களிமண் கோப்பை பீட்சா!



குலாத் தேநீர் என்று களிமண் கோப்பையில் விநியோகிக்கப்படும் தேநீர் வெகு பிரபலம். இப்போது பீட்சாவையும் களிமண் கோப்பையில் வைத்து விற்கத் தொடங்கியிருக்கிறார் சூரத்வாசி ஒருவர்.
குஜராத்தின் சூரத் நகரில் அமைந்துள்ளது அடஜன் எனும் ஊர். அங்கே சாலையோரத்தில் துரித உணவுகளை விற்றுவந்தார் இளைஞர் ஒருவர். கொரோனா காலத்தில் சரியாக வியாபாரம் இல்லை. அதனால் வித்தியாசமாக ஏதாவது செய்தால் வியாபாரத்தைப் பெருக்கலாம் என்று பலரிடம் ஆலோசனைகளைப் பெற்றிருக்கிறார். உடனே களிமண் கோப்பையில் பீட்சா சமைக்கும் பரிசோதனையில் இறங்கிவிட்டார்.

பீட்சாவுக்கான ரொட்டி, வறுக்கப்பட்ட மக்காச்சோளம், பன்னீர், வெட்டப்பட்ட தக்காளி உட்பட அனைத்து மூலப்பொருட்களையும் களிமண் கோப்பைக்குள் போட்டுக் கிண்டினால் புதுவகையான பீட்சா ரெடி. இதைக் கேள்விப்பட்ட யூடியூபர் ஒருவர் சூரத் நகருக்கு விசிட் அடித்து களிமண் கோப்பை பீட்சா சமைப்பதை வீடியோவாக்கி தனது பக்கத்தில் தட்டிவிட்டார். ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் பார்த்து வைரலாகிவிட்டது அந்த பீட்சா.

சக்தி