கில்ட்டி



கடந்த சில வருடங்களாக மீடூ (#metoo) ஹேஷ்டேக் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீடூ ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கான நீதியைத் தேடி வருகின்றனர். சில நேரங்களில் இதில் சில குளறுபடிகளும் அரங்கேறுகின்றன. இந்த ஹேஷ்டேக்கை மையமாக வைத்து ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘கில்ட்டி’.
அரசியல்வாதி மற்றும் பிசினஸ்மேனின் மகன் விஜே. அவனுடைய காதலி நான்கி. இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.

கல்லூரியில் புதிதாகச் சேர்கிறாள் தனு குமார். ஆரம்பத்திலிருந்தே தனுவுக்கும், நான்கிக்கும் இடையே பிரச்னை. நான்கியை வெறுப்பேற்ற விஜேவுடன் நெருங்குகிறாள் தனு.
இந்நிலையில் காதலர் தினம் வருகிறது. மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விருந்து வைத்து காதலர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.

அடுத்த நாள் விஜே தன்னை வன்புணர்வு செய்துவிட்டான் என்று மீடூ ஹேஷ்டேக்கில் ஒரு பதிவைப்போட்டு டுவிட்டரில் பகிர்கிறாள் தனு. உண்மையில் என்ன நடந்தது என்பதை நான்கி  எப்படி கண்டு பிடிக்கிறாள் என்பதே திரைக்கதை. மீடூவின் முக்கியத்துவத்தை இப்படம் சுட்டிக்காட்டுகிறது. கதாபாத்திரங்களின் தேர்வு அருமை. படத்தின் இயக்குநர் ருச்சி நரைன்.