யார் இந்த சமீர் வான்கடே?



நடிகர் ஷாருக்கான் மகனைக் கைது செய்த விவகாரத்தில் அதிரடி காட்டியவர் மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. போதைப்பொருள் மாஃபியாக்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய பாலிவுட் புள்ளிகளுக்கும் சிம்ம சொப்பனமாக மாஸ் காட்டி வரும் இந்த சமீர் யார்?கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் இருந்தே பாலிவுட்டின் கருப்புப் பக்கங்கள் குறித்து அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. அப்போதெல்லாம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிடும் பெயரும் சமீர் வான்கடேதான்.

சமீர் வான்கடே போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி), மும்பை மண்டல இயக்குநர். கடந்த ஆண்டு நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் நிலவி வரும் போதைக் கலாசாரத்தை ஒழிப்பதில் சமீரும் அவரது குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இந்தக் குழுதான் சமீபத்தில் மும்பை வட்டாரங்களில் பாலிவுட்டைக் குறிவைத்து நடத்திய ரெய்டுகளுக்கு முதன்மையான காரணம்.

சுஷாந்த் வழக்கு தொடர்பாக சமீரின் குழு பல பாலிவுட் நடிகர்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆளுமைகளை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தது. இதே சமீர்தான் நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் அவரின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். அப்போது இருந்தே லைம் லைட்டில் இருந்தவர், இப்போது ஆர்யன் கான் கைதுக்குப் பிறகு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.

40 வயதான சமீர் வான்கடே 2008 பேட்ச், வருவாய் சேவை (ஐஆர்எஸ்) அதிகாரி. தனது முதல் பணியாக, மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக இணைந்தார். 2008 முதல் 2020 வரை, அவர் விமானப் புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் (AIU), தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) இணை ஆணையர் என பதவி வகித்துவிட்டு இதோ இப்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் மும்பை மண்டல இயக்குநராக இருக்கிறார்.

நேர்மை மிகுந்த அதிகாரியாக ஐஆர்எஸ் வட்டாரத்தில் அறியப்படும் சமீர், வருவாய் அதிகாரியாக இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விஐபிகள் மீது வரி செலுத்தாததற்காக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து சுங்கவரி செலுத்தாமல், பொருட்களை, வெளிநாட்டுக் கரன்சியைக் கொண்டுவரும் விஐபிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்ததால் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றியபோது நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதித்துள்ளார். 2013ல் பிரபல பாப் பாடகர் மிகா சிங்கை மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டுக் கரன்சிகளுடன் சமீர் பிடித்ததை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இதேபோல், ஐசிசி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தவும் செய்தார். தங்கத்தால் ஆன உலகக் கோப்பைக்கு மும்பை விமான நிலையத்தில் சுங்கக் கட்டணம் செலுத்தப்படாமல் கொண்டுவரப்பட்டதால், அதனை அதிரடியாகத் தடுத்து நிறுத்தி சுங்கக் கட்டணம் செலுத்திய பிறகே விடுவித்தார். சுங்கத்துறையில் பணியாற்றும்போது, ராம் கோபால் வர்மா மற்றும் அனுராக் காஷ்யப் உட்பட பல பிரபலங்கள் விமான நிலையம் மூலம் கொண்டு வந்த பொருட்களுக்கும் சமீர் அனுமதி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகள் முன்புதான் சமீர் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இணைந்தார். சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் இவர் தலைமையிலான குழு, ரூ.17,000 கோடி மதிப்புள்ள போதைப்
பொருள்களைக் கைப்பற்றியுள்ளது. 50க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சப்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு சுஷாந்த் சிங் வழக்கு இவரிடம் வந்தது. அந்த நொடி முதல் பாலிவுட்டைச் சுற்றி இயங்கும் போதைப்பொருள் மாஃபியாவை இலக்காகக் கொண்டு சமீரின் குழு செயல்பட்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளுக்காக சமீர் மற்றும் அவரின் குழுவினர் கடந்த நவம்பரில் மும்பை கோரேகாவனில் போதைப்பொருள் விற்பனையாளர்களின் தாக்குதல்களை எதிர்கொண்டனர்.
அதுபோலவே ஒரு பிரபல போதைப்பொருள் விற்பனையாளரைக் கைது செய்ய இவர் சென்றபோது 60 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டார். இதனால் எல்லாம் சமீர் துவளவில்லை. சொல்லப்போனால் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகுதான் முழுவீச்சில் போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்த முயன்று வருகிறார்.

பாலிவுட்டை மையம் கொண்டு செயல்பட்டு வரும் சமீருக்கும் இந்தித் திரையுலகுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது!யெஸ். இந்தி சினிமாவின் மிகத் தீவிரமான ரசிகரான சமீர் கரம் பிடித்திருப்பது ஒரு பாலிவுட் நடிகையைத்தான். அஜய் தேவ்கன் நடிப்பில் 2003ல் வெளியான ‘கங்காஜல்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமான கிராந்தி ரெட்கரைத்தான் சமீர் திருமணம் செய்துள்ளார். பாலிவுட் தொழில்துறையின் மீது சமீருக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. போதைப்பொருள் மாஃபியாவுடன் தொடர்புள்ளவர்களுக்கு மட்டுமே இவர் வில்லன். அதனாலேயே மக்கள் இவரை மாஸ் ஹீரோவாகக் கொண்டாடுகிறார்கள்!

ஜான்சி