நடைபெறும் என விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். மொத்தத்தில் நீர், வெப்பம், காற்று என்ற கலவைதான் மழை.

வானிலை அறிக்கையைக் கேட்டிருப்பீர்கள். தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்... ஏனைய மாவட்டங்களில் இடிமின்னலு டன் கூடிய மிதமான மழையும் பெய்யக்
கூடும்... என அறிவிப்பார்கள்.

 இந்த அறிவிப்புகள் முன்பு பொய்யானது உண்டு. ஆனால், இப்போது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் உதவியுடன் மிகத் துல்லியமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் எந்த எந்த இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதை வானிலை நிலையம் கூறி வருகிறது.அறிவியலின் துணைகொண்டு செயற்கை மழையை உருவாக்கும் முயற்சி களும் ஒருபக்கம் நடைபெறுகின்றன.

மேக விதைப்பு என்ற பெயரில் மேகக் கூட்டங்களில் சில்வர்அயோடைடு அல்லது ஈய அயோடைடு என்ற வேதிப்பொருளைச் செலுத்தி மழைப் பொழிவை உருவாக்குகின்றனர்.
இந்தத் தொழில்நுட்பத்தை அமெரிக்காவும், சீனாவும் அதிகளவில் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் 1984 - 87, 1993 - 94 ஆகிய ஆண்டுகளில் செயற்கை மழைப் பொழிவு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், அது எதிர்பார்த்த பலன்களை வழங்கவில்லை.

இயற்கையாக காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம் உள்ளிட்ட சில காரணிகளால் செயற்கை மழை என்பது அவ்வளவாக சாத்தியமாகவில்லை என்பதே உண்மை.இப்படி பல கட்டங்களைத் தாண்டி, இயற்கையின் மாற்றங்களுக்கு உட்பட்டு பெய்யும் மாமழையை மண் பயனுற இரு கைகூப்பி வரவேற்போம்.

(தொடரும்)

- பா.ஸ்ரீகுமார்