வியட்நாம் மாரியம்மன்!



தமிழகம் - சீனா இடையிலான உறவு 3,000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது சைகோன் நகரில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்.
கம்யூனிஸ்ட் நாடாக இருந்தும் சந்தை சீர்திருத்தங்களை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டதால் கடந்த சில ஆண்டுகளாகவே தெற்கு வியட்நாமில் வளர்ந்து வரும் பெரு நகரமாக சைகோன் இருக்கிறது. அதீத வளர்ச்சியின் காரணமாக பழைய கட்டடங்கள் எல்லாம் அகற்றப்பட்டு வானளாவிய பல புதிய கட்டடங்கள் உருவானாலும், நகரின் மையப் பகுதில் உள்ள மாரியம்மன் கோயில் மட்டும் வரலாற்றுச் சின்னமாக நிலை பெற்றுள்ளது.

12 மீட்டர் உயர ராஜகோபுரம் கொண்ட இந்த கோயில் 19ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. தினசரி பூஜைகள் நடைபெற்று வரும் இக்கோயிலுக்கு வருவதால் நோய்கள் குணமாவதாகவும் செல்வச் செழிப்பு ஏற்படுவதாகவும் அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். 
சீனாவிற்கும் தமிழகத்திற்கும் பல நூற்றாண்டுகளாக கலாசாரம் மற்றும் வர்த்தக உறவுகள் இருந்தாலும், 1860களில் பிரெஞ்சுப் படையெடுப்பின் போது வியட்நாமில் தமிழ்ச் சமூகம் இல்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய -
தமிழக பிரெஞ்சுக் காலனியில் இருந்த காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியில் இருந்து அரசு வேலைகளுக்காக தமிழர்கள் வியட்நாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
 
பிரெஞ்சு நடுத்தரப் பள்ளியில் படித்தவர்கள் நிர்வாகிகள், எழுத்தர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகளாக அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். நகரத்தார் என்று அழைக்கப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் சைகோன் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் கடைகள் அமைத்து லாபகரமான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர். இவர்களோடு தமிழ் முஸ்லிம்களும் வர்த்தகத்திற்குள் வந்தனர். இது இந்தோசீனாவில் உள்ள பிரெஞ்சுக் காலனிகள் முழுவதும் பரவியது.

இவ்வாறு தமிழர்கள் வியட்நாமில் பரவலாகக் குடியிருந்த நிலையில் 1880களின் முற்பகுதியில் சைகோனில் தமிழர் ஒருவர் ஒரு சிறிய வீட்டைக் கட்டி அதில் மாரியம்மன் சிலை ஒன்றை வைத்துள்ளார்.

அந்த அறை நகரத்தாருக்கான தற்காலிக கோயிலாக மாறியது. அதை முழுவடிவமான கோயிலாக மாற்ற நிதி வசூலிக்கப்பட்டது. போதுமான நிதி கிடைத்ததும் தமிழக பாணியில் கோயிலைக் கட்டுவதற்காக கைவினைஞர்கள், சிற்பிகள், தொழிலாளர்களை பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த மெட்ராஸ் பிரசிடென்சியிலிருந்து அழைத்து வந்துள்ளனர்.   
   
அவ்வாறு கட்டப்பட்ட கோயில் தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து சமூக, நாடு, மத மக்கள் மத்தியிலும் பிரபலமானது. விளைவு, தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழாக்கள் போலவே இப்போது அம்மனை சிம்ம வாகனத்தில் அமர வைத்து ஊர்வலமாக சைகோன் நகரைச் சுற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் எப்படி கோயில்களுக்கு வெளியே பூஜைப்பொருட் களுக்காக கடைகள் அமைக்கப்பட்டிருக்கிறதோ அதேபோல் அங்கும் உள்ளூர் வியாபாரிகள் அப்படி கடைகளை நடத்துகின்றனர். அங்கு மல்லிகை மாலைகள், அல்லிப் பூ, அரிசி, நூடுல்ஸ், பச்சைப் பயறு, தேங்காய், பல்வேறு எண்ணெய்கள் என பூஜைக்கு வழங்குவது வியட்நாமியர்கள் மத்தியில் இப்போதும் பாரம்பரியமாக உள்ளது.  

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் வியட்நாமைக் கைப்பற்றி சீனாவைத் தாக்க தளமாகப் பயன்படுத்தினர். நீண்ட நாட்கள் நீடித்த போரின் இறுதியில் பிரெஞ்ச் தோல்வியைச் சந்தித்தது. இதனால் 1954ஆம் ஆண்டு பிரான்ஸ், இந்தோசீன தீபகற்பத்தில் உள்ள அனைத்து பிராந்திய உரிமைகளையும் கைவிட்டது. அந்த நேரத்தில் வடக்கு வியட்நாம்,  தெற்கு வியட்நாம் என கம்யூனிஸ்ட்டால் பிரிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது.  

பிரெஞ்சுக்காரர்கள் நிரந்தரமாக வெளியேறிய போதிலும், நகரத்தார் மற்றும் முஸ்லீம் சமூகங்கள் தெற்கு வியட்நாமில் தங்கியிருந்தனர். வியட்நாம் யுத்தத்தின் போதும் கோயில் இயல்பாக இயங்கியது. பின்னர் வடக்கு - தெற்கு வியட்நாம் இணைந்து ஒரே நாடானது. இதனையடுத்து சைகோனில் இருந்த தமிழர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறினர்.
வியட்நாமின் புதிய அரசாங்கம் கோயில் நிர்வாகத்தை மக்கள் குழுவிடம் ஒப்படைத்ததோடு, பூசாரிகளுக்கு நேரடியாக பணம் செலுத்துவதையும் தடை செய்தது. பக்தர்கள் கொடுக்கும் பணம் கோயில் பராமரிப்புக்கானது.

கடைசியாக எஞ்சியிருந்த தமிழ் பூசாரி இரண்டு கெமர் சிறுவர்களை தத்தெடுத்து இந்து சடங்குகளைக்கற்பித்தார். இப்போது அந்த கெமர் சிறுவர்கள் வழியே வந்தவர்கள்தான் அங்கு பூசாரிகளாக உள்ளனர். 1990களின் நடுப்பகுதியிலிருந்து தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நகரத்தார், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள பணக்காரத் தமிழர்கள் நிதிப் பங்களிப்பில் தாராளமாக இருந்தனர்.

அவ்வாறு வந்த நிதியினை பயன்படுத்தி இந்த மாரியம்மன் கோயில் மூலமாக சைகோனின் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து உணவளிக்கப்பட்டு வருகிறது.  வியட்நாமில் அதிக பொருளாதார வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இந்த இரு பகுதிகளுக்கு இடையே உள்ள பழமையான இணைப்புகளைப் புதுப்பிக்க இந்த மாரியம்மன் கோயில் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

அன்னம் அரசு