வலைப்பேச்சு



@Ram Vasanth - ‘‘அன்பு மகனின் அருமைக் காதலிக்கு...எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அவரோடு அலை பேசுங்கள்... அழைப்பை ஏற்காது அவர் தன் கடமை தவறும் பட்சத்தில் குறுஞ்செய்தி தாருங்கள். விடுமுறைதினக் காலையில் அவர் தம்பிக்கு... அவனுறங்க அவர் அன்னைக்கு... அவளுமுறங்க என் அலைக்கு அழைப்பு விடுத்து... மன்னிக்கவும், அலறல் விடுத்து... ‘ஃபோனை எடுக்க மாட்டேங்கிறான், இன்னுமா தூங்கறான்..?’ என்றெம்மைக் கடிவது கிஞ்சித்தும் அறமன்று.பொறுப்போடுதான் வளர்க்கிறோம் தாயே! குளித்துக் கொண்டிருக்கிறார்.’’

@சசி தரணி - என்னய்யா, ஒரு பொண்ணு தன்னோட அம்மாக்கு பர்த்டேனு போஸ்ட்  போட்டா ‘ரத்தினத்தை பெத்த அத்தைக்கு வாழ்த்துக்கள்’னு எல்லாம் கமெண்ட் போடறீங்க...

@mymindvoice - எனக்கு நீங்க முக்கியம்... அன்பா இருக்கறேன்... அக்கறை காட்டறேன்றதோட ஏன் நிறுத்த மாட்றோம்?
உங்களுக்கு நான் முக்கியமா? என்னைவிட யாராவது முக்கியமா? பதிலுக்கு அன்பு இருக்கா? சமமான அன்பா? கம்மியா? கடைசி வரைக்கும் இருக்குமான்னு ஏன் எதிர்பார்ப்பு பதற்றங்களை வளர்த்துக்கறோம்?

@Kannan_Twitz -
சந்தோஷமா இருக்கிறத விட சந்தோஷமா இருக்குற மாதிரி காட்டிக்கத்தான் அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கு! ஆமா, நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்!

@Erode Kathir - யாரோ ஒருவரின் சாயலில் நனைந்துலர்ந்த பிறகுதான் பலருக்கும் தனக்கான சாயல் உருவாகிறது.

@இந்திரா கிறுக்கல்கள் - ‘‘என்ன செஞ்சும் உடம்பே குறையமாட்டீங்குது இந்திரா, இத்தனைக்கும் ரைஸே நான் எடுத்துக்குறதில்ல தெரியுமா? யூட்யூப்ல ஒரே வாரத்துல குறையும்னு சொல்றதெல்லாம் பொய் போல, ப்ச்...”‘‘ரைஸ் எடுத்துக்குறதில்லனா அப்புறம் என்னதான் சாப்பிடுறீங்க?”

‘‘பழங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ், காய்கறி மட்டும்தான்
எடுத்துக்குறேன். அப்டியும் குறையமாட்டீங்குது...”
‘‘ஹூம்... உங்க மெனு டைமிங் சொல்லுங்க பாப்போம்...”

‘‘காலேல ஆறு மணிக்கு ஊற வச்ச பாசிப்பயறு ஒரு பவுல். ஏழு மணிக்கு ஒரு க்ளாஸ் க்ரீன் டீ. எட்டு மணிக்கு மூணு இட்லி அல்லது ரெண்டு சப்பாத்தி. அதோட பத்து பாதாம். பத்தரை மணிக்கு ஒரு ஆப்பிள் அல்லது ஆரஞ்சு, அதோட ஒரு க்ளாஸ் பால். பன்னெண்டு மணிக்கு மாதுளை ஜூஸ். ஒன்ணரை மணிக்கு ரெண்டு சப்பாத்தி, பயறு, காய் ஏதாவது, ஒரு க்ளாஸ் மோர். மூணு மணிக்கு லெமன் ஜூஸ். அஞ்சு மணிக்கு ஃப்ரூட் சாலட். ஈவ்னிங் ஆறரை மணிக்கு க்ரீன் டீ. எட்டு மணிக்கு ரெண்டு தோசை, ரெண்டு வாழைப்பழம். நைட் ஒன்பதரைக்கு ஒரு க்ளாஸ் பால். ஆனா, மறந்தும் கூட ரைஸ் எடுத்துக்குறதில்ல. அதுல ரொம்ப உறுதியா இருக்கேன்.

ப்ச், உடம்பு மட்டும் குறையவே மாட்டீங்குது...’’
‘‘நடுவுல டைமிங் மிஸ்ஸாகுதே?’’
‘‘அதுல கொஞ்சம் தூங்குவேன்...’’
# ஒரு கை சாதத்தை சாப்பிட்டோமா, வேலையைப் பார்த்தோமானு இருக்குறவனுக கம்முனு திரியுறானுக... டயட்டுங்குற பேர்ல இதுக பண்ற அட்ராசிட்டி இருக்கே...

@Mahaan Dubukku - ஐரோப்பிய, அமெரிக்க தக்காளி சூப்பிற்கும் இந்திய தக்காளி சூப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இரண்டுமே மிகப் பிடிக்கும் எனக்கு. இந்திய தக்காளி சூப்பில் ஒரு ஃப்ளேவர் இருக்கும் - அது என் சென்னை நாட்களுக்கு இழுத்துச் செல்லும் என்பதால் மிகப் பிரியம். வந்ததிலிருந்து பக்கத்து ரெஸ்டாரண்ட்டில் குடித்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் நாள் ஒன் பை டூ  சொன்னோம். அடுத்த நாள் தனியாய் குடித்தால் அதே ஒன் பை டூ அளவே பவுலிலேயே  கொடுத்தார்கள். ஆனால், அதே முழுக் காசு.  சிரித்துக் கொண்டே வெயிட்டரிடம் கேட்டால் ‘அப்படித்தான் பண்ணுறாங்க சார்’ என்றார்.முந்தாநாள் தனியே போக வேண்டியிருந்தது. இந்த தரம் நானே ஒன் பை டூ என்று ஆர்டர் கொடுத்து ரெண்டு பவுலையும் குடித்துவிட்டேன்!Foodie என்றோர் இனமுண்டு... அல்பமாய் அவர்களுக்கோர் குணமுண்டு!

@pachaiperumal23 - குழந்தைக்கு தலை நின்னுருச்சா என்பதில் துவங்கும் வாழ்க்கை... பெருசு தலைய போட்டுருச்சா என்பதில் முடிகிறது.

@Kayal82973707 - கோபத்தில் கொட்டி விட்ட வார்த்தைகள்... மன்னிக்கப்பட்டபோதும் சமயங்களில் உயிர் கொண்டு விடுகிறது...

@Ramanujam Govindan - காய்கறிக் கடையில் -
‘‘என்ன வாங்கப் போறீங்க சார்?’’
‘‘வீட்ல போய் திட்டுதான் வாங்கப் போறேன். நீங்களே எதாவது காயை எடுத்து போடுங்க..!’’

@Karthikeyan Maddy - 7:40 ரயிலுக்கு... 7:20க்கே ஸ்டேஷன் வந்துட்டோமேன்னு சந்தோசமா வண்டில ஏறுனா... ரொம்ப நேரமா லைட்ட போடல.என்ன 7:42 ஆகியும் இன்னும் வண்டிய எடுக்கலன்னு பாத்தா... நா ஏறவேண்டிய வண்டி ஏழாவது பிளாட்ஃபார்ம். நா ஏறி ஒக்காந்துருக்குற வண்டி ஆறாவது பிளாட்ஃபார்ம்.இத கண்டுபுடிச்சி சைட்ல திரும்பி பாக்குறப்போ... நா போகவேண்டிய வண்டியோட கடைசி பெட்டி க்ராஸ் பண்ணி போய்ட்டுருக்கு...சரி போயி பஸ்ஸ புடிப்போம்னு ஆட்டோவ புக் பண்ணி பாதி வழில போயிட்டு இருக்கும்போது ஞாபகம் வருது ட்ரெயின் சீட்லயே ஒரு டப்பாவ வெச்சிட்டு எறங்கிருக்கேன்னு.

ஆட்டோவ திருப்பி ஸ்டேஷன் போயி 3 நிமிசத்துல கிளம்ப இருந்த அந்த ரயில்ல ஏறி வெச்ச எடத்துலயே இருந்த டப்பாவ எடுத்துட்டு இறங்கி ஆட்டோவ புடிச்சி பஸ்ஸ புக் பண்ணி ஏறி படுத்தா... எலிசெத்த நாத்தம்..! என்னான்னு பாத்தா பக்கத்து சீட்டு பய சாக்ஸை கழட்டிட்டு படுத்துருக்கான் சார்...

@Vinayaga Murugan - இப்பவெல்லாம் வித்தியாசமா எதையாச்சும் செஞ்சா ஜனங்க என்னன்னு கூட கேட்காம அதை வாங்கிட்டுப் போறாங்க. என்ன, முதலில் அதை இரண்டு மூன்று பேர் வைத்து பிரபலப்படுத்தணும். அப்புறம் கண்ணைமூடி வாங்கிட்டுப்போவாங்க.

ஒரு படத்துல எஸ்.வி.சேகர்ன்னு நினைக்கறேன். பீச் மணலை பொட்டலம் கட்டி விப்பார். என்ன ஏதுன்னே தெரியாம அதை வரிசையில் நின்னு வாங்கிட்டு
போவாங்க. இப்ப பல உணவகங்கள் வித்தியாசமா மூங்கில் குழாய்க்குள் பிரியாணியை போட்டுக் கொடுக்கறது, பனைமட்டையில் சோத்தை போட்டுக் கொடுக்கிறதுன்னு வித்தியாசமா செய்ய... நம்மாட்கள் அதையும் பிரபலமாக்க இந்த யூடியூப் உணவு சேனல்கள் அதை எல்லாம் வீடியோவா போட்டுக் குவிக்கிறாங்க. 2G காலத்தில் எல்லாருக்கும் இந்த டேட்டாபேக் வரைமுறை இருந்தவரை சுந்தரி அக்கா கடை மட்டும்தான் பிரசித்தம். இப்ப தெருவுக்கு பத்து சுந்தரி அக்கா
கடைங்க.

@Itz_hafsha_ - எதிர்த்துப் பேசக் கற்றுக்கொள்‌... இல்லையெனில் உன்னிடம் இருக்கும் நியாயம் உன்னோடே இறந்துவிடும்.

@Aruna Raj - பிரித்துவிட தையலே இல்லாத போதுதான் பருத்துவிட்டதின் வீரியம் புரிகிறது.

@FareethS - என்னய்யா இது... ஒரு தோசைக்கு 40 ரூவா பில் போட்டுட்டு இன்னொரு தோசைக்கு 50 ரூவா பில் போட்டுருக்க?
முதல்ல சாப்ட்ட தோச பழைய சிலிண்டர்ல சுட்டது சார்...

@sankariofficial - திறந்திருந்தால்தானே வருகையும் மகிழ்ச்சியும்... இல்லக் கதவு மட்டுமன்று; உள்ளக்கதவும் கூட.

@Kozhiyaar - இந்தியா பார்டர் அளவுக்கு பார்டர் வச்ச புடவை காமிச்சாலும், ‘இன்னும் அகலமா பார்டர் வச்ச புடவை காமிங்க’ன்னு சொல்வாங்க!