தமிழ்ப் படங்களில் ஒலித்த ஆண்மை கலந்த ஆங்கிலக்குரல்!



தமிழ் சினிமாவில் கிக் ஏற்றும் பாடல்கள் பாடுவதென்றால் பழைய படங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலையும், அதன் பின் எஸ்.ஜானகியின் குரலையும்தான் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினார்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், தமிழ் சினிமாவில் அதிக கிளப் டான்ஸ் பாடல்களைப் பாடியவர் யார் தெரியுமா?
சங்கீத ராணி வாணி ஜெயராம்தான்.

ஸ்வர சுத்தமாக பாடக்கூடிய இவரை, சங்கர்- கணேஷ் இரட்டையர்கள் பல படங்களில் இப்படியான கிளப் டான்ஸ் பாடல்களைப் பாட வைத்துள்ளனர்.
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் ஆங்கிலக் கலப்பென்பது 50 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. சுதந்திரத்திற்கு முந்தைய படங்களில் இருந்தே ஆங்கில வார்த்தைகளை தமிழ்ப் பாடல்களில் பல பாடலாசிரியர்கள் பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால், தமிழ் சினிமாவில் முழுமையாக ஆங்கிலப் பாடல்களைப் பாடுவதற்கு ஒரு குரலை அனைத்து இசையமைப்பாளர்களும் தேர்வு செய்தனர். ஆண்மை கலந்த அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் பெயர் உஷா உதுப். 1947ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிறந்தவர் உஷா உதுப். இவரது தந்தை மும்பை நகர போலீஸ் கமிஷனராக இருந்தவர். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
மும்பையில் படிக்கும்போதே பாடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்ட உஷாவின் குரல், பாடுவதற்கு லாயக்கில்லையென்று இசை வகுப்பு ஆசிரியரால் வெளியேற்றப்பட்டார். ஆனாலும், உஷா பாடல் மீது கொண்ட காதலைக்  கண்ட ஆசிரியர், அவருக்கு இசைப்பயிற்சியோடு இசைக்கருவிகளையும் வாசிக்க கற்றுத் தந்தார்.

இதனால் இந்துஸ்தானி, கர்நாடக இசையை உஷாவிற்கு அவரது பெற்றோர் அறிமுகப்படுத்தினர். ஆனால், தனக்குள் ஒரு ஸ்டைலை உஷா கண்டறிந்தார். பாடிப்பறந்த இசைப்பறவையென அவர் சென்னைக்கு 1969ம் ஆண்டு இடம் பெயர்ந்தார். அங்கு ஒரு நைட் கிளப்பில் மாதச்சம்பளத்தில் பாட ஆரம்பித்தார்.

அவரின் கனத்த குரலில் இருந்து வெளிப்பட்ட கிறக்கம் கேட்போரைத் திக்குமுக்காட வைத்தது. ஆங்கில ஜாஸ் பாடலை சேலை கட்டிய மாது வித்தியாசமான ஸ்டைலில் பாடியது அந்தக் காலத்தில் புதுமையாக இருந்தது. இதன் காரணமாக உஷாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. இதன்பின் கொல்கொத்தா என ஒவ்வொரு கிளப்பாக உஷா பாடிக் கொண்டிருந்தார்.

இப்படித்தான் தில்லி ஒபேரா ஹோட்டலில் இவர் பாடிய பாடலைக் கேட்ட தேவ் ஆனந்த் மூலம் 1970ம் ஆண்டு சசி கபூர் நடித்த ‘பாம்பே டாக்கி’ படத்தில்  ஜெய் - கிஷன் இசையில் ஒரு பாடலைப் பாடினார். இதன் பின் தேவ் ஆனந்த் நடித்த ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் உஷாவை ஆங்கிலம், இந்தி என இரு மொழிகளில் அற்புதமான பாடலை இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் பாட வைத்தார்.

‘ஐ லவ் யூ...’ என உஷா துவக்கும் இப்பாடலில் பின் அவருடன் இணைபவர் ஆஷா போஸ்லே. இப்பாடலில்தான் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...’ என்ற உஷாவின் குரல் இந்தியா முழுவதும் அவரது புகழை எடுத்துச் சென்றது. அவர் பாடும் ஸ்டைலே அலாதியான சந்தோஷத்தை கேட்போருக்கு ஏற்படுத்தியது.1971ம் ஆண்டு ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் ஆர்.டி.பர்மன் இசையில் உஷா ஐயர் என்ற பெயரில் பாடகியாக அவர் வெளிப்பட்டார். முதலில் ராமு ஐயரைத் திருமணம் செய்து பின் விவாகரத்தானது. பின் உதுப்பை உஷா திருமணம் செய்து கொண்டார்.

1972ம் ஆண்டு மெகமூத், அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ‘பாம்பே டூ கோவா’ படத்தில் ஒரு கிளப் பாடலை உஷா பாடுவார். பாடலின் போது அறிவிப்பாளர், உஷா ஐயர் பாடுவார் என்றே அறிவிப்பார். ‘லிஸின் டூ த போரிங் ரெயின்...’ எனத்துவங்கும் பாடலை வெள்ளைச்சேலை அணிந்த தேவதையைப் போன்று மேடையில் தோன்றி உஷா பாடுவார்.
1978ம் ஆண்டு தர்மேந்திரா, ஜீனத் அமன் நடிப்பில் வெளியான ‘ஷாலிமார்’ படத்தில் ஆர்.டி.பர்மன் இசையில் உஷா பாடினார். அருணா இரானி ஆடும் ‘ஒன் டூ சச்சா...’ என்ற அந்தப் பாடல், எம்ஜிஆர் நடித்த ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் இடம் பெற்ற, ‘அன்று வந்ததும் இதே நிலா... சச்சா...’ பாடலை ஞாபகமூட்டும்.

1980ம் ஆண்டு ரமேஷ் சிப்பி இயக்கத்தில் சுனில் தத், சாக்சி கபூர், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘ஷான்’ படத்தில்  டைட்டில் பாடலை உஷா உதுப் பாடினார். ‘தோஸ்தே தோஸ்தே பியார் கியா...’ என்ற அந்தப் பாடலில் திரையில் மிளிரும் நடிகையின் அங்கங்களில் நம் பார்வை படியாது. மாறாக, ஒலிக்கும் உஷா உதுப்பின் குரலில் மெய்மறந்திருப்போம்.
இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனைப் போலவே உஷா உதுப்பிற்கு பல அற்புதமான பாடல்களைப் பாடும் வாய்ப்பை பப்பி-லஹரி இரட்டையர்கள் வழங்கினர்.

1980ம் ஆண்டு மிதுன் சக்கரவர்த்தி, காஜல் கிரண் நடிப்பில் வெளியான ‘வார்தாத்’ படத்தில் அப்படத்தின் இசையமைப்பாளர்கள் பப்பி-லஹரியுடன் இணைந்து உஷா உதுப் பாடினார். ‘தூ முஜி ஷான்ஜீ பி பியாராஹே...’ என்ற அற்புதமான ரொமாண்டிக் பாடலிது. இப்பாடலில் பப்பி-லஹரியின் இசை, தொட்டிலைப் போல கேட்போரின் மனதை ஆட வைக்கும். அதற்கு ஒத்திசைவாக பப்பி-லஹரியின் குரலும் சேர்ந்துகொண்டால் சொல்லவா வேண்டும்?

அதே ஆண்டு ஆனந்த் சாகர் இயக்கத்தில் அம்ஜத்கான், ராகேஷ் ரோஷன் நடிப்பில் வெளியான படம் ‘பியாரா துஷ்மன்’. ‘ஹரி ஓம் ஹரி ஹரி ஓம் ஹரி ஹரி ஓம் ஹரி...’ என்ற பாடலை எனர்ஜியுடன் உஷா உதுப் பாடியிருப்பார். கிளப்பில் இடம் பெற்ற இப்பாடலுக்கு ஆடுபவர் கல்பனா ஐயர். ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் ரஜினிகாந்துடன் ‘வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள...’ பாடலுக்கு ஆடியவர்தான் இவர்.

1981ம் ஆண்டு பப்பி- லஹரி இசையில் ‘அர்மான்’ படத்திற்காக உஷா உதுப் பாடினார். ராஜ்கபூர், சக்தி கபூர், ஷம்மி கபூர் நடித்த இப்படத்தில் ‘ரம்பா ஹோ சம்பா ஹோ ரம்பா ஹோ சம்பா ஹோ...’ என்ற பாடலை உஷா உதுப் பாடியுள்ளார்.

‘ஹோ’ என்ற சொல் எதிரொலிக்கும் வகையில் அவர் பாடும் ஸ்டைல், இந்தி ரசிகர்கள் மத்தியில்  நீண்ட காலம் எதிரொலித்தது. இப்பாடலில் ஒலிக்கும் இசை பின்னாளில் பப்பி-லஹரி யின் புகழ்பெற்ற பல பாடல்களுக்கு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ‘கோயா ஹா நாச்சி  நாச்சி...’ என்ற புகழ் பெற்ற பாடலை ‘டிஸ்கோ டான்ஸர்’ படத்திற்காக பப்பி-லஹரி மற்றும் குழுவினருடன் இணைந்து உஷா பாடி பட்டையைக் கிளப்பியிருப்பார். அந்நாளில் இப்பாடல் ஒலிக்காத இடமில்லை. இதே படம்தான் தமிழில் ‘பாடும் வானம்பாடி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.  

இந்தி, மலையாள மொழிகளில் பாடிக் கொண்டிருந்த உஷா உதுப்பை 1975ம் ஆண்டு ‘மேல்நாட்டு மருமகள்’ மூலம் தமிழில் இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்திய
நாதன் அறிமுகப்படுத்தினார். இப்படத்தில் உஷா உதுப் தோன்றி ‘லவ் இஸ் பியூட்டிஃபுல்...’ எனத் துவங்கும் பாடலைப் பாடியுள்ளார். தனது வழக்கமான சேலை காஸ்டியூமோடுதான் படத்தில் தோன்றி உஷா பாடியிருப்பார். பத்மஸ்ரீ, ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்ற உஷா உதுப் குரலில் ஒலித்த பாப் மற்றும் ஜாஸ் இசை தமிழில் அவரது ஸ்டைலில் பாடுவதற்கான வாய்ப்பையே பல படங்களுக்குப் பெற்றுத் தந்தது.1975ம் ஆண்டு எம்ஜிஆர், ராதாசலூஜா நடித்த ‘இதயக்கனி’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘ஹலோ லவர் மிஸ்டர் லைன்...’  என்ற ஆங்கிலப் பாடலை உஷா உதுப் பாடினார். இப்பாடலை எழுதியவர் ராண்டார் கை.

1976ம் ஆண்டு சிவகுமார், அல்ஹா நடிப்பில் வெளியான ‘மதன மாளிகை’ படத்தில் எம்.பி.சீனிவாசன் இசையில் ‘மல்லிகைப்பூ...’ என்ற அழகான பாடலை தமிழ், ஆங்கிலத்தில் கலந்து கட்டி அடித்திருப்பார் உஷா உதுப். தமிழில் சில படங்களில் இசையமைத்தாலும் தனித்த அடையாளமாய்த் திகழ்ந்த எம்.பி.சீனிவாசனின் இசையில் புகழ்பெற்ற பாடல்கள் இடம் பெற்ற படமிது. தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை உஷா பாடியுள்ளார்.

1990ம் ஆண்டு ‘ரோடி கி ஹீமத்’ படத்தில் பப்பி-லஹரி இசையில் ‘ஆக்கு சே பீசே பீலே’ பாடலை யாருக்குத் தெரியுமா உஷா பாடியிருப்பார்? பெண் வேடமேற்ற மிதுன்சக்கரவர்த்திக்குத்தான்.
1987ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் சுரேஷ், நதியா நடிப்பில் வெளியான ‘இனிய உறவு பூத்தது’ படத்தில் இசைஞானி இசையில் உஷா உதுப், எஸ்.ஜானகியோடு இணைந்து ‘சிக்கென்ற ஆடையில் சிட்டுக்கள்...’ என்ற பாடலைப் பாடியுள்ளார். பாடலை எழுதியவர் காவியக் கவிஞர் வாலி.

1990ம் ஆண்டு கார்த்திக், சித்தாரா நடிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான படம் ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’. இப்படத்தில் இசைஞானி இசையில் ‘ராத்திரியில் தூக்கம் இல்லை  ராகத்திற்கு தாளமில்லை...’என்ற பாடலையும்; மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ படத்தில் இடம் பெற்ற -

வேகம் வேகம்
போகும் போகும்
மேஜிக் ஜர்னி
போவோம்
போவோம்
தூரம் தூரம்
மேஜிக் ஜர்னி...

என்ற கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அழகிய பாடலையும் இசைஞானி இசையில் குழுவினருடனும் இணைந்து உஷா உதுப் அற்புதமாகப் பாடியுள்ளார்.
கமல்ஹாசனின் நெருங்கிய தோழியான உஷா உதுப், ‘மன்மதன் அம்பு’ படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் வசித்தாலும் தமிழகத்தில்  குழந்தைகளின் இசை ஆர்வத்தைத் தூண்டும் இசைநிகழ்ச்சிகளில் பெரிய பொட்டு, கைகள் நிறைய வளையல்கள், இதழ்
களில் தவழும் புன்னகை என அசல் தமிழ்ப் பெண்ணாய் காட்சி தரும் உஷாவின் உணர்வு பூர்வமான பாட்டுப்பயணம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கொண்டிருப்பது மிகப்பெரிய சாதனை.                 

ப.கவிதா குமார்